சிறகை விரி உலகை அறி-44: அர்த்தம் தேடும் மனிதர்கள்


டெல்லி விமான நிலையத்தில் இரண்டாம் ஜான் பால்...

ஜன்னல்கள், பகலின் பகட்டையும் இரவின் உறக்கத்தையும் காட்டும். முகங்களில் சுடரும் வெயிலை, நிழல் கெஞ்சும் கால்களை, வெட்கத்தில் தலை சிலுப்பும் இலைகளை, இறக்கைகளில் வெயில் விரட்டும் குருவிகளைக் காட்டும். மகிழுந்து ஜன்னலில் விழி விரித்து போலந்து சாலைகளைப் பார்த்துக்கொண்டே 33 கிலோ மீட்டர் பயணித்து வோடோவைஸ் கிராமத்துக்குச் சென்றோம்.

கரோல் வொய்த்திவா

1920 மே 18-ல் கரோல் வொய்த்திவா (Karol Wojtyla) எனும் குழந்தை வோடோவைஸில் பிறந்தது. மூத்த சகோதரர் எட்மண்டுடன் ஆனந்த யாழ் மீட்டித் திரிந்தார் கரோல். தனக்கொரு தங்கையோ தம்பியோ வரப்போகிறார் என காத்திருந்தார். ஆனால், பிரசவத்துக்குச் சென்ற தாய் உயிருடன் திரும்பவில்லை. அப்போது கரோலுக்கு வயது 9.

உயர்நிலைக்கல்வி முடித்த கரோல், கிராக்கோவில் தியேட்டர் மற்றும் மெய்யியல் பயின்றார். விளையாட்டு வீரராக மிளிர்ந்தார். பனிச் சறுக்குதலும் நீச்சலும் மிகவும் பிடித்த விளையாட்டுக்கள். அப்போது, இரண்டாம் உலகப் போர் காலம். ஜெர்மன் நாசி படை கிராக்கோ நகரைக் கைப்பற்றியது. பல்கலைக்கழகத்தை மூடியது. வாழ்வதற்காக, குவாரியில் கரோல் கல் உடைத்தார். வேதிமருந்து ஆலையிலும் வேலை செய்தார். இக்காலத்தில், மருத்துவரான அண்ணனும், தந்தையும், இறந்தனர்.

சென்னை மெரினாவில்...

ஆலயப் பணிகளில் ஆர்வம் இருந்ததால், பாதிரியார் ஆவதற்கான பயிற்சியில் கரோல் சேர்ந்தார். குருவானார். ஆயரானார். கர்தினால் ஆனார். 58 வயதில், கத்தோலிக்க திருச்சபையின் 264-வது திருத்தந்தையாக (Pope) தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் ஜான் பால் என தன் பெயரை மாற்றினார். 16-ம் நூற்றாண்டுக்குப் பிறகு திருத்தந்தையாக தேர்வுபெற்ற இத்தாலி அல்லாத முதல் நபர் இவர்தான். 26 ஆண்டுகள் திருத்தந்தையாக இருந்து, ஏப்ரல் 2, 2005-ல் மறைந்தார்.

இரண்டாம் ஜான் பால் அணிந்த ஆடை.

இரண்டாம் ஜான் பால் பிறந்த சிறிய வீட்டை, பக்கத்து வீட்டுடன் சேர்த்து அருங்காட்சியகமாக மாற்றியிருக்கிறார்கள். சரியான நேரத்துக்கு நாங்கள் சென்றோம். பல்வேறு நாட்டுப் பயணிகளுடனும், ஆங்கிலத்தில் விவரிக்கும் புதிய வழிகாட்டியுடனும் அருங்காட்சியகத்துக்குள் சென்றேன்.

பனிச்சறுக்கு கருவிகள்.

இரண்டாம் ஜான் பால்

அருங்காட்சியகத்தில், இரண்டாம் ஜான் பாலின் சிறு வயது நிழற்படங்கள், கட்டில், பனிச்சறுக்குக்காகப் பயன்படுத்திய பொருட்கள், ஆயர், கர்தினால் மற்றும் திருத்தந்தையாக இருந்தபோது அவர் அணிந்திருந்த வெவ்வேறு ஆடைகள், திருத்தந்தையாகத் தேர்வு பெற்றதைச் சொல்லும் சான்றிதழின் நகல் இருந்தது. மேசையில் இருந்த ஒரு குறிப்பில், ‘என் குழந்தைப் பருவத்திலிருந்தே புத்தகம் வாசிப்பது எனக்கு பிடிக்கும். புத்தகம் வாசிக்க என்னைப் பழக்கப்படுத்தியவர் என் தந்தை. எனக்கு அருகில் அமர்ந்து போலந்து எழுத்தாளர்களின் புத்தகங்களை எனக்கு வாசித்தார். என் அம்மா இறந்த பிறகு, நாங்கள் தனித்து விடப்பட்டோம். ஆனால், மிகவும் முக்கியமான புத்தகங்களை வாசிக்க என்னை ஊக்கப்படுத்துவதை தந்தை நிறுத்தவில்லை’ என்றிருந்தது.

இரண்டாம் ஜான் பால் பயணித்த நாடுகளின் மண்.

போலந்தில் இந்திய மண்

129 நாடுகளுக்குப் பயணம் செய்திருந்த இரண்டாம் ஜான் பால், இந்தியாவுக்கும் இரண்டுமுறை (1986 மற்றும் 1999) வந்திருக்கிறார். முதல் இந்திய பயணத்தின்போது மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் ஜெபித்தார். சென்னைக்கு வந்து, இயேசுவின் திருத்தூதரான புனித தாமஸ் கொல்லப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்பும், புனித தாமஸ் மவுன்ட் சென்றார். மெரினா கடற்கரையில் திருப்பலி நிறைவேற்றினார்.

கேரள மண்.

எந்தவொரு நாட்டுக்கும் முதல் முறை சென்று இறங்கியதும் மண்டியிட்டு பூமியை முத்தமிடுவதும், பயணத்தின் நினைவாக அந்நாட்டின் ஒரு பகுதியிலிருந்து மண்ணை எடுத்துச் செல்வதும் திருத்தந்தையின் வழக்கம். உலக நாடுகளின் மண், தனித்தனி குடுவைகளில் வரிசையாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஒவ்வொருவரும் தங்கள் நாட்டு மண்ணைத் தேடினார்கள். நானும், ‘இந்தியா – கேரளா’ எனும் குடுவையைப் பார்த்தேன். அந்நிய நாட்டில், இந்தியனாகவும், யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உலகக் குடிமகனாகவும் உணர்ந்தேன்.

பல்சமய உறவும் மனித நேயமும்

மனித உயிர் விலைமதிப்பு மிக்கது. அதை எடுக்க மனிதருக்கு உரிமையில்லை என்பதில் உறுதியாக இருந்த இரண்டாம் ஜான் பால், மரண தண்டனை, கருத்தடை, கருக்கலைப்பு, கருணைக்கொலை போன்றவற்றுக்கு எதிராக உறுதியாக இருந்தார். இரண்டாம் உலகப்போரின் கொடுமையை நேரடியாக அனுபவித்திருந்த இவர், மனித உரிமைகளின் பக்கம் நின்றார். பலசமய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். யூதர்களுக்கு எதிரான, இரண்டாம் உலகப்போரை கத்தோலிக்கத் திருச்சபை ஆதரிக்காவிட்டாலும், தடுத்து நிறுத்தும் முயற்சியை எடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டு இருந்த நிலையில், இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கத்தோலிக்கத் திருச்சபை நடந்துகொண்ட முறைக்காகவும், தவறுகளுக்காகவும் மன்னிப்பு கேட்டார்.

இதன் பின்னணியில், அருங்காட்சியகத்தில் இருந்த, போலந்து நாட்டு தலைமை யூத ராபி மிக்கேல் ஷட்ரிச்சின் (Michael Schudrich) அறிக்கையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ‘கடந்த 2000 ஆண்டுகளில், யூதர்-கத்தோலிக்கருக்கு இடையேயான கலந்துரையாடல் மற்றும் சமாதானத்தை முன்னெடுத்தவர்களில் இரண்டாம் ஜான்பால் போல் ஒருவரும் இல்லை. அனைவரையும், கடவுளின் படைப்புகள் அனைத்தையும் அன்பு செய்வது என்றால் என்ன என்பதை அவர் சிறப்பான வழியில் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். அரிதான ஆற்றல் அவரிடம் இருந்தது. அதிபர்களுடனும் அரசர்களுடனும் அவர்கள் ஏதோ குழந்தைகள் போல, எளிமையாக கலந்துரையாடல் மொழியில் பேசினார். எப்படி வாழ வேண்டும் என்று மட்டுமல்ல எப்படி சாக வேண்டும் என்பதையும் எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.’ என்றது அந்த அறிக்கை.

அருங்காட்சியகத்தில் இருந்து, வெளியில் வந்து, அருகிலிருந்த கோயிலுக்குள் சென்றோம். குழந்தையின் தலையில் தண்ணீர் ஊற்றி கரோல் வோய்த்திவா என்று பெயர் வைத்த ‘திருமுழுக்கு தொட்டி’ கோயிலில் இருந்தது. வெளியில் வந்ததும் அருகிலிருந்த பேக்கரிக்குச் சென்றோம். தன் ஊருக்கு எப்போது வந்தாலும் இரண்டாம் ஜான் பால் விரும்பிச் சாப்பிடும், கிரிமுஃப்கா (Kremowka) கேக் சாப்பிட்டோம்.

வோடோவைஸிருந்து 35 கி.மீ. தொலைவில்தான் ஆஸ்விட்ச் வதை முகாம் இருக்கிறது. அதை நோக்கி வண்டி புறப்பட்டதும், எனக்கு இருவரின் பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வந்தது. 1. உளவியலாளர் விக்டர் பிராங்கிள் 2. மாக்சிமில்லியன் கோல்பே.

விக்டர் பிராங்கிள்.

விக்டர் பிராங்கிள்

ஆஸ்ட்டிரியாவில் 1905-ல் பிறந்தவர் விக்டர் பிராங்கிள். உளவியலும், மருத்துவமும் படித்து, உளவியலாளராகவும், மருத்துவராகவும் பணியாற்றினார். ஆஸ்டிரியாவை ஜெர்மனி நாஜிக்கள் கைப்பற்றினர். பிராங்கிள், அவரின் மனைவி, பெற்றோர் மற்றும் சகோதரரை கைது செய்து செக் குடியரசில் இருந்த டெரசின் கெட்டோவில் அடைத்தனர். பிறகு, ஆஸ்விட்ச் வதை முகாமுக்கு 1944-ல் மாற்றினர். இங்குதான் பிராங்கிளின் சகோதரர், மனைவி, அம்மா மூவரும் கொல்லப்பட்டார்கள்.

மாக்சிமில்லியன் கோல்பே.

மாக்சிமில்லியன் கோல்பே

1894-ல் போலந்தில் பிறந்தவர் மாக்சிமில்லியன் கோல்பே (Maximilian Kolbe). இவர் பிரான்சிஸ்கன் துறவு சபை பாதிரியார். 1939-ல் போலந்தைக் கைப்பற்றிய ஜெர்மன் நாஜிக்களுக்கு எதிராகக் களமாடினார். சந்தேகத்தின் பெயரில் 1939-ல் கோல்பேயை கைது செய்து, 3 மாதங்களில் விடுதலை செய்தார்கள். 1941-ல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போலந்து அகதிகளுக்கு துறவு மடத்தில் இடம் கொடுத்தார். அதில் பாதிக்கும் அதிகமானோர் யூதர்கள். மேலும், தன் அச்சகம் வழியாக தொடர்ந்து ஜெர்மன் நாஜிக்களுக்கு எதிராகவும் எழுதினார். எனவே, பிப்ரவரி 17, 1941-ல் கோல்பேயைக் கைது செய்து, ஆஸ்விட்ச் வதை முகாமுக்கு கொண்டு சென்றார்கள்.

10 பேர் உயிர்விட்ட பட்டினிச் சிறை.

உயிர் கொடுத்த மாமனிதன்

1941, ஜுலை மாதம் ஒருவர் முகாமிலிருந்து தப்பி ஓடிவிட்டார். கோபப்பட்ட அதிகாரி, 10 கைதிகளை பட்டினிச் சிறையில் கொல்ல உத்தரவிட்டார். தேர்வு செய்யப்பட்ட கைதிகளுள் ஒருவரான பிரான்சிஸ்லெக் தன் குடும்பத்தை நினைத்துப் பதறி, “என் மனைவியே, என் பிள்ளைகளே” என்று கதறினார். இதைக் கண்ட கோல்பே, அதிகாரியின் அருகில் சென்றார். “நான் பாதிரியார். எனக்கு மனைவியோ, பிள்ளைகளோ இல்லை. அந்தக் குறிப்பிட்ட கைதிக்காக நான் பட்டினிச் சிறைக்குச் செல்கிறேன்” என்றார். அதிகாரி சம்மதித்தார். 10 பேரும் சுரங்க பட்டினிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். ஒவ்வொருவராக செத்தார்கள். இரண்டு வாரங்களுக்குப் பிறகும், கோல்பேயும் மற்ற சிலரும் சாகாமல் இருந்ததாலும், வேறு கைதிகளுக்கு இடம் தேவைப்பட்டதாலும் இவர்களுக்கு விஷ ஊசி போட்டு கொன்றனர்.

பின்னாளில், பிரான்சிஸ்லெக் சொன்னார், “அவரின் கண்களை மட்டுமே பார்த்து என்னால் நன்றி சொல்ல முடிந்தது. என்ன நடக்கிறது என்றே என்னால் முழுமையாக யூகிக்க முடியவில்லை. தண்டனைக்கு அழைக்கப்பட்ட நான் உயிர் வாழப்போகிறேன். ஆனால், யாரோ ஒருவர் விருப்பப்பட்டு எனக்காக அவர் உயிரைக் கொடுக்கிறார். கோல்பேயிடம் எதுவும் சொல்வதற்கு போதுமான நேரம் கிடைக்கும் முன்பாகவே மறுபடியும் நான் சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால், இதையெல்லாம் உங்களிடம் சொல்ல முடிந்ததற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்”.

(பாதை நீளும்)

பெட்டி செய்தி:

பிரிக்கவே முடியாதது எதுவோ?

வதை முகாம் சுதந்திரம் பெற்றபோது, விடுவிக்கப்பட்ட ஃபிராங்கிளின் எழுதிய புகழ்பெற்ற புத்தகம் Man’s search for meaning. இதை ஒன்பதே நாளில் எழுதினார். வாழ்வின் அர்த்தம் கண்டுபிடிக்கும் லோகோ தெரபி எனும் உளவியல் சிகிச்சையை அறிமுகப்படுத்தினார். அதில், ‘வாழ்வின் எல்லாச் சூழலிலும் அர்த்தம் உள்ளது, அதைக் கண்டுபிடிக்கும் உள்ளார்ந்த ஆற்றல் ஒவ்வொருவரிடமும் உள்ளது, யாராலும் அதைப் பறிக்க இயலாது’ என்கிறார் ஃபிராங்கிளின்.

x