ஆடு வளர்ப்பு தொழிலில் அசத்தும் பி.டெக் பட்டதாரி இளைஞர்!


நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பி.டெக் பட்டதாரி இளைஞர் நவீன முறையில் பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் செய்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அரவிந்த். பி.டெக் படித்த இவர் நான்கு ஆண்டுகளுக்கு முன் 20 ஆடுகளுடன் தொழிலை தொடங்கினார். தற்போது இவரது பண்ணையில் 230 ஆடுகள் உள்ளன. இவற்றைத் தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.

இதுகுறித்து அரவிந்த் கூறுகையில்," எனக்கு சிறு வயது முதல் கால்நடை வளர்ப்பில் ஆர்வம் இருந்து வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு பி.டெக் மெக்கானிக்கல் முடித்தவுடன் பரண் மேல் ஆடு வளர்ப்பு தொழில் தொடங்க தந்தையிடம் விருப்பம் தெரிவித்தேன். அவரும் ஆதரவு தந்தார். அந்த ஆண்டு வீட்டின் அருகே இருந்த செட்டில் ஆடு வளர்ப்பை தொடங்கினேன். இத்தொழில் தொடர்பாக இணையத்தில் தேடியபோது பரண் மேல் ஆடு வளர்ப்பு, அதற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட விவரங்கள் கிடைத்தன" என்று கூறினார்.

பி.அரவிந்த்.

மேலும் அவர் கூறுகையில், " வங்கிக் கடன் உதவியுடன் ஆடு வளர்ப்புக்கு உரிய பரண் அமைத்தேன். இரும்பு, பிளாஸ்டிக் மூலம் பரண் அமைத்தால் 15 ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவில்லை. தலா 2,500 சதுர அடி இடத்தில் இரு பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 20 ஆடுகள் மட்டும் இருந்தன. தற்போது 230 ஆடுகள் உள்ளன. தென்னாப்பிரிக்காவில் இருந்து போயர் ரக ஆடுகள் இறக்குமதி செய்யப்பட்டன. அதுபோல் தலச்சேரி, சிரோகி, பிளாக் பீட்டெல் ரக ஆடுகள் உள்ளன. இதில் போயர் ரக ஆடுகள் குறைந்த மாதத்தில் அதிக எடையுடன் வளரும். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆடுகள் வளர்ப்பு மற்றும் இறைச்சிக்காகவும் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து ஆட்டை வாங்கிச் செல்கின்றனர். ஆட்டிற்குத் தேவையான தீவனப்புற்கள் நாங்களே உற்பத்தி செய்கிறோம். அடர்தீவனம் மட்டும் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது" என்று கூறினார்.

"பண்ணையில் உள்ள ஆடுகள் நமது நாட்டு ஆட்டினம் போன்றது தான். இறைச்சியும் சுவையாக இருக்கும். ஆட்டின் எரு எங்களது விவசாயத்திற்கு பயன்படுத்துகிறோம். எங்களது பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள எருவை டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வீதம் விற்பனை செய்கிறோம். இத்தொழில் மூலம் அனைத்து செலவும்போக மாதம் ரூ. 50 ஆயிரத்திற்கும் அதிகமாக வருவாய் ஈட்ட முடிகிறது. புதிதாக பண்ணை அமைக்க வருவோருக்கும் ஆலோசனை வழங்குகிறேன். பண்ணையும் அமைத்து தருகிறோம். படித்துவிட்டு ஏதோ ஒரு நிறுவனங்களில் பணி செய்வதைக் காட்டிலும் சுய தொழில் செய்வது மன நிம்மதியை தருகிறது. எதிர்காலத்தில் பண்ணையை மேலும் விரிவுபடுத்த வேண்டும்" என்று கூறினார்.

x