நோய் தீர்க்கும் சோலைவனமாக மாறிய தோப்பூர் மருத்துவமனை!


மதுரை: மதுரை அருகே தோப்பூரில் கடந்த 1960-ம் ஆண்டு பிப் 12-ம் தேதி அன்றைய முதல்வர் காமராசரால் அரசு காசநோய் மற்றும் பிற தொற்று நோய்களுக்காக பிரத்யேக நெஞ்சக நோய் மருத்துவமனை திறக்கப்பட்டது.

தொலை நோக்குப் பார்வையுடன் இந்த மருத்துவமனை 115 ஏக்கரில் பரந்து விரிந்து அமைக்கப்பட்டது. காச நோயாளிகள், பிற தொற்று நோயாளிகள் நோய் முற்றிய நிலையில் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாத நிலையில் கைவிடப்பட்டவர்களாக உறவினர்களால் இந்த மருத்துவமனையில் கொண்டு வந்துவிடப்படுவார்கள். காலப்போக்கில் போதிய பராமரிப்பு, உரிய கவனம் இந்த மருத்துவமனைக்கு கொடுக்கப்படாததால் காசநோயாளிகளே சிகிச்சைக்கு வர அச்சமடைந்தனர்.

அந்தளவுக்கு, இந்த மருத்துவமனை வளாகம் தூய்மையற்ற சூழலால் புதர் மண்டிக் கிடந்தது. பழுதடைந்த கட்டிடங்கள், துர்நாற்றம் வீசும் வார்டுகள், பழைய படுக்கைகள், மது பாட்டில் குவியல்கள், கறை படிந்த தரைகள் போன்ற காட்சிகள்தான் இந்த மருத்துவமனையின் அவல நிலையாக இருந்தது. இது தவிர, காச நோய்க்கான சிகிச்சையும், நோயாளிகள் கவனிப்பும் குறைவாக இருந்தது. அதனால், காச நோயாளிகளாலும், உள்ளூர் மக்களாலும் புறக்கணிக்கப்பட்ட காட்டாஸ் பத்திரியாக இந்த மருத்துவமனை அழைக்கப்பட்டது.

இங்கு பணிமாறுதலாகி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், தண்டனைப் பணியாகவே கனத்த மனதுடன் விருப்பமில்லாமல் வந்து பணிபுரிவார்கள். 2013-ம் ஆண்டு மருத்துவர் காந்திமதி நாதன் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, இந்த மருத்துவமனையின் முகம் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு மாறத் தொடங்கியது.

நாட்டின் முதன்மை மருத்துவனையாகத் திகழும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கே இங்கு நிர்வாக அலுவலகம் அமையும் அளவுக்கு இந்த மருத்துவமனை மாறி உள்ளது. நந்தவனம் போல் திரும்பிய பக்கமெல்லாம் பசுமைப் புல்வெளிகள், சூரிய வெளிச்சமே படாத அளவுக்கு அடர்த்தியான நிழல் தரும் மரங்கள் உள்ளன.

உடன் பணிபுரியும் பணியாளர்களுடன் மருத்துவர் காந்திமதி நாதன்.

காசநோய் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டு இன்வெர்ட்டர்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், எஃப்எம் ரேடியோ வசதி, நூலகம், பொழுதுபோக்குமிடம், சதுரங்கம், கேரம் பலகை, இறகுப்பந்து, பேட்மின்டன் விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்குவதற்கு டி.வி, நடைப்பயிற்சி பூங்கா, தியாகன மையம், யோகா அறை, ஹைடெக் முடி திருத்தகம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வப்போது சொற்பொழிவாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், அழைத்து வரப்பட்டு நோயாளிகள் கருத்தரங்குகள், கவுன்சலிங் வழங்கப்படுகின்றன. சிகிச்சைபெறும் ஒவ்வொரு நோயாளிகளின் பெயரைச் சொல்லி அழைக்கும் அளவுக்கு மருத்துவர் காந்திமதி நாதன் நோயாளிகளின் மீது கவனம் செலுத்துகிறார். மேலும், மருத்துவமனையை தனது வீடு போலவும், நோயாளிகளை தங்கள் குடும்ப உறுப்பினர்கள் போலவும் நேசிக்கின்றார்.

ஒரு காலத்தில் இந்த மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய காச நோயாளிகள், தற்போது இந்த மருத்துவமனை வசதியாகவும், வீட்டில் இருக்கும் உணர்வை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்கள். மருத்துவர் காந்திமதிநாதனின் அர்ப்பணிப்பு மிக்க பணியால், பாலைவனம் போல் காணப்பட்ட தோப்பூர் காசநோய் மருத்துவமனை தற்போது அதி நவீன மருத்துவ வசதிகளுடன் தமிழகத்தின் தலைசிறந்த நெஞ்சக மருத்துவ மனையாக முற்றிலும் சோலைவனமாக காட்சியளிக்கிறது.

சுற்றுச்சூழல் மட்டுமல்ல, மருத்துவமனையில் கிடைக்கும் வசதிகளும், சிகிச்சைகளும் மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளைவிடவும் ஒப்பிடமுடியாத அளவுக்கு சிறப்பாக உள்ளதாக சிகிச்சை பெற்றுத் திரும்பும் நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

விடைபெறுகிறார் காந்திமதி நாதன்- அரசு மருத்துவமனைக்கு இந்தப் பெருமைகளைப் பெற்றுத்தந்ததோடு நோயாளிகளின் காப்பாளராகத் திகழும் மருத்துவர் காந்திமதி நாதன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பிறகு அவரைப்போல் இந்த மருத்துவமனையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வருவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஓய்வு பெறும் மருத்துவர் காந்திமதி நாதனுக்கு, வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டு விழா எடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள், மருத்துவர் காந்திமதி நாதன் விடைபெறுவதைத் தாங்க முடியாமல் விழாவில் கண்கலங்கினர் ஏற்புரை வழங்கிய காந்திமதி நாதனும் தொடர்ந்து பேச முடியாமல் கண்கலங்கி அமர்ந்தார். ஒரு மருத்துவருக்கு மருத்துவமனையைத் தாண்டி வெளியே இருந்து பொதுமக்கள் பாராட்டு நடத்துவது புதுமையாக இருந்தது.

பணி ஓய்வு பாராட்டு விழாவில், காந்திமதி நாதனை பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டது. வேகமாகச் சுழலும் தன்னலம் மிக்க உலகில் மனிதநேயம் இன்னும் மரணிக்கவில்லை என்பதற்கு நிகழ்கால உதாரணமாக தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களும், அதன் நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் காந்திமதி நாதனும் உள்ளனர்.

வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாமிதுரை, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் மருத்துவர் செந்தில், முன்னாள் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியன், காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சண்முகய்யா, பேராசிரியர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x