சிறகை விரி உலகை அறி-46: மரணப் பாதை!


ட்ரங் பெட்டிகள்

பூ பறிப்பதும், பிடுங்குவதும் ஒன்றல்ல. எறும்பை அடிப்பதற்கும், நசுக்குவதற்கும் வேறுபாடுண்டு. நாயை அனுப்புவதும், விரட்டுவதும் வெவ்வேறானவை. விலங்குகளுக்கு உணவிடுவதும் மின்வேலி கட்டுவதும் வேறானது. குணமும் குரூரமும் நிறைந்த நம் மனதுக்கு இவையெல்லாம் சாட்சி. ஜெர்மன் நாஜிக்களின் மனதிலோ குரூரம் மட்டுமே குடிகொண்டிருந்தது.

கொலை நிரல்

மவுனம் சூடிய முகங்களுடன், ‘மரணப் பாதை’ அறைக்குள் நுழைந்தோம். வதை முகாமுக்குக் கொண்டுவரப்பட்ட பெரும்பாலான யூதர்கள், “உங்களை வேறு இடத்தில் குடி அமர்த்துகிறோம். 10 - 50 கிலோ பொருட்கள் எடுத்து வரலாம்” என்று ஜெர்மன் அதிகாரிகளால் ஏமாற்றப்பட்டவர்களே! அதனாலேயே, பேனா, ஆடைகள், உணவுப் பொருட்கள், வீட்டுக்குத் தேவையான பொருட்கள், விலை மதிப்புமிக்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். தொழில் தொடங்குவதற்கான பொருட்களையும் சிலர் கொண்டு வந்தார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை வைத்திருந்தனர்.

விஷவாயு இருந்த டப்பாக்கள்

தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிய யூதர்களை, ஆண்கள் தனியாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாகவும் அதிகாரிகள் பிரித்தார்கள். நாஜி மருத்துவர்கள் வந்து, தற்காலிகமாக, வேலை செய்ய வலுவும், திறமையும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். நோயுற்றோர், வயதானோர், கருவுற்ற பெண்கள், குழந்தைகள், மற்றும் ‘பயனில்லாதவர்கள்’ என மருத்துவர்கள் ஒதுக்கியவர்களை நேரடியாக விஷவாயு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். தொடர்வண்டியில் வந்தவர்களில் 70-75 சதவீதத்தினர் விஷவாயு அறைக்கு அனுப்பப்படுவதுண்டு. சில நேரங்களில் இந்த சதவீதம் அதிகமானதும், மேலும் சில வேளைகளில், தொடர்வண்டியில் வந்தவர்களை நேரடியாக விஷவாயு அறைக்குள் அனுப்பியதும் உண்டு.

விஷவாயு உருண்டை

விஷவாயு அறைக்கு நடத்தப்படும்போது பயப்படக்கூடாது என்பதற்காக, “தொலைதூரத்தில் இருந்து, பல நாட்கள் பயணித்து களைத்துப்போய் வந்திருக்கிறீர்கள். குளித்துவிட்டு வந்து உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்துகொள்ளுங்கள்” என்றனர். குளிக்கவும், ஏதாவது குடிக்கவும் ஏங்கி இருந்தவர்கள் ஆர்வமுடனும் எதிர்ப்பு ஏதுமின்றியும் சென்றார்கள்.

ஆஸ்விட்ச் அதிகாரி ருடால்ஃப் ஹோஸ், யூதர்களை வேரறுக்கும் நிகழ்வு எப்படி நடந்தது என்பதை இவ்வாறு சொல்கிறார், “ ‘குளியல் மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் இடம்’ என்பது பல்வேறு மொழிகளில் எழுதியிருக்கும். அதை நம்பி உள்ளே சென்றார்கள். அறையின் மேலே தண்ணீர் வரும் ஷவர் போன்று பொய்யாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் பெண்களும் குழந்தைகளும், அவர்களைத் தொடர்ந்து ஆண்களும் சென்றார்கள். யாராவது எதிர்ப்பு காட்டுவது தெரிந்தால், சத்தமே இல்லாமல் சிறிய துப்பாக்கியால் யாரும் அறியாதபடி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்கள்.

காலணிகள்

அறை நிறைந்ததும், காற்றுப்புக முடியாதபடிக்கு கதவுகள் உடனடியாக அடைக்கப்பட்டன. பிறகு அதிகாரிகள், தங்களைப் பாதுகாக்க முகமூடி அணிந்து, ஷவர் வழியாக விஷவாயுவை சிறு உருண்டை வடிவில் கொட்டினார்கள். சில அதிகாரிகள், கதவுகளில் இருந்த கண்ணாடி துவாரம் வழியாக, விஷவாயு சீராக எல்லா பக்கமும் பரவுகிறதா என பார்த்தார்கள். வாயு செலுத்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள், அதாவது, மூன்றில் ஒரு பகுதியினர் உடனடியாக இறந்தார்கள். மற்றவர்கள், தள்ளாடி, மூச்சுவிட முடியாமல் வீரிட்டு துடித்தார்கள். சில வினாடிகளிலேயே அதுவும் நின்றது. 20 நிமிடங்களுக்குப் பிறகு, எவ்வித அசைவும் தெரியாது. மருந்தின் வகையைப் பொறுத்து, அவர்கள் சுவாசித்த மருந்தின் அளவைப் பொறுத்து, நின்ற தூரத்தைப் பொறுத்து சிலவேளைகளில் கூடுதல் நேரம் ஆகும். பொதுவாக, வயதானவர்கள், நோயுற்றவர்கள், வலுவற்றவர்கள், குழந்தைகள் உடனடியாக செத்தார்கள்.

விஷவாயு செலுத்தப்பட்டு, அரை மணிநேரம் கழித்து, பிணங்களை அப்புறப்படுத்தினார்கள். உடலிலும், முகத்திலும் எவ்வித மாற்றமும் தெரியாது. வலிப்பு வந்ததற்கான அறிகுறி ஏதும் இருக்காது. அதன்பிறகு, இறந்தவர்களின் முடிகளை வெட்டினார்கள். கலைநயமிக்க பற்களையும், அவர்கள் அணிந்திருந்த நகைகளையும் கழற்றினார்கள். அனைத்து உடல்களையும் எரியுலையில் எரியூட்டினார்கள். எரிப்பதற்கான இடம் போதாதபோது, பொதுவெளியில் போட்டு எரித்தார்கள்.” நாங்கள் சென்ற அறையில், விஷவாயு செலுத்தும் அறையையும் எரியுலையின் மாதிரிகளையும் செய்து வைத்திருந்தார்கள்.

தலைமுடிகள்

பிணந்தின்னி திருடர்கள்

“யூத வணிகர்கள் கொண்டுவரும் பொருட்கள் அதிக விலைமதிப்புள்ளதாக இருந்தது. தங்கம், பிளாட்டிம், மற்றும் வைரக்கல் பதிக்கப்பட்ட கடிகாரங்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் மற்றும் அரிதாகக் கிடைக்கும் பொக்கிஷங்களும் கிடைத்தன. பல்வேறு நாட்டுப் பண நோட்டுகள் ஆயிரக்கணக்கில் கிடைத்தன. பெரும்பாலும், எங்கெல்லாம் மறைக்க முடியுமோ அங்கெல்லாம் மறைத்து எடுத்து வந்திருந்தார்கள். பொருட்கள் அனைத்தையும் வகைப்படுத்திய பிறகு, விலைமதிப்பு மிக்கப் பொருட்களையும், பணத்தையும் பெர்லினில் இருந்த ‘பொருளாதார மற்றும் நிர்வாக தலைமை அலுவலகம்’ அனுப்பினர். அங்கிருந்து, ‘மூன்றாம் பேரரசின் வங்கி’ என பொருள்படும், ரெய்ச்பேங்க் (Reichsbank) அனுப்பினர். இந்த வங்கியில், யூதர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பொருட்களை நிர்வகிப்பதற்கான சிறப்பு பிரிவு இருந்தது. மேலும், நகையும் பணமும் சுவிட்சர்லாந்தில் விற்கப்பட்டன. சாதாரண கடிகாரங்கள், கடிகார உற்பத்தி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டியாக்கினர். பெண்களின் தலைமுடிகளை பவாரியாவில் இருந்த வேறொரு நிறுவனத்துக்கு அனுப்பினர்.” என்கிறார் அதிகாரி ருடால்ஃப் ஹோஸ்.

நிழற்படம் எடுத்த முறை

வருகைப்பதிவு

மருத்துவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் முகாமுக்கு வந்தவுடன், யூதரோ யூதரல்லாதவரோ, அனைவருக்கும் எண் கொடுக்கப்பட்டது. நேராக நிற்பது, வலதுபுறம் கழுத்தைத் திருப்பி நிற்பது, வலதுபுறம் கழுத்தைத் திருப்பி மேல்நோக்கி பார்த்தப்படி நிற்பது என 3 வகையான நிழற்படங்கள் எடுக்கப்பட்டன. மொட்டை அடித்து, கோடுபோட்ட முகாம் சீருடை கொடுத்தார்கள். அதில், கைதிக்கான முகாம் எண் இருந்தது. கைதுக்கான காரணத்தை அதில் இருக்கும் முக்கோணம் சொல்லியது.

அரசியல் கைதிகள், கொஞ்சம் ‘பாதுகாப்பு’ உள்ளவர்களின் சட்டையிலும், ஜெர்மன் ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள், அதே வேளையில், சும்மா தெருவில் திரிந்த போலந்து நாட்டினர் மற்றும், ஜெர்மானியர்களைக் குடியமர்த்துவதற்காக, ஷமஸ்க் (Zamosc) நகரத்திலிருந்து இங்கு அனுப்பப்பட்டவர்கள் அனைவருக்கும் சிவப்பு முக்கோணம். சில யூதர்களும்கூட அரசியல் கைதிகளாக வந்திருந்தார்கள், அவர்கள் சட்டையில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இரண்டு முக்கோணங்கள். படம் எடுக்கும்போது, அருகிலேயே ஒரு கட்டையில், முகாம் பெயரின் சுருக்கம், கைதியின் நாட்டைக் குறிக்கும் எழுத்து, என்ன காரணம் மற்றும் எந்த பிரிவில் முகாமுக்கு வந்துள்ளார் என்கிற தகவலையும் அருகில் வைத்து படம் எடுத்தார்கள்.

அதிக வேலை; துரித சாவு

முகாம் அதிகாரிகள், அதிகப்படியாக வேலை வாங்கி கைதிகளின் ரத்தத்தை உறிஞ்சினார்கள். அதேவேளை, வெகு விரைவாக கைதிகளைக் கொன்றார்கள். முகாம் இயக்குநர் கார்ல் ஃபிரிட்ச் (Karl Fritzsch), புதிதாக வந்த கைதிகளிடம் உரையாற்றும்போது முகாமில் கைதிகள் எதை எதிர்பார்க்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுவார். அப்போது, “குணமாகிப்போவதற்காக மருத்துவ இல்லத்துக்கு நீங்கள் வரவில்லை. மாறாக, ஜெர்மன் வதை முகாவுக்கு வந்துள்ளீர்கள். இங்கிருந்து செல்வதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது, அது, பிணம் எரிக்கும் புகைக்குழாய். யூதர்களுக்கு இரண்டு வாரங்கள் வாழ்வதற்கான உரிமை உள்ளது. பாதிரியார்களுக்கு ஒரு மாதம், மற்றவர்களுக்கு 3 மாதங்கள்” என்பார்.

இதையே, “முகாம்களை தங்கும் விடுதிகளாக மாற்ற நான் விரும்பவில்லை. பேரச்சம்தான் அதிபயங்கரமாக பயனளிக்கும் மிகவும் பயனுள்ள அரசியல் ஆயுதம். இந்த முகாமில் தனக்கு என்ன காத்துக்கொண்டிருக்கிறது என்பதை அறியும் எவரும் நமக்கு எதிராக எதையும் செய்வதற்கு முன்பாக ஒருமுறைக்கு பலமுறை நன்கு யோசிக்க வேண்டும்” என்றார் ஹிட்லர்.

பெண்கள் பகுதி

காட்சியத்திலிருந்து வெளியில் வந்தோம். அடுத்த கட்டிடத்துக்குச் செல்லும் பாதையின் ஓரத்திலிருந்த குறிப்பில், ‘26 மார்ச் 1942 முதல் அதே ஆண்டு ஆகஸ்ட் பாதிவரை, 1-10 வரையுள்ள கட்டிடங்களில் பெண் கைதிகள் இருந்தார்கள். ஆண்கள் பகுதியையும் பெண்கள் பகுதியையும் பிரிக்க பெரிய சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ஜெர்மனி மற்றும் ஜெர்மனி கைப்பற்றியிருந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் யூதர் மற்றும் யூதரல்லாத ஏறக்குறைய 17 ஆயிரம் பெண் கைதிகள் இங்கே அனுப்பப்பட்டார்கள். இந்த நான்கு மாதத்தில் சில ஆயிரம் பெண்கள் விஷவாயு அறையிலும், பட்டினி, தீவிர தொற்றுநோய், போதுமான சானிட்டரி பொருட்கள் இல்லாமை போன்றவற்றாலும் இறந்தார்கள். உயிருடன் இருந்த மற்றவர்களை 1942 ஆகஸ்ட் மாதத்தில் பெண்களுக்கான புதிய முகாமுக்கு அனுப்பினார்கள்’ என்று எழுதியிருந்தது. வாசித்தேன். விழிகளும் வதங்கிய வெயிலில் மனம் கசங்கி நடந்தேன்.

(பாதை நீளும்)

சீப்பு உள்ளிட்டவை...

தேநீர் தட்டுகள்

செயற்கை கால்கள்

பெட்டி செய்தி:

அழுகுரலின் ஆவணம்

’மரணப் பாதை’ அறைக்குள் கைதிகளான மக்கள் பயன்படுத்திய பொருட்களைச் சேகரித்து தனித்தனி அறைகளில் வைத்திருக்கிறார்கள். கால் ஊனமுற்றோர் பயன்படுத்திய செயற்கைக் கால்கள், கக்கத்தில் வைத்து நடந்த கைத்தடிகள், மற்றும் துணைக் கருவிகள் ஓர் அறையில்; தேநீர் குவளைகள், டம்ளர்கள், தேநீர் தட்டுகள், கரண்டிகள் அடுத்த அறையில்; ட்ரங் பெட்டிகள் மற்றோர் அறையில்; காலணிகள் ஓர் அறையில்; குடைகள், முகச் சரவம் செய்வதற்குப் பயன்படும் பிரஸ், பல் துலக்கி, சீப்பு உள்ளிட்டவை அடுத்த அறையில்; இன்னோர் அறையில் தலை முடிகள்; விஷவாயு உருண்டைகளும், அவை இருந்த டப்பாக்களும் அடுத்தடுத்த அறைகளில்; விஷவாயு செலுத்தியபோது, தங்களைக் காத்துக்கொள்ள நாஜி வீரர்கள் பயன்படுத்திய முகமூடிகள் தனி அறையில். இவை அனைத்துக்கும் மத்தியில், கைதிகள் ரகசியமாக செய்த உயிர்ப்புடன் இருக்கக் காரணமான 2 ஆயிரம் கைவினைப் பொருட்கள்!

x