மணக்குடி அலையாத்தி மரம் வளர்ப்பில் சர்ச்சை


மணக்குடி காயல் பகுதியில் செழித்து வளர்ந்து நிற்கும் அலையாத்தி காடுகள்

சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் இயற்கை அரணாக நின்று மக்களைக் காக்கும் அலையாத்திக் காடுகளை இன்னும் அதிகரிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மணக்குடி மீனவ கிராமத்தில் ஏற்கெனவே இருக்கும் அலையாத்திகளோடு, கூடுதல் அலையாத்திகளை நடும் பணி நடந்து வருகிறது. அலையாத்திக் காடுகளை உருவாக்குவதில் நிபுணத்துவம் இல்லாத நூறுநாள் பணியாளர்களைக் கொண்டு இதை நடவு செய்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மணக்குடியில் ஏற்கெனவே அலையாத்திக்காடுகள் உருவாக்கப்பட்டு வளர்ந்து நிற்கின்றன. அலையாத்திக் காடுகள் இயற்கை தடுப்பு அரணாக மட்டுமல்லாது, கடலும், காயலும் சேரும் பொழிமுகப் பகுதிகளில் மீன், இறால், நண்டு ஆகிய உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்கும் ஏதுவாக உள்ளது. இதனோடு பல்லுயிர் பெருக்கத்திற்கும் வழிவகுக்கிறது. அலையாத்திக்காடுகளினால் மணக்குடிப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டுப் பறவைகளும் படையெடுக்கின்றன.

இந்நிலையில் மணக்குடி பகுதியில் புதிதாக 50 ஆயிரம் அலையாத்திக் காடுகளை வளர்க்க வனத்துறை முடிவு செய்து பணியைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் பணியினை நூறுநாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை சேர்ந்த பணியாளர்கள் வசம், மணக்குடி ஊராட்சியின் வழியாக செயல்படுத்தத் தொடங்கி உள்ளது. வேம்பு, புங்கை என மற்ற மரம், செடி நடவைப் போல் இல்லாமல் அதில் இருந்து முற்றாக மாறுபட்டதுதான் அலையாத்திக் காடுகள். இதை நேரடி நடவு, விதை உருவாக்கி நடுவது உள்பட மூன்றுவகைகளில் நடமுடியும். இதேபோல் அலையாத்திக்காடுகள் வளர்வதற்கு ஏற்ற மண் தன்மையையும், சூழலையும் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நுட்பங்களும் ஏராளம் உள்ளன. இந்த நுட்பங்கள் தெரியாத நூறு நாள் பணியாளர்களை பயன்படுத்தி அலையாத்திக்காடுகளை உருவாக்குவது அத்திட்டத்தின் நோக்கத்தையே சிதைக்கும் அபாயம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

x