‘திராவிட ஜனதா கட்சி’ன்னு பேரு மாத்துறோம்!


அன்றைய தின(மு)ம் பறக்கும் பைக்கிடம் பதற்றத்துடன் பேசிக்கொண்டிருந்தான் பாச்சா. பின்னிரவுக் காட்சியில் ‘பீஸ்ட்’ பார்த்ததால் ஏற்பட்ட பீதியால் பாதிப்படைந்திருந்ததை பாதி முழுங்கியும் முழுங்காமல் சொல்லிக்கொண்டிருந்தான். “ஆனாலும், ‘பீஸ்ட்’டை வச்சு நீ குடுக்கிற பில்டப்பை தளபதி ரசிகர்கள் பார்த்தா தாறுமாறா தகராறு ஆகிடும்யா. படம் அவ்வளவு பயங்கரமா(!) இருக்கா என்ன?” என்று பாச்சாவிடம் கேட்டது பைக். “அட, நான் பார்த்தது நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி வந்த இங்க்லீஷ் த்ரில்லர் படம்பா. நான் எதுக்கு நடுச்சாமத்துல படத்துக்குப் போய் நடுங்கிட்டுக் கிடக்கணும்?” என்றான் பாச்சா. “அப்ப தன்னந்தனியா படம் பார்த்ததா சொன்னது?” என்று விடாமல் கேட்ட பைக்கிடம், “அதுவா... ஒத்தையா உட்கார்ந்து ஓடிடி-யில பார்த்ததுல லைட்டா உதறல் எடுத்துடுச்சு. அதான்!” என்று சொல்லிவிட்டு அன்றைய பணிகளுக்கு ஆயத்தமானான்.

ஆசிரியர் அனுப்பியிருந்த பட்டியலில் முதலில் இருந்த பெயர் - அண்ணாமலை.

அவரது பெயரைப் பார்த்ததும் பாச்சாவும் பைக்கும் அனிச்சையாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

‘ஆமா பின்னே... அன்றாடம் அரசியல்வாதியாகவே நடந்துக்கிற ஒரே அரசியல்வாதி அண்ணாமலைதானே... அவரைச் சுத்தித்தானே தமிழக அரசியலே தன்னிச்சையா இயங்கிக்கிட்டு இருக்கு?!’ என்று இருவரின் மைண்ட் வாய்ஸ்களும் ஒருங்கே வெளிப்பட்டு ஒன்றுடன் ஒன்று மோதிக் கலந்தன.

கமலாலயம்.

ரிலே ரேஸ் மாதிரி தொடர் செய்தியாளர் சந்திப்புகளால் துவண்டுபோயிருந்த செய்தியாளர்கள் கேமராக்களையும் மைக்குகளையும் கிடைமட்டமாகக் கிடத்திவிட்டு டீ சாப்பிட வெளியில் போயிருந்தார்கள் (இல்லை, நீங்கள் நினைப்பது போல் மக்கள் வரிப்பணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் டீ பார்ட்டியில் கலந்துகொள்ள அல்ல. அவரவர் காசில் அவரவர் அருந்த!).

ஆளுநர் ஏற்பாடு செய்திருந்த டீ பார்ட்டி திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு சிலபல டென்ஷன்களை ஏற்படுத்தியிருந்ததாலும், அதைப் பயன்படுத்தி பழைய பங்காளிகளான பாஜகவினரும் அதிமுகவினரும் பாசத்துடன் அளவளாவ சந்தர்ப்பம் கிடைத்திருந்ததாலும், அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்திருந்தார் அண்ணாமலை.

ஆம், பகல் நேர பார்ட்டி என்பதால் டீக்குப் பதிலாக அண்ணாமலை ஜூஸ்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார். எலுமிச்சை, சாத்துக்குடி என எக்கச்சக்க விலைக்கு விற்பனையாகும் பழங்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட காஸ்ட்லி ஜூஸ் பார்ட்டி அது. வழக்கம்போல் அன்பும் பண்பும் நிறைந்த அதிமுகவினர் கலந்துகொண்டு குளிர்ச்சியான ஜூஸ் அருந்தியபடி குதூகலமாக கூடிப் பேசிக்கொண்டிருந்தனர்.

‘ஆஹா... அம்மாவின் ஆன்மா பார்த்தால் அளவற்ற ஆனந்தமாகிவிடும் போல இருக்கே’ என மனதுக்குள் நினைத்துக்கொண்டான் பாச்சா. ஆங்கொரு மூலையில், திமுகவினரைத் திடுக்கிடச் செய்யும் வகையிலான அறிக்கைகளைத் தயார் செய்யும் பணியில் ஆழ்ந்திருந்தார் அண்ணாமலை.

“திமுக பின்னணி ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிச்ச பீஸ்ட் படத்துக்கு கன்னடத்துல எடுத்து டப்பிங்காகி ரிலீஸான ’கேஜிஎஃப்-2’ டஃப் கொடுக்கிறதுல உங்களுக்கு உள்ளூ(ர்)ர சந்தோஷமா இருக்குமே... சரியா சார்?” என்று கேட்டபடி அண்ணாமலை முன்னர் ஆஜரானான் பாச்சா.

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது சூழ்ந்துகொண்டு கேள்வி கேட்டாலும் அசராமல் பதிலளிக்கும் வகையில் ஆயத்தமாகியிருக்கும் அண்ணாமலை, அனலடிக்கும் ‘சூரியனை’ அசராமல் முறைக்கும் வகையில் அண்ணாந்து பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

“பாருங்கண்ணா... நாம இங்கே பார்க்கிறது எதுவும் சினிமா கிடையாது. எல்லாமே சீரியஸ் மேட்டர். ‘தமில்’... ‘தமில்’னு பேசிட்டு மொழியை வச்சு தீய அரசியல் பண்றது திமுககாரங்க வேலை. நாங்க அப்படியில்லை. எல்லா மொழிக்கும் சம்ஸ்கிருதத்துக்கு இணையா சரிசமமா மதிப்பு கொடுப்போம். அதனால, கேஜிஎஃப் படத்தை வச்சு என் ‘தமில் மொலி’ பற்றை கேலி பண்ணாதீங்க” என்று கெடுபிடியாகச் சொன்னார் அண்ணாமலை.

“சேச்சே... அப்படியெல்லாம் கேட்க முடியுமா சார்? நீங்கதான் அமித் ஷா அறிக்கைக்கே டஃப் குடுக்கிற மாதிரி இந்தித் திணிப்பை எதிக்கிறதா சொல்லி திராவிடக் கட்சிகளையே திகைக்க வச்சிருக்கீங்களே?” என்று பாச்சா சொன்னதைக் கேட்டு பாந்தமாகப் புன்னகைத்த அண்ணாமலை, “ஆமாங்ணா... நானும் திராவிடன்தானே! இப்பக்கூட இங்கே இருக்கிற அரசியலுக்கு ஏத்த மாதிரி ‘பாரதிய ஜனதா கட்சி’ங்கிற பேரை ‘திராவிட ஜனதா கட்சி’ன்னு மாத்திடலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அடுத்த தடவை டெல்லி போகும்போது அமித் ஷா கிட்ட இது பத்திப் பேசலாம்னு இருக்கேன்” என்று சொல்லி திகைக்கவைத்தார்.

ஆடிப்போன பாச்சா, அடுத்ததாக அங்கிருந்த அதிமுக தலைவர்கள் மத்தியில் ஜெயக்குமாரைத் தேடினான்.

பார்ட்டிகளை... அதாவது விருந்துகளை எதிர்கொள்வது எப்படி என தீஸிஸ் எழுதும் அளவுக்குத் திருச்சியில் பல ‘சுவையான’ அனுபவங்களைப் பெற்றிருந்த ஜெயக்குமார், பழச்சாறுகளை எந்தக் கோணத்தில் வைத்து அருந்தினால் பலனளிக்கும் எனப் பக்கத்தில் இருந்த கட்சிக்காரர்களுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.

“ஆளுநர் டீ பார்ட்டிக்கு ஆதரவளிச்ச மாதிரி அண்ணாமலை ஜூஸ் பார்ட்டிக்கும் அடிச்சுப்பிடிச்சு ஆஜராகிட்டீங்க போல... விருந்துன்னு கூப்பிட்டா விடாம அட்டெண்டன்ஸ் போட்டுடுவீங்களா சார்?” என்று கேட்டான் பாச்சா.

“பின்னே நாங்க என்ன பொறுப்பற்ற ஆளுங்கட்சியா? கவர்னர் டீ பார்ட்டி வச்சா கட்சி வேறுபாடுகளை மறந்து கலந்துக்கணும்ங்கிற கண்ணியமே இல்லாத கட்சி திமுக. எங்களைப் பாரு... கவர்னரோட கவுரவம் போயிடாம இருக்க டீ பார்ட்டியில டீசன்டா கலந்துக்கிட்டோம். இந்தப் பண்பாடு திமுகவுக்கு வருமா?” என்றார் ஜெயக்குமார்.

“அதெல்லாம் சரி, சென்னா ரெட்டி காலத்துல ஆளுங்கட்சியா இருந்த அதிமுகவும் அவர் ஏற்பாடு செஞ்ச டீ பார்ட்டியை டிஸ்லைக் பண்ணின வரலாறு இருக்கே?” என்றான் பாச்சா.

ஜெர்க்கை மறைத்து ஜென்டிலாகப் புன்னகைத்த ஜெயக்குமார், “அது போன நூற்றாண்டு. இது இந்த நூற்றாண்டு” என்று சொல்ல, “உதயநிதியோட ‘ரெட் ஜெயன்ட்’ ரெண்டாவது ரவுண்டு விளையாட ஆரம்பிச்சிருச்சு... சினிமா உலகத்துல பூகம்பம் வெடிக்கும்னு சீரியஸா எச்சரிக்கை விடுத்திருக்கீங்களே... அது சினிமாக்காரங்களை மட்டும் மனசுல வச்சிக்கிட்டு சொன்னதா... இல்லை ரசிகர்களோட உடல்நலம் பத்தின அக்கறையில வந்ததா?” என எடுத்துக்கொடுத்தான் பாச்சா.

“நியாயம்தானேப்பா? ஏற்கெனவே சன் பிக்சர்ஸ் பெரிய பெரிய ஸ்டார்களோட படங்களை எடுத்து பீதியைக் கிளப்பிட்டு இருக்கு... தியேட்டர் இருக்கிற தெரு பக்கத்துக்கே போக முடியாத அளவுக்கு திகைக்க வைக்கிற படங்களை எடுத்து ரசிகர்களை ரணகளமாக்கியிருக்கு. அடுத்து ரெட் ஜெயன்டும் களத்துல இறங்கி கன்னாபின்னான்னு படம் எடுத்துடும்ங்கிற கவலையில அப்படிச் சொன்னேன். என்ன இருந்தாலும் நானும் ஒரு கலைஞன் தானே?” என்று பாச்சாவின் கையில் இருந்த மைக்கை இன்னும் அருகே இழுத்தபடி பாடத் தொடங்கினார் ஜெயக்குமார்.

அவரது இ(ம்)சையார்வத்தால் கிலியடைந்த பாச்சா, “நீதிமன்றத் தீர்ப்பால சின்னம்மாவுக்கும் அதிமுகவுக்கும் இனி சம்பந்தம் இல்லைன்னு நீங்க சந்தோஷமா இருக்கிறது தெரியுது... அதுக்காகப் பாட்டெல்லாம் பாடினா பக்கத்துல பாஜககாரங்க(ளே) பயந்துட மாட்டாங்களா?” என்று கேட்டான்.

வழக்கம்போல அதை ஜாலியாகவே எடுத்துக்கொண்ட ஜெயக்குமார், “அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் மட்டுமில்லைப்பா... இனி சசிகலாவுக்கும் சசிகலாவுக்குமே சம்பந்தம் இல்லைன்னு மேடைக்கு மேடை பேசப்போறோம்” என்று சொல்லிவிட்டு மறுபடியும் ஒரு பாடலைப் பாடத் தொடங்க, மனசு கேட்காமல் பாச்சாவைப் பத்திரமாக அங்கிருந்து அகற்றி பறக்கத் தொடங்கியது பைக்!

x