மதுரை வைகை ஆற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுப்பணித் துறை வேடிக்கை பார்க்கிறதா?


மதுரை: மதுரை வைகை ஆற்றில் அடிக்கடி குப்பைகளை போட்டு தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் சுற்றுச் சூழல் மாசுபபடுவதால் ஆற்றை பாதுகாக்க வேண்டிய பொதுப் பணித்துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மதுரை வைகை ஆற்றில் கடந்த காலத்தில் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. தற்போது மழை பெய்யும் போதும், வைகை அணையில் தண்ணீர் திறந்துவிடப்படும் போதும் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற நாட்களில் வைகை ஆறு வறண்டு போய் கிடக்கிறது. மாநகராட்சி கழிவுநீர், ஆற்றில் ஆங்காங்கே சிறு ஓடைபோல் ஓடுகிறது. ஆற்றின் வழித்தடங்களில் கருவேலம் மரங்கள், ஆகாயத் தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. ஆற்றைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும் தனியார் நிறுவனத்தினரும் குப்பைகளை ஆற்றில் கொட்டு கின்றனர்.

கடந்த காலத்தில் ஆற்று மணல் முழுமையாக கொள்ளையடிக்கப்பட்டுவிட்டதால் ஆற்றின் வழித்தடங்கள் சீரான நீரோட்டப் பாதையாக இல்லாமல் ஆங்காங்கே பாதாள பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால், மதுரை வைகை ஆறு பல வகைகளில் மாசடைந்து வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதையும் மீறி இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டிச் செல்கிறார்கள்.

கடந்த சில நாட்களாக கொட்டிய குப்பைகளுக்கு தீ வைத்து விட்டுச் செல்கிறார்கள்.குப்பைகள் தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிகிறது. அதனால், வைகை ஆறு புகைமண்டலமாக காணப்படுவதால் ஆற்றின் சுற்றுச்சூழல் சீர்கேட்டு வருகிறது. வைகை ஆறு பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மாநகராட்சி, ஆற்றை பாராமரிக்க நிதி ஒதுக்குவதில்லை. பொதுப்பணித்துறையும், வைகை ஆற்றை பராமரிக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இது குறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், "குப்பைகளை பொதுமக்கள், மட்டுமில்லாது மாநகராட்சி பணியாளர்கள் கூட எரிகிறார்கள். சனிக்கிழமை தோறும் காலையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆற்றை தூய்மை செய்கிறார்கள். அவர்கள் சேகரித்த குப்பையை எடுத்துச் செல்வதில்லை. படித்துறைகள் அருகே குப்பைகளை சேகரித்து செல்லும்போது அதனை தீ வைத்து எரித்துவிட்டுச் செல்கிறார்கள்." என ராஜன் கூறினார்.