கொடைக்கானல் மன்னவனூர் சுற்றுலா மையத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: பரிசல், ஜிப்லைன் சவாரியால் மகிழ்ச்சி


கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் சூழல் சுற்றுலாமையத்தில் வலம் வந்த சுற்றுலாபயணிகள்.

திண்டுக்கல்: கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் சவாரி செய்தும், ஜிப்லைனில் சென்றும் மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வாரவிடுமுறை தினங்களில் சுற்றுலாபயணிகள் வருகை தொடர்ந்த அதிகரித்து வருகிறது. கொடைக்கானலில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் சென்று வரும் பிரையண்ட்பூங்கா, குணா குகை, மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் காணப்பட்ட நிலையில் இந்த வாரம் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியான பூம்பாறை, மன்னவனூர் பகுதியிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்பட்டனர். மன்னவனூரில் வனத்துறைக்கு சொந்தமான சூழல் சுற்றுலா மையம் உள்ளது.

கொடைக்கானலில் இருந்து 35 கிலோமீட்டர் தூரத்தில் மேல்மலைப்பகுதியில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் இன்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கொடைக்கானலில் உள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் சுற்றுலாப் பயணிகளுக்காக மிதி படகுகள், துடுப்பு படகுகள் இயக்கப்படும் நிலையில், மன்னவனூர் சூழல் சுற்றுலாத்தலத்தில் பரிசல் இயக்கப்படுகிறது.

கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் சூழல் சுற்றுலாமையத்தில் பரிசல் சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாபயணிகள்.

நட்சத்திர வடிவ ஏரியில் சுற்றுலாப் பயணிகளே படகுகளை இயக்கிக்கொள்ளலாம். ஆனால் இங்கு பரிசல் இயக்க ஒருவர் நியமிக்கப்பட்டு அதில் சுற்றுலாப் பயணிகள் அமரவைக்கப்பட்டு இங்குள்ள குளத்தில் ஒரு ரவுண்ட் அடித்து இறக்கிவிடப்படுகின்றனர்.

அங்கு மிதிபடகு இயக்குவதைவிட பரிசல் சென்றுவருவது சுற்றுலாப் பயணிகளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருப்பதால் பலரும் ஆர்வமுடன் பரிசல் சவாரி செய்தனர். மேலும் சூழல் சுற்றுலாத்தலத்தில் சாகச சுற்றுலாவாக ஜிப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானல் மேல்மலைப்பகுதி மன்னவனூர் சூழல் சுற்றுலாமையத்தில் சாகச சுற்றுலாவான ஜிப்லைனில் சென்ற சுற்றுலாபயணி.

இதில் அதிக எடைகொண்டவர்கள் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. வயது, எடை ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஜிப்லைன் ரெய்டுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேடான பகுதியில் இருந்து அங்குள்ள குளத்தின் மறுபுறம் வரை குளத்திற்கு மேல் இரும்புக் கயிற்றில் தொங்கியபடி செல்வது சுற்றுலாப் பயணிகளுக்கு திரில் அனுபவமாக இருந்தது.

மேலும் டிரக்கிங் சென்றும், பசுமைபோர்த்தியபோல் உள்ள புல்வெளிகளில் அமர்ந்தும் மன்னவனூர் சூழல் சுற்றுலாத்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் மகிழந்தனர். கொடைக்கானலில் இன்று பகலில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. மேகக்கூட்டங்கள் மலைமுகடுகளில் இருந்து கீழே இறங்கி வந்தது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. இரவில் குறைந்தபட்சமாக 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந்ததால் குளிர் உணரப்பட்டது.