‘அந்தச் செய்தி வரும்போது சேனலை மாத்திட்டாங்க!’


சிரிப்பொலி சேனலில் வடிவேலுவின் ‘இதர் ஆவோ...’ காமெடியைப் பார்த்தபடி சீரியஸாக அமர்ந்திருந்தான் பாச்சா. “என்னய்யா இது? வடிவேலு வந்து நின்னாலே வாய்கொள்ளாம சிரிப்ப. இன்னிக்கு சூப்பர் காமெடியைப் பார்த்தும் இடியாப்பத்துல இடி விழுந்த மாதிரி இறுக்கமா உட்கார்ந்திருக்க..?” என்று கேட்டது பறக்கும் பைக்.

“குச் நஹி யார்! முஜே ஹமேஷா வடிவேலு பஸந்த் ஹை... லெகின் ஆஜ்...” என்று சவுகார்பேட்டை சகவாசதோஷக்காரன் போல இந்தியில் பேசிய பாச்சா, பின்னர் சுதாரித்துக்கொண்டு, “இல்லப்பா. ஆங்கிலத்துக்கு மாற்றா இந்தியை ஏற்கணும்னு அமித் ஷா பேசினது ஞாபகத்துக்கு வந்துச்சு. அதான்” என்றான்.

“அதான் ‘பதிலாக’ன்னு சொல்லாம ‘மாற்றாக’ன்னு சொன்னதா தினகரன் ஜி(!) ஒரு திடுக் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கார்ல. இன்னொரு மொழியை இஷ்டப்பட்டு கத்துக்கிட்டா என்னவாம்?” என்று கேட்டது பைக். “மனசு விரும்பி கத்துக்கிறது வேற... மார்க்குக்காகப் படிக்கிறது வேற. இயந்திரத்தனமா யோசிச்சா எப்படி புரியும்?” என்றான் பாச்சா.

“சீரியஸா சிந்திக்கிற அளவுக்கு நாம வொர்த் இல்ல பாச்சா. வா கரை வேட்டிக்காரங்களை காமெடியா கலாய்க்கிற வேலையைப் பார்ப்போம்” என்றது பைக்.

ஆசிரியர் அனுப்பியிருந்த பட்டியலில் எடுத்த எடுப்பில் இருந்த பெயர் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தலைமையகத்தில் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்த ஈபிஎஸ், “அட... சிஎம்மா இருந்தப்பக்கூட இவ்வளவு சிக்கல் இல்லைங்க. நான் பாட்டுக்கு எதையாச்சும் பேசிக்கிட்டு, என்னத்தையாவது செஞ்சிட்டு சந்தோஷமா இருந்தேன்... இப்ப எதிர்க்கட்சித் தலைவர்னுதான் பேரு... ஒழுங்கா ஒரு போராட்டம் நடத்த விட மாட்டேங்கிறாங்க. ஏதோ சேலம்னு ஒரு ஊராம். அங்கே ஏற்பாடு பண்ணின போராட்டத்தை விட்டுட்டு திருச்சிக்குப் போய்விட்டேனாம். அதை ஒரு குற்றமாகச் சொல்கிறார்கள்” என்றார் எரிச்சலுடன்.

சற்று இடைவெளிவிட்டு, “அட அதுகூட பரவாயில்லைங்க. திருச்சியில தினுசு தினுசா விருந்து சாப்பிட்ட ஜெயக்குமாரைப் பார்த்து அதுக்கு ஆசைப்பட்டு நானும் அங்கே ஆஜராயிட்டதா அநியாயமா பேசுறாங்கங்க” என்று சொன்ன பழனிசாமி மீது பாச்சாவுக்கே பாச்சாதாபம்... ஸாரி பச்சாதாபம் பிறந்தது.

இருந்தும் கலாய்க்கும் கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா!

எனவே, “இதுக்கே அசந்துட்டா எப்படி சார்? சேலம்ங்கிற ஊருக்கு சின்னம்மா போறாங்கன்னு ஸ்பெஷலா போஸ்டர்லாம் அடிச்சு சிறப்பிச்சிருக்காங்க. பேசாம, ‘மக்கள் முதல்வர்’ மாதிரி ‘மக்கள் எதிர்க்கட்சித் தலைவர்’னு அண்ணாமலை பேரை அறிவிச்சிடலாம்ல. பிரச்சினையே இல்லாம திருச்சியில ரெண்டு மூணு வாரம் தங்கி பிரியாணி சாப்பிட்டுட்டு பேட்டி குடுத்துக்கிட்டு இருக்கலாம்” என்று கேட்டான் பாச்சா.

“தம்பி... இந்த எடப்பாடி எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் தாங்குவேன். திட்டம் போட்டு சின்னம்மா என்னென்னெமோ செய்றார். ஆனாலும், திட்டவட்டமா நாங்க முடிவு பண்ணிட்டோம்... கட்சிக்குள்ளே சின்னம்மா அதிகாரபூர்வமா வர்ற வரைக்கும் (!) அவங்களை அனுமதிக்கக் கூடாதுன்னு. அதனால, அந்தக் கவலையெல்லாம் எங்களுக்கு இல்லை” என்றார் அகலச் சிரித்தபடி.

“அப்படீன்னா பெட்ரோல், டீசல் விலை உயர்வைப் பத்தி கவலைப்படப் போறீங்களா சார்?” என்று வம்பாகக் கேட்டுவிட்டு அவரது வாயையே பார்த்தான் பாச்சா.

“எது பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அது பத்தி எனக்குத் தெரியாது. அந்தச் செய்தி வரும்போது யாரோ சேனலை மாத்திட்டாங்க” என்றார் எடப்பாடி.

“சேனல் மாறுறதெல்லாம் சரிதான். ஆனா, கட்சி மாறுறது கழகத்துக்குக் களங்கமாச்சே.... அதிமுக முன்னாள் அமைச்சர்கள்லாம் அண்ணாமலை கட்சிக்கு ஜாகை மாறலாம்னு ஜாடைமாடையா பேசிக்கிறாங்களே?!” என்று கேட்டான் பாச்சா.

“அதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிஞ்ச விஷயங்களைப் பத்தி மட்டும் கேள்வி கேளு” என்று எகிறினார் எடப்பாடி.

“இந்தித் திணிப்பு பத்தி அமித் ஷா என்ன சொன்னார்னு தெரியாதுன்னு சொல்லிட்டீங்க. ஆனா, அதிமுகவோட எதிர்க்கட்சித் தலைவர் மாதிரி பேசுற ஓபிஎஸ் அதைக் கண்டிச்சு கருத்து சொல்லியிருக்கார் கவனிச்சீங்களா?” என்று கேட்ட பாச்சாவை இடைமறித்த எடப்பாடி, “குற்றவியல் நடைமுறை மசோதா பத்தி பார்லிமென்ட்ல அவர் பையன் குத்துமதிப்பா பேசுனதைக் கேட்டியாப்பா நீ?” என்றார்.

“சார்... உங்களுக்குள்ள நீங்களே கலாய்ச்சிக்கிட்டா, நாங்க கன்டென்டுக்கு எங்க சார் போறது?” என்று ஆவேசமாகக் கேட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பாச்சா.

அடுத்ததாக அண்ணாமலை என்று பாச்சா சொன்னதும், “என்னப்பா வாரவாரம் ரிலீஸ் ஆன ஜெய்சங்கர் படம் மாதிரி... ஒவ்வொரு வாரமும் அண்ணாமலையைப் பேட்டி எடுக்கிறியே?” என்று பறக்கும் பைக் கேட்டது.

“அட நீ வேற! ட்ரோல் பண்ணினாலும் ட்ரெண்டிங்ல இருக்கிறது எப்படின்னு டெல்லியில இருந்தே ஆன்லைன்ல ட்ரெய்னிங் எடுத்துக்கிறவராம்பா அவர். பிக் பாஸ் அல்டிமேட் மாதிரி 24x7 தொடர்ந்து அவர் சேனல்ல வர்றதால செய்திக்கு நடுவுல விளம்பர இடைவெளியே விட முடியலைன்னு புலம்புறாங்க... அவரை எப்படிப்பா தவிர்க்க முடியும்?” என்று அடுக்கினான் பாச்சா.

“ரைட்டு விடு” என்றது பைக்.

அன்று(ம்) ஒரு சேனலிலிருந்து பேட்டிக்கு வந்திருப்பதாக உதவியாளர் சொன்னதும், வெளியில் வந்து பார்த்த அண்ணாமலை டிஸ்கவரி சேனல் டீமைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றார்.

“சார், உங்ககிட்டே நிறையா ஆடு மாடு இருக்குன்னு கேள்விப்பட்டோம். அரசியல்வாதி வளர்க்கிற ஆடு மாடுங்க எப்படி இருக்குன்னு அதுங்கக்கிட்டேயே ஒரு அசத்தல் பேட்டி எடுக்கலாம்னு வந்தோம்” என்றார் டிஸ்கவரி டீம்காரர்.

அதன் பின்னர் அதிகம் ஆச்சரியப்படாமல் அனுமதி கொடுத்துவிட்டு, பாச்சாவை ஏறிட்ட அண்ணாமலை, “அஞ்சு நிமிஷம்தாங்கண்ணா. அடுத்து ஒரு ஆறு சேனல் வரிசையில நிக்கிது” என்றார்.

“ஏதேது... எச்.ராஜாவுக்கே ஏக டஃப் கொடுப்பீங்க போல” என்று அண்ணாமலையைச் சிரிக்கவைத்த பாச்சா, “மாநிலத்துக்கு மாநிலம் மத்த கட்சியில இருந்து ஆட்களை ஆட்டையப் போட்டு கட்சியைக் கன்னாபின்னான்னு வளர்க்கிறீங்க சரி! ஆனாலும் மதிமுகவுல இருந்துகூடவா ஆள் திரட்டுவீங்க? அங்கே வைகோ, துரை வைகோன்னு ரெண்டு பேர்தானே இருக்காங்க?” என்று கேட்டான்.

“அப்படி இல்லீங்ணா... விலைவாசி விஷயத்தில இந்தியாவை நம்பர் ஒண்ணா மாத்தியிருக்கிற மகான் மோடி ஜியால க(ல)வரப்பட்டு பலரும் கட்சி மாற விரும்புறாங்க. வர்றவங்க யாரா இருந்தாலும் வரவேற்காம எப்படி இருக்க முடியும்? அதான் அப்படி” என்றார் அண்ணாமலை.

“எல்லாம் சரி. ஸ்பெஷல் ஐட்டம்ங்களா ஸ்டாலினுக்கு ஏகப்பட்ட கேள்வி கேட்கிறீங்க.... கேட்டா உங்க கேள்வியே ஆதாரம்னு சொல்லி கிலி ஏற்படுத்துறீங்களே?” என்றான் பாச்சா.

“பின்னே என்னங்கண்ணா. ஆதார் கட்டாயம்னு எதுக்குக் கொண்டு வந்தோம்? நாம பேசுற, கேட்கிற எல்லாமே ஆதாரம்தான்னு காட்டத்தானே? பாருங்க... அந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம்னு யாராவது கேட்டா குற்றச்சாட்டே ஆதாரம்தான்னு ஆணித்தரமா சொல்லிடலாம்ல” என்று சொன்ன அண்ணாமலை, அடுத்த கேள்விக்காக ஆவலுடன் காத்திருந்தார்.

“இருக்கட்டும் சார். நீங்க அடுத்த பேட்டிக்குப் போய்டுங்க. என்னால முடியலை... ஸாரி, எனக்கு முடியலை” என்று சொல்லி எஸ்கேப்பானான் பாச்சா!

x