இது டாஸ்மாக் இல்ல... ஜூஸ்மாக்!


கும்பகோணம் மகாமகக் குளத்தின் மேல்கரையில் இருக்கிறது அந்தக் கடை. மதிய நேரம்... கொளுத்தும் வெயிலில் கடையின் உள்ளே நுழைந்த வாடிக்கையாளர் ஒருவர், “ ஒரு கிளாஸ் வோட்கா கொடுங்க” என்று கேட்டபடி அமர்கிறார். அங்கிருக்கும் பெண்கள் சிரித்தபடி அவருக்கு லெமன் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கிறார்கள். அவரும் சிரித்தபடி அதைவாங்கி அருந்துகிறார். இன்னொருவர் வந்து, “ ஒரு கிளாஸ் பிராந்தி” என்று ஆர்டர் கொடுக்க, அவருக்கு திராட்சை ஜூஸ் கொடுக்கப்படுகிறது. அது டாஸ்மாக் கடையில்லை என்பதும், அவர்கள் விளையாட்டுக்குத்தான் அப்படி கேட்கிறார்கள் என்பதும் இருதரப்புக்கும் தெரியும். இருந்தும் அவர்கள் அப்படிக் கேட்பதற்கு காரணம் ‘ஜூஸ்மாக்’ என்ற அந்தக் கடையின் பெயர்ப்பலகைதான்.

ஒரே பாடலில் ஓகோன்னு வாழ்க்கை என்பது சினிமாவில் தான் சாத்தியம் என்பார்கள். அதேபோன்றதொரு சிந்தனையில் தனது பழச்சாறு கடைக்கு ‘டாஸ்மாக்’ ஸ்டைலில் ‘ஜூஸ்மாக்’ என்று பெயர் வைத்ததால் தமிழ்கூறும் உலகில் நற் புகழடைந்திருக்கிறார் கடை உரிமையாளர் சதீஷ்குமார். நீங்களும் வலைதளங்களில் பார்த்து ரசித்த அந்த ’ஜூஸ்மாக்’ தான் இவரது கடையின் பெயர். அச்சு அசலாக டாஸ்மாக் பெயர் வடிவம், வண்ணம் போன்றே வடிவமைக்கப்பட்டிருக்கும் இவரது கடையின் பெயர் பலகையைப் பல லட்சம் பேர் பகிர்ந்து வியந்திருக்கிறார்கள்.

கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டைதான் சதீஷ்குமாரின் சொந்த ஊர். டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். அத்துடன் வளசரவாக்கம் பகுதியில் ஏ.சி சர்வீஸ் மற்றும் விற்பனையைச் சொந்தமாக செய்துவந்தார். ஒருகட்டத்தில் சொந்த ஊர் எண்ணம் மேலோங்க, அந்தநேரம் கரோனா பெருந்தொற்று காலமும் துவங்கியதால் சென்னைக்கு டாட்டா சொல்லிவிடு கிளம்பி சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இங்கு வந்தபிறகு வருமானத்துக்கு சுயதொழில் தொடங்கவேண்டும் என்று சிந்தித்தபோதுதான் இந்த பழச்சாறு கடை தொடங்கப்பட்டது.

கடையின் உள்ளே

கும்பகோணம் மகாமகம் குளம் மேல்கரையில் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்த ‘ஜூஸ்மாக்’ கடையை நடத்தி வருகிறார் சதீஷ்குமார். அப்போதெல்லாம் இல்லாமல் இப்போது திடீரென இவரது கடைப்பெயர் இந்த அளவுக்கு வைரலானதற்கு தற்போது டைமண்ட் தியேட்டர் அருகில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இன்னொரு கிளைதான் காரணம். பழைய கடை மகாமக குளத்தின் அருகே இருப்பதால் அது அதிகம்பேர் கண்ணில் படவில்லை. புதிய கடை பிரதானச் சாலையில் இருப்பதால் அனைவருக்கும் நன்கு தெரிகிறது. அதைப்பார்த்து ஆச்சரியப்பட்ட யாரோ அதை புகைப்படம் எடுத்து பகிரவும் அது வைரலாகியிருக்கிறது.

“இதென்ன புதுசா இருக்கு... “ என்று பெயர்ப்பலகையை பார்ப்பவர்கள் ஆச்சரியமடைகிறார்கள். குடிமகன்கள் பலரும் டாஸ்மாக் கடையோ என நினைத்து உள்ளே வந்துவிட்டு பழச்சாறுகளை பார்த்து அசடு வழிந்தவாறு வெளியேறுகிறார்கள். ஒரு டாஸ்மாக் கடை எப்படியிருக்குமோ அதேமாதிரிதான் இருக்கிறது ஜூஸ்மாக். அதே வண்ணம், அதே எழுத்தில் ஜூஸ்மாக் என்றுள்ள பெயர்ப்பலகையில், ‘பழரசம் நாட்டிற்கும், வீட்டிற்கும், உயிருக்கும் நன்மை’ என்று எழுதப்பட்டுள்ளது.

மனைவி, குழந்தைகளுடன் சதீஷ்குமார்

’’மதுவால் ஏற்படும் தீமைகளைப் பற்றி தெரிந்தும் அதன் வியாபாரம் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன் காரணமாகவே அதேவடிவத்தை எனது ஜூஸ் கடைக்குக் கொடுக்க நினைத்தேன். வித்தியாசமான முயற்சிகள் எப்போதுமே வெற்றி பெற்றிருக்கின்றன என்பதும் தெரியும். டீ ஸ்டால் போடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இந்த இடத்துக்கு பக்கத்திலேயே மூன்று பெரிய டீக்கடைகள் இருந்ததால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு ஜூஸ் கடை வைக்க முடிவு செய்தேன். நல்ல பழங்களைக் கொண்டு, சுவையான ஜூஸ்களை மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்தாலும் கடையின் பெயர் ‘ஜூஸ்மாக்’ தான் என்பதில் உறுதியாக இருந்தேன்.

சதீஷ்குமார்

என் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். அண்ணனும், அக்காவும் காவல்துறையில் பணிபுரிகிறார்கள். அதனால் அவர்கள் இதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்ற அச்சத்தில் ஜூஸ்மாக் மேட்டரை அவர்களிடம் மூச்சுவிடவில்லை. நானும், எனது நண்பர் ஒருவரும் மட்டும் இதைப்பற்றி விவாதித்து முடிவு செய்தோம். எனது மனைவியிடம் மட்டும் இதைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். அவரது ஆதரவு இருந்ததால் துணிந்து இறங்கினேன். பெயர் பலகை தயாரிக்கிறவர்கூட, ‘இதெல்லாம் சரிப்படுமா தம்பி... கொஞ்சம் யோசிங்க’ என்றுதான் சொன்னார்.

ஆரம்பத்தில் சில நாட்கள் கொஞ்சம் டல் தான். ஜூஸ்மாக் என்றால் என்ன என்ற ஆர்வத்தில் உள்ளே வந்தவர்களும், சும்மா போய் ஒரு ஜூஸ் குடித்துப் பார்ப்போமே என்ற நினைப்பில் உள்ளே வந்தவர்களும்தான் அதிகம். அவர்கள் தான் எங்களுக்கான விளம்பர தூதுவர்களாகவும் மாறினார்கள்.

இருபது ரூபாயிலிருந்து ஐம்பது ரூபாய்க்குள் கண் முன்னால் பழங்களை நறுக்கி ஜூஸ் போட்டுத் தருவதையும், அதன் அளவு மற்ற கடைகளை விட அதிகமாக இருப்பதையும் பார்த்துவிட்டுப் போய் மற்றவர்களுக்குச் சொல்லி விளம்பரத்தைத் தேடித் தந்தார்கள். சென்ற கோடைக்குப் போதுமான வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டு இப்போதே மக்கள் தேடிவர ஆரம்பித்து விட்டார்கள்.

மக்களின் வரவேற்பு அதிகமாக இருந்ததால் அடுத்த கிளையை திறந்துவிட்டேன். அங்கும் நல்லமுறையில் வியாபாரம் ஆகிறது. அதன்மூலம் நல்ல விளம்பரமும் ஆகியிருக்கிறது. இரண்டு கடைகளிலும் பெண்கள்தான் வேலைக்கு இருக்கிறார்கள். அதனால் கடையின் உள்ளே சூழலும் சரியாக இருக்கிறது. பெண்கள் குடும்பத்துடன் வருகிறார்கள். அவர்களுக்குச் சுத்தம், விலை, திருப்திதரும் சேவை என்று எல்லாவற்றையும் சரிவர செய்கிறோம். அதனால் வியாபாரத்துக்குக் குறைவில்லை” என்று ஜூஸ்மாக் உதயமான வரலாறைச் சொன்னார் சதீஷ்குமார்.

நாங்கள் எல்லாம் தேடிவந்து பேட்டி எடுக்குமளவுக்கு கடை பிரபலமாகும் என்று நினைத்தீர்களா? என்று அவரைக் கேட்டதற்கு, “கடையின் பெயர் பிரபலம் ஆகும் என்று நினைத்துத்தான் இந்தப் பெயரை வைத்தோம். ஆனால் அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது கடைக்குப் புதிதாக வருகிறவர்கள், ‘வாட்ஸ் - அப்பில் பார்த்தேன்... ஃபேஸ் புக்கில் பார்த்தேன்’ என்று சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடையின் வாடிக்கையாளர்களில் எங்களைப் பற்றி நல்லவிதமாக பேசுவதே எங்களுக்கான வெற்றி. எப்போதுமே நல்ல பொருளுக்கு மக்கள் மதிப்பளிப்பார்கள். அதற்கு எங்கள் கடையும் ஒரு உதாரணம். தயவுசெய்து, மது அருந்துபவர்கள் அதை விட்டொழித்து பழச்சாறுகளை அருந்துங்கள்” என்பது மட்டுமே இந்த நேரத்தில் உங்கள் மூலமாக நான் வைக்கும் வேண்டுகோள்” என்றார்.

டாஸ்மாக்கை மறக்கச் சொல்லும் சதீஷ்குமாரின் ஜூஸ்மாக் கடைகள் இன்னும் பல கிளைகள் பரப்பட்டும்!

x