சிறகை விரி உலகை அறி-45: மரணக் குடியிருப்பு!


பிரான்சிஸ்கன் பாதிரியார்கள்

சிட்டுக்குருவியின் வால்போல் மனம் பட்பட்டென்று அடித்தது. சாலையில் கானல் நீர் சுழன்று அலைந்தது. உதட்டுக்குப் புரியாத வார்த்தைகள் மனதோடு மோதியது. சந்தித்த எங்கள் விழிகளில் மவுனம் நிழலாடியது. “இதுதான் ஆஸ்விட்ச்” விரல் நீட்டினார் வழிகாட்டி. விரலின் நகம் சுட்டிய திசையில் திரும்பினேன். லட்சக்கணக்கானவர்களின் உயிரோசை 70 ஆண்டுகள் கடந்தும் இலைகளோடு ஒலித்துக்கொண்டிருந்தது.

காரண காரியம்

ஜெர்மனியின் முதல் பேரரசு, ஹோலி ரோமன் பேரரசு (800 - 1806). இரண்டாவது, ஜெர்மன் பேரரசு (1871-1918). நாஜிக்கள் மூன்றாவது பேரரசை (Third Reich, 1933-1945) உருவாக்கினார்கள். ஜனநாயகம், மார்க்சியம், யூதர்கள் மீதான வெறுப்பு மற்றும் ஜெர்மனியே எல்லா நாடுகளுக்கும் உயர்ந்த நாடு, ஜெர்மானியர்களே அனைத்திலும் சிறந்தவர்கள், நோர்டிக் இனத்தவரின் ரத்தமே தூயது என்னும் கருத்தியலைக் கொண்டிருந்தார்கள். ‘தூய ரத்தம்’ இல்லாதவர்களை அழிக்கத் துடித்தார்கள். இக்கருத்தியலின் அடிப்படையிலேயே வதை முகாம்களை அமைத்தார்கள்.

“மண்ணும் நிலமும் வேண்டி நாங்கள் போராடுவதற்குக் காரணம், எங்கள் மக்களுக்கு உணவளிக்கவும், அதிகரிக்கும் மக்கள்தொகைக்குத் தேவையான வாழ்விடங்களை வழங்கவுமே” என கொள்கை வகுத்தார்கள். தொடக்கத்தில், ஜெர்மானியர் உள்ளிட்ட, உடல்-மன ஊனமுற்ற அனைவரையும் கொல்ல ஆணை பிறப்பித்தார்கள். யாரெல்லாம் கொல்லப்பட வேண்டும் என்பதைச் சொல்ல தனி மருத்துவர்களையும் நியமித்தார்கள். தேர்வுசெய்யப்பட்ட அனைவரும், அவர்களுக்காகவே கட்டப்பட்ட 6 கூடங்களில் விஷ வாயு செலுத்திக் கொல்லப்பட்டார்கள்.

இரண்டாம் உலகப் போர்

1939, செப்டம்பர் 1 போலந்து நாட்டை ஜெர்மனி தாக்கியது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. போலந்தில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிமான யூதர்கள் வாழ்ந்தார்கள். இவர்களுடன் சேர்த்து, ஐரோப்பாவில் வாழ்ந்த ஒரு கோடியே பத்து லட்சம் யூதர்களையும் ஒட்டுமொத்தமாகக் கொலை செய்ய ஜெர்மன் நாஜியினர் முடிவெடுத்தார்கள். 1939 நவம்பரில் கிராக்கோவின் பெரிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றிய எண்ணற்ற பேராசிரியர்களைக் கைது செய்து முகாம்களுக்குக் கொண்டு சென்றார்கள்.

“இன்று செக் பகுதியில் 7 பேரைச் சுட்டுக் கொன்றதாக சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள். ஒவ்வொருமுறை 7 போலந்து நாட்டினரை நான் சுட்டுக் கொன்றவுடன் சுவரொட்டி ஒட்ட நினைத்தால், சுவரொட்டிகளைத் தயாரிக்க போலந்து காட்டில் உள்ள மரங்கள் போதாது” என்று ஆளுநர் ஹான்ஸ் ஃபிராங் சொல்லுமளவுக்கு போலந்து மக்கள் கொல்லப்பட்டார்கள்.

முகாம் உருவாக்கம்

போலந்து நாட்டினரால் சிறைகள் நிறைந்து வழிந்தன. புதிய முகாம் அமைக்க ஜெர்மனி அதிகாரிகள் இடம் தேடினார்கள். போருக்கு முன்பாக, ராணுவ வீரர்களுக்காகக் கட்டப்பட்ட 22 செங்கல் கட்டிடங்கள் ஊருக்கு வெளியே ஆஸ்விட்சில் இருந்தன. எட்டு கட்டிடங்கள் இரண்டு மாடிகளால் ஆனவை. மொத்த பரப்பளவு 21 ஹெக்டர். அவ்விடத்தைத் தேர்வு செய்தார்கள்.

முதல் முறையாக, 1940, ஜுன் 14 -ல், 728 போலந்து அரசியல் கைதிகளை இங்கே அனுப்பினார்கள். அதில் போலந்து யூதர்களும் இருந்தார்கள். 1940 அக்டோபர் 2-ல் “போலந்தின் அனைத்து அறிவுஜீவிகளும் துடைத்தெறியப்பட வேண்டும்” என்று அறிவித்தார் ஹிட்லர். 1941-ம் ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு போலந்துக்காரர்கள் மட்டுமல்ல, ஜெர்மானியர் கைப்பற்றியிருந்த சோவியத், பிரான்ஸ், செக் உள்ளிட்ட பல்வேறு நாட்டினரையும் ஆஸ்விட்சுக்கு அனுப்பினார்கள். இந்நாடுகளில் இருந்த யூத வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளை போலந்து நாட்டு அறிவுஜீவுகள் என்று குறிப்பிட்டு அனுப்பினார்கள். எல்லோருமே கொல்லப்பட்டார்கள்.

1942, ஜனவரி 20-ல் ‘மூன்றாம் பேரரசின்’ பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகளும், நீதித்துறையினரும் ஒன்று கூடினர். அனைத்து துறையினரும் ஒத்துழைப்பு கொடுத்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவெடுத்தனர். நாஜி கட்சியின் முன்னணி தலைவர் ஹைன்ரிக் ஹிம்லர், “நமது இலக்கு, கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஜெர்மானியர்கள் ஆள வேண்டும் என்பதல்ல, அது முந்தைய போர் வழக்கம். மாறாக, கிழக்கு முழுவதும் ஜெர்மானியர்களும், ஜெர்மன் ரத்தம் உள்ளவர்களும் மட்டுமே வாழ வேண்டும் என்பதே நம் இலக்கு!” என்று முழங்கினார்.

மின் வேலி

உயிர் உண்ட காற்றும் நிலமும்

ஆஸ்விட்ச் இறங்கி மற்றொரு குழுவுடன் இணைந்தேன். “நாஜிக்கள் ஐரோப்பாவில் தாங்கள் கைப்பற்றிய பல்வேறு இடங்களில் வதை முகாம்களை கட்டியிருந்தாலும், மிகப்பெரிய இடம், அதிக எண்ணிக்கையிலான மக்கள் அடைக்கப்பட்டது மற்றும் இங்கு நிகழ்த்தப்பட்ட குற்ற நடவடிக்கைகள் போன்றவற்றால் ஆஸ்விட்ச் முக்கியத்துவம் பெற்றுள்ளது” என்றார் வழிகாட்டி. முகாமுக்குள் நுழைகையில், வாயிலின் வளைவில் ‘வேலை உன்னை விடுதலை செய்யும்’ என எழுதியிருந்ததைச் சுட்டிக்காட்டி, “ஆமாம், அதிகமாக வேலை செய்து ஒடுங்கியவர்களை, பிணம் எரியூட்டப்படும் இடத்தில் உள்ள புகைக்கூண்டு விடுதலை செய்தது” என்றார் வேதனையோடு.

ஆஸ்விட்ச் முகாம்

வாயிலின் மையத்தில் நின்று இடப்புறம் பார்த்தேன். ஒரு மீட்டர் இடைவெளியில் இரண்டு நேர் கோடுகளாக கம்பிகள் செல்கின்றன. வலப்புறமும் அப்படியே. முகாமின் பாதுகாப்புச் சுவர்கள் அவை. முகாம் செயல்பாட்டில் இருந்தபோது, கம்பிகள் முழுவதிலும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

முகாமில் இருப்பவை பழைய கட்டிடங்கள் என்பதால் எல்லா கட்டிடங்களுக்குள்ளும் செல்ல அனுமதி இல்லை. சில கட்டிடங்களைக் காட்சியகமாக அமைத்திருக்கிறார்கள். பாதையின் ஓரத்தில், ‘இங்கிருந்து தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்ட கைதிகளின் உடல்கள், மற்றவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அடிக்கடி இந்த இடத்தில் கிடத்தப்பட்டிருந்தது’ என்றிருந்த குறிப்பை வாசித்தேன்.

ஒரு தகவல் பலகையைக் காட்டிய வழிகாட்டி, “இந்த முகாமில், இசைக்குழு இருந்தது. ஆயிரக்கணக்கான கைதிகள், காலையும் மாலையும் வேலைக்குச் சென்று திரும்புகையில், இசைக் குழுவினர் அணிவகுப்பு இசை இசைத்தார்கள். சோர்ந்து வலுவிழந்த கைதிகளை ‘இடது- வலது- இடது’ என இசையின் தாளத்துக்கேற்ப வேகமாக நடக்க வைத்தார்கள். நேரத்தை மிச்சப்படுத்தினார்கள்” என்றார். அந்தப் பாதையில் நடப்பதே எனக்குத் துயரத்தை வருவித்தது. இக்கட்டுரைகளை எழுதுவதற்காக, நான் எடுத்த படங்களை மறுபடியும் பார்த்து நினைவுகளைக் கிளறியபிறகு, இரவெல்லாம் தூங்க இயலவில்லை.

கட்டிடப் பிரிவு 4

வேரறுத்தல்

கட்டிடப் பிரிவு 4-க்கு (Block 4) சென்றோம். ‘அடியோடு அழித்தல்’ என்னும் தலைப்பில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன், ஜார்ஜ் சந்தாயனாவின், ‘யாரெல்லாம் கடந்தகால வரலாற்றை நினைத்துப் பார்க்கவில்லையோ, அவர்கள் அனைவரும் மறுபடியும் அதே தவறைச் செய்ய சபிக்கப்பட்டவர்கள்’ என்னும் வாக்கியம் இருந்தது. எந்தெந்த முக்கிய இடங்கள், முகாம்கள், கெட்டோக்கள் மற்றும் சிறைகளில் இருந்து யூதர்களும், கைதிகளும், பிற நாட்டினரும் இம்முகாமுக்கு கொண்டுவரப்பட்டார்கள் என்பதைச் சொல்லும் வரைபடம் இருந்தது. எரித்துக் கொல்லப்பட்டவர்களின் சாம்பலின் மாதிரி ஒரு குடுவையில் இருந்தது.

கைதிகளும், யூதர்களும் கொண்டுவரப்பட்ட வரைபடம்

எரித்துக் கொல்லப்பட்டவர்களின் சாம்பல் மாதிரி

யூதர்கள் மட்டுமே கொல்லப்படவில்லை

அங்கிருந்த குறிப்பில் மேலுமொரு முக்கிய தகவலைப் பார்த்தேன்.

ஜுன் 1940: நாடுகடத்தப்படுதலின் தொடக்கத்தில் 1,40,000 – 1,50,000 போலந்து நாட்டினர் இங்கே கொண்டுவரப்பட்டார்கள். அவர்களில் பாதிபேர் மடிந்தார்கள்.

ஜுன் 1941: நாடுகடத்தப்படுதலின் தொடக்கத்தில் மற்ற நாடு மற்றும் இனங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் கைதிகள் இங்கே கொண்டுவரப்பட்டார்கள் அவர்களில் பாதிபேர் மடிந்தார்கள்.

கோடைகாலம் 1941: நாடுகடத்தப்படுதலின் தொடக்கத்தில் 15 ஆயிரம் சோவியத் போர்க் கைதிகள் இங்கே கொண்டுவரப்பட்டார்கள். சிறை வாழ்க்கையிலேயே பலர் மடிந்தார்கள். மிகச் சிலரே பிழைத்தார்கள்.

மார்ச் 1942: 11 லட்சம் யூதர்களை அனுப்பத் தொடங்கிய காலத்தில், ஆஸ்விட்ச் இரண்டு வகையான தேவையை நிறைவேற்றியது. (1) வதை முகாம் (2) மனித வரலாற்றிலேயே மிகப்பெரும் இனப்படுகொலை நிகழ்ந்த இடம். இவர்களில் 10 லட்சம் யூதர்கள் - குறிப்பாக, விஷ வாயு கூடத்தில் - கொல்லப்பட்டார்கள்.

பிப்ரவரி 1943: நாடுகடத்தப்படுதலின் தொடக்கத்தில் 23 ஆயிரம் ரோமா/ஜிப்சிஸ் இங்கே கொண்டுவரப்பட்டார்கள். இதில் 21 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள்.

ஆக, ஆஸ்விட்ச் முகாமில் கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் யூதர்கள்தான் என்றாலும், போலந்து, ரோமா/ஜிப்சிஸ், சோவியத், மற்றும் பிற நாட்டினரும் பெரும் எண்ணிக்கையில் இருந்தார்கள்.

ஆஸ்விட்ச் நுழைவாயில்

வரலாற்றுக் குறிப்புகள்

ஜெர்மானியர்களைத் தங்க வைப்பதற்காக ஆஸ்விட்ச் அருகே இருந்த போலந்து கிராமத்தினரை அடித்து விரட்டும் படம்; 1944-ல் வார்சாவில், ஜெர்மானியர்களுக்கு எதிராகப் போராடிய போலந்து மக்களை கைது செய்து, ஆஸ்விட்ச் அனுப்புவதற்கு முன்பாக. அடைத்து வைத்திருந்த படம்; பிரான்சிஸ்கன் துறவு சபையைச் சேர்ந்த பாதிரியார்களைக் கைது செய்து சிறைக்கு அழைத்து வரும் படம்; உள்ளிட்ட பல்வேறு படங்களைப் பார்த்து அதன் கீழே எழுதியிருப்பதை வாசித்தேன். சுற்றுலாவில் நாங்கள் குழுவாகத்தான் இருந்தோம். ஆனாலும், யாரும் யாருடனும் பேசவேயில்லை. உடல்களும், மனங்களும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தன.

(பாதை நீளும்)

பெட்டி செய்தி:

நாடற்ற யூதர்கள்

அருங்காட்சியகக் குறிப்பில், ‘ஆஸ்விட்ச் வதை முகாமுக்கு, 1940-1945 வரை ஏறக்குறைய 13 லட்சம் பேர் பல இடங்களில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இங்கு கொண்டுவரப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையில் ஹங்கேரியினரே அதிகம் (4,30,000). அடுத்ததாக போலந்து யூதர்கள் (300 000). பிரான்ஸ், நெதர்லாந்து, கிரேக்கம், பொகீமியா மற்றும் மராவியா, ஸ்லோவாக்கியா, பெல்ஜியம், ஆஸ்டிரியா மற்றும் ஜெர்மனி, யுகோஸ்லாவியா, இத்தாலி, நார்வே உள்ளிட்ட நாடுகளின் யூதர்களும் அடுத்தடுத்து உள்ளார்கள். ஏறக்குறைய 34,000 யூதர்கள் மற்ற முகாம்களில் இருந்து இங்கு மாற்றப்பட்டுள்ளார்கள்’ என்றிருந்தது.

x