கண்ணுக்குக் கீழ கருவளையம்..!


அம்மிணி மகனார்ட்ட போய் என்னவோ கேட்டாங்க. அவர் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போய் சலிச்சுகிட்டே ஏதோ சொன்னாரு.

“போடா. இவன் எப்பவுமே இப்படித்தான்”னு என்கிட்ட வந்தாங்க. க்ளோஸ் அப்ல முகத்தைக் காட்டுனாங்க. ''என்னைய நல்லாப் பாருங்க.”

பிஜியெம்ல ஹா ஹான்னு அந்த நாள் படம் மாதிரி சவுண்டு கேட்டுச்சு. ஏதோ ஒரு அம்மன்னு சொல்லிருவாங்களோன்னு நடுங்கிகிட்டே “என்ன”ன்னு கேட்டேன்.

“ஏதாச்சும் மாற்றம் தெரியுதா”ன்னு அசையாம அதே பொசிஷன்ல நின்னாங்க. எனக்கு அவ்ளோ கிட்ட பார்த்ததுல ரெண்டு குடலும் ஒண்ணா குலாவிச்சே தவிர எந்த மாற்றமும் தெரியல. அதைச் சொன்னாலும் சிக்கல், சொல்லாம சைலண்டாவும் இருக்க முடியாது.

“நீ ஏற்கெனவே கலரு. இப்போ இன்னும் கொஞ்சம்”னு நான் பிட் போடும்போதே, “உஷ்...”னு அதட்டுனாங்க.

“என் கண்ணைப் பாருங்க”ன்னு அதட்டுனதும் உத்துப் பார்த்தேன். “ஹிஹி நான் தெரியறேன்”னு வழிஞ்சதும் “அதெல்லாம் அந்தக் காலம்”னு ஆஃப் பண்ணிட்டாங்க.

அமைதியா கேட்டேன். “கண்ணுல என்ன தூசியா”ன்னு. ஒருவேளை கேட்ராக்ட் வந்துருச்சோன்னு ஒரு யோசனை. அதை ஒரு தடவை சொல்ல, அம்மிணி உடனே எதிர் சுவர்ல மாட்டியிருந்த மன்த்லி கேலண்டரைப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

அது சரியான்னு செக் பண்ண நான் தான் காலண்டர் கிட்ட போக வேண்டியதாச்சு.

“நீயே சொல்லிரும்மா”ன்னு வழக்கம் போல சரண்டர் ஆயிட்டேன்.

கண்ணாடி முன்னாடி போய் நின்னு கண்ணை விரிச்சு பார்த்து உச்சு கொட்டுனாங்க. “ப்ச்... எப்போ வந்துச்சுன்னே தெரியல. ரெண்டு கண்ணுக்கு கீழேயும் கருவளையம்”னு தேம்புனாங்க.

நானும் தள்ளி நின்னு பார்த்தேன். எப்பவும் போலத்தான் இருந்துச்சு. “லைட்டாத்தான் இருக்கு”ன்னு சொன்னதும், “பேசாதீங்க. எ வீ அம்மிணியே சொன்னாங்க. எப்பலேர்ந்து மை வச்சுக்க ஆரம்பிச்சன்னு நக்கலா கேட்கறாங்க”ன்னு கடுப்பைக் காட்டுனாங்க.

ஓ. பிரச்சினையே எ வீ அம்மிணிதானா. “அந்தம்மிணிக்கு முகமே கருப்பாத்தானே இருக்கு”ன்னு ஆறுதலா சொல்லவும் அம்மிணி ட்ராக் மாறி என்னை முறைச்சாங்க.

“ஒங்களை யார் அவளை உத்துப் பார்க்கச் சொன்னது. பேப்பர் படிக்கிறேன்னு தெனம் வாசல்ல போய் ஒக்கார்றது இதுக்குத்தானா”ன்னு மிரட்டவும் ஆஃப் ஆகிட்டேன்.

அந்த நேரம் பார்த்து கையில் ஏதோ இலையோட எ வீ அம்மிணி வந்தாங்க. “அம்மிணி இல்லியா'ன்னு அனாவசியமா என்கிட்ட கேட்டாங்க. பதில் சொல்லாம பால்கனிப் பக்கம் ஓடிட்டேன்.

“இதை விழுதா அரைச்சு வச்சுக்க. நைட் படுக்கும்போது கண்ணுக்குக் கீழே தடவிட்டு படுத்தா பத்தே நாள்ல குணம் தெரியுமாம்”னு எ வீ அம்மிணி கத்துனது அபார்ட்மென்ட் முழுக்கக் கேட்டுச்சு.

அவங்க போயிட்டாங்கன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டு ஹாலுக்கு வந்தேன். “இவளை எவ வைத்தியம் கேட்டாங்க”ன்னு அம்மிணி புலம்புனாங்க.

“தூக்கி குப்பைல போட்டுரவா”ன்னு கேட்டேன். லபக்குன்னு எடுத்து வச்சுகிட்டாங்க. “செஞ்சுதான் பார்க்கிறேனே”ன்னு முனகிட்டு.

நைட் ஒரே நாத்தம் குடலைப் புரட்டுச்சு. ஒரு கப்ல பச்சையா ஏதோ இருந்துச்சு. “தோசைக்கு ஏதாச்சும் சட்னியா”ன்னு எடுக்கப் போனேன். “அதைத் தொடாதீங்க”ன்னு அம்மிணி கத்தவும் புரிஞ்சுது.

கண்ணுக்குக் கீழே தடவிட்டு டிவி பார்த்தாங்க. காமெடி சானல் பார்க்கும்போது ஏன் அழுவுறாங்கன்னு கேட்டா எரிச்சலா இருக்குன்னு பதில் வந்துச்சு. டிவியைச் சொல்றாங்களா கண்ணைச் சொல்றாங்களான்னு புரியல.

பத்து நிமிஷம் கூட இருக்காது. எரியுதுன்னு போய் முகத்தை வாஷ் பண்ணிட்டு வந்துட்டாங்க. “எதையோ கொடுத்து தொலைச்சுட்டா. என்னமா எரியுது”ன்னு கரிச்சுக் கொட்டுனாங்க.

காலைல பார்த்தா கண்ணு ரெண்டுக்கும் கீழே பொரிப் பொரியா அலர்ஜி. அரண்டு போய் அம்மிணி எதிர் வீட்டுக் கதவைத் தட்டுனாங்க.

“எனக்கு என்ன தெரியும். வழக்கமா கீரை கொண்டு வர அம்மா சொல்லுச்சு. நம்பிக் கொடுத்தேன்”னு எஸ்கேப் ஆகிட்டாங்க.

ஆபிஸ் போயிட்டு வந்து பார்த்தா டேபிள் மேலே ஏதேதோ க்ரீம். “இதைத் தடவு... அதைத் தடவு”ன்னு ஆளுக்காள் அம்மிணி சொந்தத்துல சொல்லி இருப்பாங்க போல.

“இவ்ளோ க்ரீமும் காலி ஆகணும்னா உனக்கு பத்து தலை இருக்கணும்”னு சமய சந்தர்ப்பம் புரியாம ஜோக் அடிச்சேன்.

“அந்த இலை மிச்சம் இருக்கு. தடவட்டுமா ஒங்க மூஞ்சில”ன்னு அம்மிணி சிரிச்சுக்கிட்டே கேட்டதும் பம்மிட்டேன்.

“ப்யூட்டி பார்லர் போனா அவங்க ஃபேஷியல் செய்வாங்களே”ன்னு கேட்டேன்.

“இது அலர்ஜி. இதுக்கு பார்லர் எதுக்கு”ன்னு திருப்பிக் கேட்டாங்க.

அம்மிணிக்கு போன் வந்துச்சு. “ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்ட போ”ன்னு சொல்லிட்டாங்க.

அம்மிணி சொல்றதுக்கு முன்னால நானே நாலஞ்சு ஃப்ரெண்ட் அண்ணாச்சிகளுக்கு போன் செஞ்சேன். டவுன்ல யார்ட்ட போவலாம்னு.

ஸ்பெஷலிஸ்ட் பேர் சொல்லாம யாருக்கு என்ன பிரச்சினைன்னு வம்பை ஆரம்பிச்சாங்க. முதல் அண்ணாச்சிட்ட அப்புராணியா முழுத் தகவலும் சொன்னதை அம்மிணி கேட்டுட்டாங்க.

அவ்வளவு தகவலையும் விசாரிச்சுட்டு அவருக்கு யாரையும் தெரியாதுன்னுட்டாரு. அடுத்த அண்ணாச்சிக்கு போன் போடுறதுக்கு முன்னாடி அம்மிணி எச்சரிச்சுட்டாங்க.

“எனக்குன்னு சொல்லாதீங்க. ஒங்க ஒறவுல ஒங்க தங்கச்சிக்குன்னு சொல்லி விசாரிங்க. புரிஞ்சுதா!”

அடுத்த போன் அடிக்கிறதுக்குள்ர எனக்கே போன் வந்துச்சு. “அம்மிணிக்கு மூஞ்சி ஊதிப் போச்சாமே. கண்ணு தெரியுதா. சாப்பிட முடியுதா. இப்பதான் நம்ம அண்ணாச்சி சொன்னாரு. ஒரே கவலையாப் போச்சு”ன்னு விசாரிச்சாரு இன்னொரு அண்ணாச்சி.

தகவல் பரிமாற்றம் என்ன வேகமாப் பரவுதுன்னு ஆச்சரியமாயிருச்சு. “போட்டோ அனுப்புங்க. எப்படி இருக்காங்கன்னு பார்க்கணும். அக்கறைல கேக்கறேன்”னு சொன்னதும் போனை கட் செஞ்சேன்.

மகனார் இவ்ளோ அமளியிலும் அசராம லேப்டாப்ல மூழ்கி இருந்தாரு. அம்மிணியும் அவரை எதுவும் சொல்லல. “அவன் எதையுமே வெளிக்காட்டிக்க மாட்டான். உள்ர உருகிட்டே இருப்பான்”னு பெருமையாத்தான் பேசுவாங்கன்னு நானும் அமைதி ஆகிட்டேன்.

அன்னிக்கு நைட் ஊரடங்கு உத்தரவு போட்டாப்ல சாப்டுட்டு படுத்துட்டோம். மறுநாள் காலைல பார்த்தா அம்மிணி சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க.

“என் செல்லம்டா. தேங்காய் எண்ணெயத் தடவுன்னு ஒரு வார்த்தைதான் சொன்னான். மூஞ்சி பழையபடி ஆயிருச்சு”ன்னு அம்மிணி மகனாரைக் கொஞ்சுனப்போ லைட்டா பொறாமையாத்தான் இருந்துச்சு!

x