ஊருக்கு ஒரு செந்தமிழ் நகர்!


நாட்டாணிகோட்டை நரிக்குறவர் இன மக்களுடன் ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ்

பொதுவாக மக்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப அரசு தீட்டும் திட்டங்களை தங்கள் மாவட்டங்களில் சிறப்பாக செயல்படுத்துவதைத்தான் மாவட்ட ஆட்சியர்கள் செய்து வருகிறார்கள். ஆனால் தஞ்சை ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் சற்றே வித்தியாசப்படுகிறார். விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்காக, தானே ஒரு சிறப்பான திட்டத்தை தொடங்கி அதை செம்மையாக செயல்படுத்தி வருகிறார் பொன்ராஜ்.

ஆட்சியருக்கு பாசிமணி மாலை அணிவிக்கும் நாட்டாணிகோட்டை மக்கள்.

எவ்வித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் ஊரின் ஒதுக்குப்புறத்திலும், புறம்போக்கு நிலங்களிலும் வசிப்பவர்களின் அடிப்படைத் தேவைகளை முற்றிலுமாக பூர்த்தி செய்வதே ஆட்சியர் பொன்ராஜின் அந்த சிறப்புத் திட்டம். “குரலற்றவர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுக்கும்போது அது இப்படி ஒரு திட்டமாகவே உருவெடுத்துவிட்டது” என்கிறார் அவர்.

தஞ்சாவூர் அருகே நாட்டாணிகோட்டை என்ற ஊரின் ஒரு பகுதியில் நரிக்குறவர் சமூகத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பாதையென்றோ, சாலையென்றோ எதுவும் கிடையாது. நடந்து செல்ல மட்டும் அறநிலையத்துறை மற்றும் தனியார் நிலத்தப் பயன்படுத்திவந்த இவர்களுக்கு அவ்வழியே இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூட அனுமதி இல்லை. இந்த பிரச்சினையை அந்த மக்களின் கோரிக்கை மனு மூலமாக தெரிந்து கொண்ட ஆட்சியர் பொன்ராஜ், உடனடியாக கள விசாரணை நடத்தி அந்த மக்களின் பல ஆண்டு கால அவலத்தை புரிந்துகொண்டார்.

செந்தமிழ் நகரில் சாலை, மின்சாரம்

தாமதிக்காமல் இதுவிஷயமாக அறநிலையத்துறையிடம் பேசிய ஆட்சியர், அந்த மக்கள் பயன்படுத்தி வந்த வழியை அவர்கள் நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கிக் கொடுத்தார். அதேபோல் தனியார் இடத்தின் உரிமையாளரிடமும் பேசி சாலை அமைப்பதற்குத் தேவையான இடத்தையும் விலைக்கு கொடுக்க சம்மதிக்க வைத்தார். அந்த இடத்தின் வழியாக இப்போது சாலை அமைக்கப்பட்டு அந்த மக்கள் இரு சக்கர வாகனங்களில் ஜம்மென்று பறக்கிறார்கள்.

இத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதாக அவர் கருதவில்லை. இதுநாள் வரை அவர்களுக்கு கிடைக்காமல் இருந்த மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளும் அடுத்தடுத்து அந்தக் குடியிருப்பை வந்தடைந்தன. அடுத்தகட்டமாக அந்த மக்களுக்கு கான்கிரீட் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கிறார் ஆட்சியர். அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்துவிட்ட இந்த குடியிருப்பின் பெயரையும் செந்தமிழ் நகர் என மாற்றி இருக்கிறார் ஆட்சியர்.

கும்பகோணம் அருகே வேளூர், தஞ்சாவூர் அருகே ஆலக்குடி, திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்செனம்பூண்டி ஆகிய கிராமங்களிலும் விளிம்புநிலை மக்களுக்காக ஆட்சியர் பொன்ராஜின் செந்தமிழ் நகர்கள் உதயமாகி இருக்கின்றன.

இங்கெல்லாம் சாலைப் புறம்போக்கில் வசித்தவர்களுக்கு தனியார் இடம் வாங்கப்பட்டு அதில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள். புறம்போக்கு நிலத்தில் குடிசைகளில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கி அங்கே அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன. புதிய வீடுகளும் கட்டித்தருவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பட்டா வேண்டும், குடி தண்ணீர் வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை மனு கொடுத்த இந்த மக்களுக்கு அவர்கள் கேட்காத பல நல்ல விஷயங்களையும் தாமாகவே செய்துகொடுத்து அசத்தி இருக்கிறார் ஆட்சியர் பொன்ராஜ். சில இடங்களில், மின் இணைப்புக்கான காப்புத் தொகையை கட்டமுடியாமல் இருந்தவர்களுக்கு தனது சொந்தப் பணத்தைக் கட்டி மின் இணைப்பு கொடுக்க வைத்திருக்கிறார்.

நன்றி தெரிவிக்கும் ஆலக்குடி மக்கள்.

இந்த செயல்பாடுகள் தொடர்பாக வாழ்த்துச் சொல்லிவிட்டு தஞ்சை ஆட்சியர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜிடம் பேசினோம். . “பட்டா இல்லை என்று கேட்டு வருபவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. சில இடங்களில் பட்டா இருந்தாலும் அங்கே வேறு எந்த அடிப்படை வசதிகளும் இருக்காது. அங்கிருந்து அவர்களின் பிழைப்புக்காக வெளியில் வருவதற்கே மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். அப்படியான நிலையை மாற்ற வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி தான் இந்தத் திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வருகிறோம்.

நீர்நிலை ஆக்கிரமிப்பு, நீர்நிலை புறம்போக்கு இல்லாத இடமாக இருந்தால் அரசின் விதிகளுக்கு உட்பட்டு அங்கேயே பட்டா கொடுத்துவிடுகிறோம். தனியார்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்குச் சொந்தமான இடங்களை விலை கொடுத்து வாங்கி அங்கேயும் விளிம்பு நிலை மக்களுக்கு பட்டாவுடன் வீட்டு மனைகளை வழங்கி வருகிறோம். வேளூர், திருச்செனம்பூண்டி ஆகிய இடங்களில் சாலைப்புறம்போக்கில் வசித்த மக்களுக்கு அவர்கள் வசித்த இடங்களுக்கு அருகிலேயே தனியார் இடங்களை விலைக்கு வாங்கி அந்த இடத்தில் தான் செந்தமிழ் நகரை உருவாக்கி இருக்கிறோம்.

ஆலக்குடி மக்கள் தங்களுக்கு மின்சார வசதி கேட்டுத்தான் வந்தார்கள். ஆனால் அங்குப்போய் பார்த்த பிறகுதான், அவர்கள் வசிக்கும் இடத்துக்கு பட்டா இல்லை; அதனால் மின் இணைப்பு வாங்க முடியவில்லை என்று தெரிந்தது. அதனால் முதலில் பட்டா வழங்கப்பட்டு அதன் பிறகு மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. அதுவரை குடி தண்ணீருக்காக ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் போய்க் கொண்டு இருந்தார்கள் அந்த மக்கள். அந்த சிரமமும் வேண்டாம் என்று அங்கேயே அவர்களுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுத்துவிட்டோம்.

விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் தங்களுக்கான தேவைகளை கேட்டுப் பெறுவதற்குக்கூட வழி தெரியாமல் இருக்கின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவவேண்டும். அவர்களின் குரலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை வைத்துத்தான் இந்த திட்டம் உருவானது. இதுவரை நான்கு இடங்களில் செந்தமிழ்நகர் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கு இடங்கள் கண்டறியப் பட்டுள்ளது. அங்கும் விரைவிலேயே செந்தமிழ் நகர் உருவாக்கப்படும்.

மக்களுடன் ஆட்சியர்.

மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் முதல்கட்டமாக செந்தமிழ் நகர் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு அடுத்தடுத்து எங்கெங்கே தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இத்திட்டத்தை விரிவு படுத்தலாம் என்றிருக்கிறோம். இதன் மூலம் தங்களின் சொந்த மண்ணில் தான் தாங்கள் வசிக்கிறோம் என்ற தன்னம் பிக்கையை விளிம்பு நிலை மக்களின் மனதில் விதைப்பதே எங்களின் நோக்கம். இதை அடிப்படையாக வைத்து, உழைத்து, தங்களின் பிள்ளைகளை நன்றாகப் படிக்கவைத்து அதன்மூலம் அவர்கள் வாழ்வில் முன்னேறவேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்” என்று அர்த்தம் சொன்னார் ஆட்சியர்.

மாவட்டம் தோறும் இப்படியான ஆட்சியர்கள் இருந்துவிட்டால் அடித்தட்டு மக்கள் ஏன் அமைச்சர்களுக்கும், முதல்வருக்கும் அடிப்படை வசதி கேட்டு கோரிக்கை மனு கொடுக்கப் போகிறார்கள்?

x