இசை வலம்: மூப்பில்லா தமிழின் முத்திரை!


தமிழின் பெருமையை, சிறப்புகளை, தனித்தன்மையை ஒரு பாடலில் புரியவைத்துவிட முடியுமா? பாவேந்தர் பாரதிதாசன் 'தமிழுக்கும் அமுதென்று பேர்... அந்தத் தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடியிருப்பார். அந்த மரபின் தொடர்ச்சியாக ‘மூப்பில்லா தமிழே தாயே’ எனும் பாடலை எழுதியிருக்கிறார் தாமரை. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அவருடைய மகன், மகள் மற்றும் குழுவினருடன் பாடி வெளியிட்டிருக்கும் இந்தத் தமிழிசைப் பாடல், உலகம் முழுவதும் இருக்கும் இசை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதற்கு முன்பாக செம்மொழி மாநாட்டுக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ பாடலின் வகைமைக்கு நெருக்கமாக இந்தப் பாடலின் இசையும் இருந்தாலும் அதைவிட பல மடங்கு ரசிகர்கள் இதைக் கொண்டாடுவதற்குக் காரணம், இதில் இருக்கும் எளிமையான அணுகுமுறை. கர்னாடக இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய இசையின் நுணுக்கங்கள் போன்ற எல்லாமும் சரிவிகிதத்தில் காதுகளுக்குத் திகட்டாத மேம்படுத்தப்பட்ட இசையோடு வழங்கியிருப்பதுதான்.

`இண்டிபெண்டன்ஸ் டே’ திரைப்படத்தை ஞாபகப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட பொன் வளையம் பாடல் காணொலியின் தொடக்கத்தில் தோன்ற, அது என்னவாக இருக்கும் என்னும் ஆர்வத்தைக் காணொலியின் இறுதிவரை அருமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

தமிழின் பழைமையை, தொன்மையை, இலக்கியச் செழுமையைப் போற்றுகிறது பாடலின் முதல் பகுதி. வெறுமனே பழம் பெருமை பேசுபவர்கள் மட்டுமல்ல தமிழர்கள், அறிவியல், இணையம், கணினி குறித்தும் பேசுவார்கள் என்பதை விளக்குகிறது இரண்டாம் பகுதி. பழமைக்கும் புதுமைக்கும் தமிழ்ப்பாலத்தால் பலமான இணைப்பை உண்டாக்கியிருக்கிறார் தாமரை.

'விஞ்ஞானத் தமிழாய் ஒன்று

வணிகத்தின் தமிழாய் ஒன்று

இணையத்தின் நூலைக் கொண்டு

இணையும் தமிழ் உலகப் பந்து

மைஅச்சில் முன்னே வந்தோம்

தட்டச்சில் தனியே நின்றோம்

கணினிக்குள் பொருந்திக்கொண்டோம்

கலைக்கேற்ப மாறிக்கொள்வோம்

உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம்

உள்வாங்கி மாறிச் செல்வோம்

பின்வாங்கும் பேச்சே இல்லை, முன்னோக்கிச் சென்றே வெல்வோம்!

புதுநுட்பம் என்றே எதுவும் கால் வைக்கும் முன்னே

தமிழும் ஆயத்தம் கொள்ளும் அழகாய்...

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும்! புறம் என்றால் போராய்ப் பொங்கும்! தடையின்றிக் காற்றில் எங்கும் தமிழென்று சங்கே முழங்கும்!'

சமாதானத்துக்கு சாமரம் வீசவும் தெரியும். சமர் என்றால் ஆயுதம் தரிக்கவும் தெரியும் என்கிறார் தமிழின் அத்தனை எழுத்துகளையும் ஆயுத எழுத்துகளாக்கிய தாமரை!

மூப்பில்லா தமிழின் உன்னதம் சொல்லும் பாடலுக்கு: https://www.youtube.com/watch?v=JDYiJGTOFHU

தடை அதை உடை!

கண்ணியம், கனிவு, பணிவு இத்தனை அருங்குணங்களோடு மட்டுமே ஒரு பெண் இந்தக் காலத்தில் இருந்தால் போதாது. அளப்பரிய சக்திகளைத் தன்னுள் கொண்ட பெண், தனக்கு எதிரான பழமைவாதங்கள், ஆணாதிக்கவாதிகளின் போக்குகளை அடக்க ரௌத்திரம் பழகுபவளாகவும் இருக்க வேண்டும். தாலாட்டு மட்டும் அல்ல, போர்ப்பரணி பாடவும் தெரிந்தவளாக பெண் இருக்க வேண்டும் என்பதைத் தன்னுடைய இனிமையான ஆனால் காத்திரமான குரலில் சித்ரா பாடுவதைக் கேட்டால், பெண்களிடையே தீரம் குடிகொள்ளும்.

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘புரொடக்ஷன் அண்ட் எம்பவர்மென்ட் ஆஃப் நாரி’ எனும் (PENN) அமைப்பு அண்மையில் தங்களின் இரண்டாம் ஆண்டுத் தொடக்கத்தை ஒட்டியும் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடும் வகையிலும் பெண்ணின் பன்முகத் திறனை விளக்கும் பாடலை கே.எஸ்.சித்ராவைக் கொண்டு பாடவைத்து அதைக் காணொலியாக வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை வடிவமைத்து, இயக்கியிருப்பவர் இந்த அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவரான வே. ஸ்ரீராம் சர்மா.

இந்த அமைப்பின் தலைமை அறங்காவலரான வி.எஸ்.ஸ்ரீதர், “இந்தியாவிலும், உலகத்திலும் நிலவக்கூடிய மிகவும் மோசமான பிரச்சினை பாலியல் வன்முறைதான். இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தவும், பெண் கல்வியை ஊக்குவிக்கவும், பெண்களுக்கு அதிகாரமளிக்கவும் ஏராளமான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு முதலில் ஒரு பெண் தனக்கிருக்கும் அபாரமான சக்தியை உணர வேண்டும். தான் எப்போதும் பலவீனமானவள் அல்ல, ஆணுக்கு எந்த விதத்திலும் குறைந்தவள் அல்ல என்பதை உணர வேண்டும். அதற்கான ஒரு சிறிய முயற்சிதான் இந்தக் காணொலிப் பாடல்” என்கிறார்.

பெண்ணின் பெருமை பேசும் பாடலுக்கு:

https://www.youtube.com/watch?v=6OfF1_TyxXI

அமைதி தவழ போரை நிறுத்து!

தனி மனிதர்களின் சுயநலம், ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகத்தான் இந்த உலகத்தில் போர்கள் நடக்கின்றன. புராணகாலம் தொடங்கி மனித வரலாற்றின் புத்தகத்தில் போர்களைக் குறிக்கும் பக்கங்கள் ரத்தத்தைப் பூசிக்கொண்டிருக்கின்றன. இனத்தின் பேராலும், மதத்தின் பேராலும், ஆதிக்க வெறியாலும் அமைதிப் பூங்காக்களாகத் திகழும் பூமிப் பூங்காவைப் போர்க்களமாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

புழு, பூச்சி, பறவைகள், மனிதர்கள் என சகல உயிர்களையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கொன்று குவிப்பதால்தான், போரின் கொடுமையை உணர்ந்ததால்தான் ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்... புதியதோர் உலகம் செய்வோம்' என்று ஒரு கவிஞரால் பாட முடிந்தது.

இதோ மீண்டும் உலகத்தில் சூழ்ந்துள்ளன போர் மேகங்கள். இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீளமுடியாத தலைமுறைகள் இருக்கும் சூழ்நிலையில், இன்னொரு உலகப் போரை உலகம் தாங்குமா? எத்தனை மழலைகள், எத்தனை கனவுகள்? அத்தனையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டு நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியை, போரை முன்னின்று நடத்தும் நாடுகளைப் பார்த்து கேட்கிறது இந்தக் காணொலிப் பாடல்.

‘போரை நிறுத்து போரை நிறுத்து மனிதா...

அமைதி வேரை அறுக்கும் போரை நிறுத்து மனிதா...

நிறவெறி மதவெறி கடந்து வந்தாய் மனிதா

நிலவெறி மட்டும் நீள்கிறதே நியாயமாயிது மனிதா’

என்று மனிதனின் மண்ணாசையைப் பொட்டில் அடித்தாற்போல சொல்கின்றன பாடலின் வரிகள். சங்கரன்கோவில் வேலன் சங்கர் ராம் எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்து தன் மகள் யாழ்நங்கையுடன் இணைந்து பாடியிருக்கிறார் ராஜபாளையம் உமாசங்கர். மியூசிக் டிராப்ஸ் என்னும் இவரின் யூடியூப் வலைதளத்தில் சமூகத்திற்கு நல்ல செய்திகளை பாட்டின் மூலம் பரப்பும் பல காணொலிகள் காணக்கிடைக்கின்றன.

போரை நிறுத்து பாடலைக் காண:

https://www.youtube.com/watch?v=RmmSCu4GzP0

x