சிறகை விரி உலகை அறி-48: மரணக் குடில்


ஆஸ்விட்ச்

வாழ்ந்தோரையும் வாழ்வோரையும் இணைக்கும் உறவுக்கொடி நினைவுச்சின்னங்கள். தூண்களாக, கல்லறைகளாக, மணிமண்டபங்களாக, வளைவுகளாக நின்று காலத்துடன் அவைகள் பேசுகின்றன. ஆஸ்விட்ச்சில் கொல்லப்பட்டவர்களோ கற்களில், கம்பிகளில், இலைகளில், கிளைகளில், மண்ணில், மணலில், காற்றில், புதைந்த சருகுகளில், முகிழ்த்த மொட்டுகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

ஹெய்ன்ரிச் ஹிம்லர்

கட்டிடம் 10-ல் மூடப்பட்டுள்ள ஜன்னல்கள்...

வரலாறு சுமக்கும் வழிகாட்டி

கட்டிடப் பிரிவு 11-லிருந்து வெளியேறி, வந்த வழியிலேயே திரும்பியபோது, கட்டிடப் பிரிவு 10-ன் ஜன்னல்களைப் பார்த்தேன். பலகையால் மறைக்கப்பட்டு கறுப்பு வண்ணம் பூசப்பட்டிருந்தது. “கருவுற இயலாமல் செய்யும் பரிசோதனைக்காக அடைக்கப்பட்டிருந்த பெண்கள், மரணச் சுவரில் கைதிகள் கொல்லப்படுவதைப் பார்க்கக்கூடாது என்பதற்காக ஜன்னல்களைப் பலகைகளால் அடைத்து வைத்திருந்தார்கள்” என்றார் வழிகாட்டி. மனிதத்தன்மையற்ற இப்பரிசோதனைகளைச் செய்த, மருத்துவர் கார்ல் கிளாபர்க், 1943, ஜுன் 7-ல் ஹெய்ன்ரிச் ஹிம்லருக்கு எழுதிய கடிதத்தையும் வழிகாட்டி நினைவூட்டினார்.

பெண்கள் மீது மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்ட கட்டிடம்

அக்கடிதத்தில், ’இதுவரை நடந்ததுபோல, என் பரிசோதனை தொடர்ந்து நடந்ததென்றால் – அப்படி நடக்காமல் போவதற்கான காரணங்கள் எதுவுமே இல்லை - சரியான வசதிகள் உள்ள அலுவலகத்தில், சரியாக 10 உதவியாளர்களுடன் இருக்கும், முறைப்படி பயிற்சிபெற்ற மருத்துவரால் ஒரு நாளைக்கு ஏறக்குறைய நூற்றுக்கணக்கான அல்லது ஏன், ஓராயிரம்பேரைக்கூட கருவுறவே இயலாமல் செய்ய முடியும் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல எங்களுக்கு அதிக நாட்கள் எடுக்காது’ என்றிருந்தது.

முதல் விஷவாயு அறையில் எரியுலை

மற்றொரு கட்டிடத்துக்கு முன்பாக இருந்த படங்களைச் சுட்டிக்காட்டி, “19, 20, 21 மற்றும் 28-ம் கட்டிடப் பிரிவுகள் நோயுற்ற கைதிகளின் மருத்துவமனைகளாக செயல்பட்டன. எரியுலையில் வேகும் முன்பாக ‘காத்திருக்கும் அறை’ என்று கைதிகள் இதைச் சொன்னார்கள். குறைவான மருந்து மற்றும் மருத்துவ வசதிகளாலும், பரிசோதனை முயற்சிக்காக நாஜி மருத்துவர்கள் செலுத்திய மருந்தின் எதிர்வினையாலும் பலரும் இறந்தனர். நிரந்தர நோயாளிகளானார்கள் பலர். கொலை செய்வதற்காகத் தேடப்படும் கைதிகளை மறைத்துவைத்துக் காப்பாற்றும் இடமாகவும் சில வேளைகளில் மருத்துவமனை பயன்பட்டுள்ளது” என்றார்.

தொடர்ந்து நடந்தபோது, “முகாமின் மையத்தில் கைதிகள் நிற்க வேண்டும். எத்தனை கைதிகள் இருக்கிறார்கள் என்பதை நாஜி அதிகாரி கணக்கெடுப்பார். ஆட்கள் காணாமல் போனதாகவோ, எண்ணிக்கை குறைவதாகவோ நினைத்தாரென்றால், அவர் திருப்தி அடையும்வரை கைதிகள் அப்படியே நிற்க வேண்டும். வெயிலோ, மழையோ, குளிரோ அவருக்கு அதெல்லாம் பொருட்டல்ல. சிலவேளைகளில், 12 மணி நேரம்கூட கைதிகள் நின்றுள்ளார்கள்.

வேலைக்குச் செல்லாமல் எதிர்த்தவர்களும் உண்டு. அவர்களை நிர்வாணமாக்கி உறையும் குளிரில் நாஜிக்கள் நிற்க வைத்தனர். நடுங்கும் உடலில் குளிர்ந்த நீரை ஊற்றினர். பலர் உறைந்து செத்தனர். அக்டோபர் 1941 - மார்ச் 1942 வரையிலான ஐந்து மாதத்தில் மட்டும் 9 ஆயிரம் பேர் இவ்வாறு கொல்லப்பட்டனர்.

கெஸ்டாபோ முகாம் இருந்த இடத்தில் தூக்குமேடை

கைதிகளுக்கு அச்சமூட்ட வேண்டும் என்பதற்காக பொது இடத்தில் தூக்கிலிடவும் செய்தார்கள். அதோ, அந்த இடத்தில்தான், ஜெர்மனியின் ரகசியக் காவல் படையான கெஸ்டாபோ (Gestapo) முகாம் இருந்தது. வதைமுகாமில் செயல்பட்ட, ரகசிய இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாக சந்தேகிக்கப்பட்டவர்களையும், முகாமிலிருந்து தப்பிக்க முயன்றவர்களையும் இந்த இடத்தில் விசாரித்தார்கள். தாங்கொண்ணா சித்திரவதையால் எண்ணற்ற கைதிகள் இறந்தார்கள். மற்றவர்கள் இந்தத் தூக்கு மேடையில்தான் தூக்கிலிடப்பட்டார்கள்.

ஆஸ்விட்ச் முகாமின் முதல் தளபதியாக இருந்த, ருடால்ப் ஹோஸ் போர் முடிந்த பிறகு போலந்து தேசிய நீதி தீர்ப்பாயத்தால் விசாரிக்கப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த இடத்தில்தான் 1947 ஏப்ரல் 16-ல் தூக்கிலிடப்பட்டார்” என்றார் வழிகாட்டி.

முதல் விஷவாயு அறையும் எரியுலையும்...

முதல் விஷவாயு அறை

போர் தொடங்குவதற்கு முன்பு ஆயுதக் கிடங்காக இருந்த பெரிய அறைக்குள் சென்றோம். போரின்போது, ஆகஸ்ட் 15, 1940 முதல் ஜுலை 1943 வரை பிணம் எரிக்கும் இடமாக அதிகாரிகள் இவ்விடத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். 1941 இலையுதிர் காலத்தின்போது, பிணவறையாக மாற்றினார்கள். பிறகு, விஷவாயு அறையாக மாற்றப்பட்டது. ஆஸ்விட்ச்சில் உருவான முதல் விஷவாயு அறை இதுதான். மிக நவீன மற்றும் பல்வேறு வசதிகள் நிறைந்த எரியுலைகள் பிர்கேனு (Birkenau) முகாமில் அமைக்கப்பட்டவுடன், 1942-ம் ஆண்டின் இளவேனில் மற்றும் கோடை காலத்துக்குப் பிறகு, விஷவாயு செலுத்துவது இக்கட்டிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டது. 1943-ல் மொத்தமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, எரியூட்டிகளையும், புகைக்கூண்டுகளையும், சில சுவர்களையும் அகற்றினார்கள். விஷவாயு உருண்டைகள் போடப்பட்ட ஓட்டைகளை அடைத்தார்கள். பொருள் வைக்கும் கிட்டங்கியாகப் பயன்படுத்தினர்.

மீளுருவாக்கம்

நாங்கள் உள்ளே சென்றோம். அலுவலகம், கைதிகள் தங்கள் ஆடைகளைக் கழற்றிய அறை, விஷவாயு அறை, பிணவறை, எரியூட்டி அறை, புகைக்கூண்டு, எரியூட்டிக்குத் தேவையான எரிபொருள் அறை, எரியூட்டப்பட்ட பிறகு சாம்பல்களை குடுவையில் நிரப்பி வைத்திருந்த இடம் அனைத்தையும் பார்த்தேன்.

போருக்குப் பிறகு, இந்த அறையை புனரமைத்த அருங்காட்சியகக் குழுவினர், புகைக்கூண்டு மற்றும் இரண்டு எரியூட்டிகளை ஆரம்பத்தில் இருந்த அசல் பொருட்களாலேயே மறுபடியும் நிறுவி, கூரையில் பல திறப்புகளை உருவாக்கி மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். பிணங்கள் எரிந்த உலையின் மேற்பரப்பில், பயணிகள் வைத்துச் சென்ற பூக்களும், மெழுகுதிரிகளும் இருந்தன. “கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், நவம்பர் 2-ம் தேதி அனுசரிக்கும் அனைத்து இறந்தோர் நினைவு நாளில் எண்ணற்ற உறவினர்கள் இங்கு வந்து மெழுகுதிரிகள் ஏற்றி அஞ்சலி செய்வார்கள்” என்றார் வழிகாட்டி.

கலகக்குரல்

கைதிகளாக்கப்பட்ட பல ஆயிரம் பெண்களில், எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களும் இருந்தார்கள். உதாணமாக, 1943-அக்டோபரில் பெர்கன்-பெல்சென் முகாமிலிருந்து பெண்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆடை மாற்றிக்கொண்டிருக்கும்போது, இது விஷவாயு அறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கான முன்னேற்பாடு, நமக்கு இறப்பு காத்திருக்கிறது என்பதை ஒரு பெண் எப்படியோ அறிந்துகொண்டார். அதிகாரி ஜோசப் ஷெலிங்கரின் துப்பாக்கியைப் பறித்த அப்பெண், ஷெலிங்கரை பலமுறை சுட்டார். மற்றொரு அதிகாரியையும் சுட்டார். இதன் வழியாக ஆபத்தை அறிந்துகொண்ட மற்ற பெண்களும் அங்கே நின்ற அதிகாரிகளைத் தள்ளி கும்மி எடுத்தனர். புரட்சி ஒடுக்கப்பட்டது. அனைத்து பெண்களும் கொல்லப்பட்டனர். ஆனாலும், வெற்றியோடு மடிந்தார்கள்.

ஒளிக்கீற்றுகள்

கைதிகள் தங்களுக்குள் இணக்கமாக இருந்ததையும் வழிகாட்டி குறிப்பிட்டார். சிறுசிறு கனிவான செயல்கள், நட்பான வார்த்தைகள், ஆபத்து குறித்த எச்சரிக்கை, காயங்களில் மருந்திடுவது, துன்புறுகிறவருக்கு தண்ணீர் அளிப்பது, தனக்குக் கிடைத்த சிறு உணவையும் அடுத்தவருடன் பகிர்வது என ஒருவருக்கொருவர் உதவியுள்ளார்கள். மேலும், சக கைதிக்காக கிட்டங்கியில் இருந்து மருந்து மற்றும் உணவுகளைத் திருடுவது, தப்பிக்க உதவுவது, விஷவாயு அறைக்குச் செல்லவிடாமல் மறைத்து வைப்பது, அல்லது முகாம் குறிப்புகளில் சில திருத்தங்கள் செய்து சாகவிடாமல் காப்பது போன்ற உதவிகளை மிகுந்த சவாலுக்கு மத்தியில் வழங்கியுள்ளார்கள். உதாரணமாக, 1943-இல் முகாமில் உள்ள மருத்துவமனையில் ஜெர்மன் யூதர் பெனடிக்ட் காட்ஸ்கி சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, விஷவாயு அறைக்கு கொண்டுசெல்வதற்கான நபர்களைத் தேர்வு செய்வது நடந்தது. உடனே, ஆஸ்திரிய யூதர் குஸ்டாவ் ஹெர்ஷோக் சில பொய்களைச் சொல்லி காட்ஸ்கியைக் காப்பாற்றினார். அதேபோல, 12 வயது இத்தாலி சிறுவன் லூய்ஜி ஃபெரியை, கட்டில்களின் அடியில் மறைத்து வைத்து பலர் காப்பாற்றினார்கள். சிறுவனைக் காப்பாற்றுவதில், வியன்னா மருத்துவர் ஒட்டோ வால்கென் என்பவரும் உறுதுணையாக இருந்துள்ளார்.

கிரீஸ் மற்றும் போலந்து நாட்டு யூதப் பெண்கள், தங்கள் சமய வழக்கப்படி, நோன்பு இருந்தபோது, குவளையில் காலையில் வைத்த சூப் மாலைவரை அப்படியே சுவர் பக்கத்தில் இருந்தது. கடுமையான பசியுடனும், பட்டினியுடனும் இருந்தாலும் கைதிகள் யாருமே அதை எடுத்து சாப்பிடவில்லை. கைதிகளை மேற்பார்வை செய்த இஷா, “கிறிஸ்தவ சிறைக் கைதிகளான நாங்கள், எங்கள் யூத சகோதரிகள் விரைவில் விடுதலை பெற்று செல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம். இதனால், எதிர்கால விடுமுறையை அவர்களின் குடும்பத்தினருடன் அவர்களால் கொண்டாட முடியும்” என்று சொன்னதை அங்கிருந்த பலகையில் வாசித்தேன்.

கைதிகள் அவர்களுக்குள் ரகசியமாக, ‘சிறை அரசாங்கம்’ நடத்தியுள்ளனர். குற்றம் செய்து சிறைத்தண்டனைப் பெற்றவர்களை, கைதிகளின் தலைவர்களாக நாஜிக்கள் நியமித்தபோது, ‘தலைவர்களை’ அகற்றி, நல்லவரை தலைவராகக் கொண்டுவரவும், அரசின் சார்பாக வேவு பார்க்கிறவர்களைஅ டையாளம் காணவும் ‘சிறை அரசாங்கம்’ உதவியுள்ளது.

தகவல்களின் கனத்துடன் தொடர்ந்து நடந்தேன்.

(பாதை விரியும்)

பாக்ஸ்

நம்பிக்கை இரத்தம்

கைதிகள் பலர், வதைமுகாமில் தாங்கள் அனுபவித்த சித்ரவதைகளை ஓவியங்களாக, பத்திகளாக, கவிதை மற்றும் பாடல்களாக வரைந்தும் எழுதியும் புதைத்து வைத்தார்கள். அப்படியான ஒரு குறிப்பில், “நாட்கள் ஆக ஆக ஜெபிக்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடவுள் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து ஜெபிக்கத் தொடங்கினர். ஒரு யூதர், ஆறுதலின் இறகைப் பற்றிக்கொண்டு, இன்றைய நாளைவிட நாளைய நாள் மிகவும் அழகானதாக இருக்கும் என உறுதியாக நம்பினார். இன்றைய நாளை மறந்துவிட்டு, ஏற்கெனவே நாளைய தினத்தில் வாழ ஆரம்பித்திருந்தார். அவரின் இரத்ததில் செலுத்தப்பட்ட புதிய நம்பிக்கை அவரை திடப்படுத்தியது” என குறிப்பிட்டுள்ளார் ஷால்மன் குராட்ஸ்கி எனும் போலந்து நாட்டு யூத கைதி. “படைப்பாற்றல், வாழ்வின் அர்த்தத்தைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி” என்று விக்டர் பிராங்கிள் குறிப்பிட்டது இத்தகைய அனுபவங்களினால்தான்.

x