கொல்லிமலையில் கோடை விழா நடத்தப்படுமா?


கொல்லிமலையில் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் கொல்லிமலைக்கு சிறப்பிடம் உள்ளது. மூலிகை வளம் நிறைந்த மலை என்பதே இதற்கு காரணமாகும். நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மூன்று மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலைக்கு ஆண்டுதோறும் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கொல்லிமலையில் காண்பதற்கு அரிதான பல்வேறு இடங்கள் உள்ளன. இதில் குறிப்பிடத்தக்கது ஆகாய கங்கை நீர் வீழ்ச்சியாகும். ஏறத்தாழ 160 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் விழும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியை, கீழிருந்து பார்க்கும்போது ஆகாயத்தைப் பிளந்து கொண்டு தண்ணீர் கொட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இதனால், ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி என்றழைக்கப்படுகிறது.

இந்த நீர் வீழ்ச்சிக்கு 1,050 படிக்கட்டுகள் வழியே இறங்கிச் செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பலவிதமான மகிழ்வூட்டும் 'திகில்’ அனுபவங்கள் ஏற்படும். ஏனெனில், அருவிக்குச் செல்லும் படிக்கட்டுகள் சில இடங்களில் பெரிய பாறையின் அடியில் செல்வதே இந்த திகில் அனுபவத்திற்கான காரணமாகும்.

இந்த அருவிக்கு செல்ல முடியாத சுற்றுலாப் பயணிகள் அரப்பளீஸ்வரர் கோயில் அருகே உள்ள சிறிய அருவி மற்றும் மலையின் வெவ்வேறு இடங்களில் உள்ள நம் அருவி, மாசிலா அருவி ஆகியவற்றிற்கு வந்து செல்கின்றனர்.

இதுபோல் மலையில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, வாசலுார்பட்டி படகு இல்லம், சீக்குப்பாறை என மலையில் பல இடங்கள் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன. மலையின் மறுபுறம் திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட புளியஞ்சோலை மலையின் மற்றொரு புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலம் உள்ளது. அங்கு அருவி, ஆறு மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன. இவைத்தவிர கொல்லிமலைச் சாலையில் வாகனத்தில் பயணிப்பதும் சுற்றுலாப் பயணிகளுக்கு அலாதியான அனுபவத்தை ஏற்படுத்தும். மற்ற கோடை வாசஸ்தலங்களை ஒப்பிடுகையில் உயரம் குறைவான மலை என்ற போதிலும், மலையின் அடிவாரம் தொடங்கி உச்சி வரை 70 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதுபோன்ற அதிக எண்ணிக்கையிலான கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலை தமிழகத்தின் வேறெங்கும் இல்லை.

இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் கொல்லிமலைக்கு இருந்தபோதும் ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போல் கோடை விழா இங்கு நடத்தப்படுவதில்லை என்ற ஏக்கம் சுற்றுலா ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. கோடை விழா நடத்தினால் மலைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதுடன், மலையின் சிறப்புகள் மேலும் பலரைச் சென்றடைய வாய்ப்புள்ளது.

அதேவேளையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தால் அங்குள்ள மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் வணிக ரீதியாக உயரும். கொல்லிமலையில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான ஆடி மாதம் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த ஓரி மன்னனுக்கு இரு தினங்கள் அரசு சார்பில் விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவிற்கு கொல்லிமலை சுற்றுவட்டார மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட மக்கள் மட்டுமே வருகின்றனர்.

சீஸன் இல்லாத சமயம் என்பதால் விழாவில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கலந்து கொள்ள இயலுவதில்லை. அதேவேளையில் மே மாதம் போன்ற கோடை காலத்தில் கோடை விழா நடத்தப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவார்கள் என சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் கொல்லிமலை மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்த அறிவிப்பு நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையின்போது வெளியாகும் என சுற்றுலா ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.ஏனெனில், சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தனின் சொந்த மாவட்டம் என்பதால் இந்த அறிவிப்பை சுற்றுலா ஆர்வலர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, எதிர்காலத்தில் கொல்லிமலையில் கோடை விழா நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

x