விவசாய தோட்டத்தில் நுழைந்த 7 அடி மலைப் பாம்பு பத்திரமாக மீட்பு @ ஆனைமலை


ஆனைமலை அருகே விவசாய தோட்டத்தில் நுழைந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

ஆனைமலை: ஆனைமலை அருகே விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்த 7 அடி நீள மலைப் பாம்பை தன்னார்வலர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்த ஓரக்கழியூர் கிராமத்தில் விவசாயி குணசேகரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. நேற்று (ஜூன் 24) அங்குள்ள மாமரத்தில் மலைப் பாம்பு ஒன்று பதுக்கி இருப்பதை கண்ட தொழிலாளர்கள் அதுகுறித்து குணசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர்.
குணசேகரன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையின் பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களான சுரேஷ் மற்றும் காளிமுத்து இருவருவரின் உதவியுடன் மாமரத்தில் மறைந்திருந்த 7 அடி நீளமிருந்த மலைப் பாம்பை நீண்ட நேரம் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, "மலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் மலைப் பாம்புகள் ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் நுழைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்போது மலைப் பாம்பு பிடிப்பட்ட விவசாயத் தோட்டம், ஆழியாற்றுக்கு அருகில் உள்ளது. எனவே இது வனப்பகுதியில் இருந்து ஆற்றில் அடித்து வரப்பட்ட மலைப் பாம்பாக இருக்கும்" என வனத்துறையினர் தெரிவித்தனர்.