போதைப் பொருள் ஒழிப்பு தினம்: ஸ்மைலி எமோஜி வடிவில் அமர்ந்து சேர்பட்டி மாணவர்கள் விழிப்புணர்வு


மாணவர்கள் விழிப்புணர்வு

திருச்சி: மணப்பாறை வட்டம் வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில், போதையை ஒழிப்போம்; புன்னகையை வளர்ப்போம் என்ற தலைப்பில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26-ம் தேதி சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலின் பேரில் வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் போதையை ஒழிப்போம் புன்னகையை வளர்ப்போம் என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு சேர்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவ - மாணவியர் 150 பேர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஸ்மைலி எமோஜி வடிவில் புன்னகை பூக்கும் உருவத்தில் அமர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில், உலக சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய போதைப் பொருட்களை எந்த வடிவத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்கக்கூடாது என்றும் வாழ்நாளில் தாங்களும் தங்களது குடும்பத்தாரும் போதைப் பொருளுக்கு எதிராக போராடுவோம் எனவும் மாணவ - மாணவியர் உறுதியேற்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் மனோன்மணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இரு பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மாணவ - மாணவியர்க்கு விழிப்புணர்வையும் உற்சாகத்தையும் தந்தன.