தமிழர்களின் தொன்மையை உலகுக்கே பறைசாற்றிய தொல்காப்பியத்தில் எழுதப்பட்ட ’மெய்ப்பாட்டியல்’ பகுதியிலும், சிலப்பதிகாரத்தின் ‘புகார்’ காண்டத்தின் ‘அரங்கேற்றுக்காதை’ பகுதியிலும் போற்றப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய நடன வடிவம் சதிராட்டம். பரத முனிவர் நாட்டிய சாஸ்திரத்தை எழுவதற்கு முன்பே தமிழர்களிடம் நாட்டியக்கலை இருந்ததற்கான சான்றுகள் இவை. அந்த வகையில் பரதநாட்டியத்தின் ஊற்றுக்கண் சதிராட்டம். இந்த நடனக் கலையை தேவரடியார்கள் என்றழைக்கப்படும் பெண்களே நிகழ்த்தி வந்தனர்.
இறைவனுக்குத் தொண்டு செய்யும் விதமாகக் கோயில்களில் சதிராட்டம் நிகழ்த்திவந்த அப்பெண்களுக்குப் பல நூற்றாண்டுகளாக அரச குடும்பத்தினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் மதிப்பும் மரியாதையும் இருந்துவந்தது. மன்னர்கள் இவர்களை கவுரவித்து அரசு விழாக்களில் சதிராட்டம் ஆடச் செய்து கொண்டாடினார்கள். பொது மக்கள் தங்களது இல்ல விசேஷங்களுக்கு சதிராட்டக் கலைஞர்களை அழைத்து மரியாதை செலுத்தும் வழக்கமும் இருந்துவந்தது. அத்தகைய மாண்புக்குரிய சதிராட்டக் கலையின் ஏழாம் தலைமுறையைச் சேர்ந்தவர்தான் முத்துக்கண்ணம்மாள்.
திருச்சி விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலின் 32 தேவரடியார்களில் உயிருடன் இருக்கும் ஒரே சதிராட்டக் கலைஞர் இவர் மட்டுமே. 83 வயது நிரம்பிய முத்துக்கண்ணம்மாளுக்கு நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதளித்து அவருக்கும், சதிராட்டக் கலைக்கும் பெருமை சேர்த்துள்ளது இந்திய அரசு.
மகத்தான நடனக் கலைஞர்களையும் இசைஞர்களையும் கொண்ட இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த மறைந்த ராமச்சந்திர நட்டுவனாரின் மகள் முத்துக்கண்ணம்மாள். விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கும், புதுக்கோட்டை சமஸ்தானத்துக்குமான ஆஸ்தான நடனக் கலைஞராக தலைமுறை தலைமுறையாகத் தொண்டு செய்துவந்தக் குடும்பத்தின் கடைசி வாரிசு. இந்த வயதிலும் விராலிமலை சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்று அரை மணிநேரமேனும் சன்னிதியில் ஆடிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முத்துக்கண்ணம்மாள்.
இத்தனை பெருமைக்குரிய முத்துக்கண்ணம்மாளை தொடர்பு கொண்டு சதிராட்டத்தின் மகத்துவம் பற்றி பேசினோம். “பாடிக்கொண்டே ஆடுவதுதான் சதிராட்டத்தின் முதல் தனித்துவம். அதிலும் ஒலிவாங்கி, ஒலிபெருக்கியெல்லாம் இல்லாமல், அலங்கார விளக்குகள் ஏதுமின்றி அசலான கலைவடிவமாக நிகழ்த்துவதே இதன் உன்னதம். மேலும், இதிலிருக்கும் அசைவுகள் பரதநாட்டியத்தைவிடவும் பல மடங்கு கடினமானது” என்று வயோதிகத்தை மீறி உற்சாகமாகப் பேசத் தொடங்கினார் முத்துக்கண்ணம்மாள்.
மேலும் அவர் கூறுகையில், “ஏழு வயதிலிருந்து சதிராட்டம் ஆடி வருகிறேன். கோடங்குடி, வடமதுரை, காரைக்குடி, வலையபட்டி, கண்டரமாணிக்கம், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கொச்சிவரை எனது நாட்டிய குருவான எனது அப்பா நட்டுவனார் ராமச்சந்திரனோடு சென்று பல நடன நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பலமுறை விருதுகளால் கவுரவிக்கப்பட்டிருக்கிறேன்.
தை, வைகாசி மாதங்கள் வந்தால் மண்டகப்படியில் சாமி வந்திறங்கும் பத்து நாட்களும் சதிர், கும்மி, கோலாட்டமெல்லாம் ஆடுவோம். காலையில் மாவைரைத்து எடுத்துச் சென்று, ‘ஓம் சரவணபவ’ என கோயில் முழுவதும் எழுதுவோம். உச்சிகால பூஜை முடிந்ததும் வீடு திரும்பிடுவோம். மாலையானால் மீண்டும் கோயிலுக்கு அப்பாவோடு போய் அவர் பாட, நானும் மற்ற தேவரடியார்களும் சன்னிதியில் நடனமாடுவோம். கோயிலுக்குள் சாமி சுற்றிவரும்போதெல்லாம் நாங்களும் ஆடுவோம். அந்த காலத்தில் அப்பா கணீர் குரலில் கே.பி.சுந்தராம்பாள் மாதிரி பாடுவார். ஆகையால் அவர் சினிமாவில் ஆடி பாட அழைக்கப்பட்டார். ஆனால், சதிராட்டம்தான் உயிரென்று அப்பா இங்கேயே இருந்துவிட்டார்” என்றார்.
புதுக்கோட்டை சமஸ்தானத்துக்கு ராஜகோபால தொண்டைமான் மன்னராக வீற்றிருந்த காலத்தில் 10 வயது சிறுமியாக நடனமாடிய நாட்களையும் நம்மிடம் நினைவுகூர்ந்தார் முத்துக்கண்ணம்மாள். “ராஜா இருந்தவரை தேவரடியார்களுக்கும், நட்டுவனார்களுக்கும் மாத சம்பளத்தையும் உணவையும் கொடையாக வழங்கிவந்தார். ஆனாலும் காலணாவும் ரெண்டு நபர்கள் சாப்பிடக்கூடிய உணவும் மட்டுமே வழங்கப்பட்டது. திருவிழா நேரத்தில் ராஜா கோயிலுக்கு வருகை தந்து, ஆரத்தி எடுப்பவர்களுக்கெல்லாம் வெள்ளி நாணயங்களை அள்ளித் தருவார். நானும் சிறுமியாக சமஸ்தானத்துக்குப் போய் நடனமாடி பாராட்டும் பரிசும் வாங்கியிருக்கிறேன்.
என்னுடன் சேர்த்து 31 தேவரடியார்களும் தங்களுடைய சதிராட்டத்துக்காக மட்டுமே அழைக்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்கள். மற்றபடி அப்போதும் மேளக்காரர், நாயனம் வாசிக்கும் ஆண்களுக்கு மட்டுமே வீடு, நிலமெல்லாம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டதே தவிர எங்களை போன்ற பெண் தேவரடியார்களுக்கு வீடோ, நிலமோ கொடையாகக் கொடுக்கப்படவில்லை” என்கிறார் முத்துக்கண்ணம்மாள்.
தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டம் 1947-ல் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டே புதுக்கோட்டை சமஸ்தானமும் கலைக்கப்பட்டது. இதன் விளைவாக அதுவரை செல்வச்செழிப்பு இல்லாவிடிலும் ஊருக்குள் நடன கலைஞர்களாக மதிக்கப்பட்டுவந்த இவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறிப்போனது. ஏளனப் பார்வையும் பேச்சும் துரத்த வாழ்வாதாரத்துக்கு இட்லி தோசை மாவு அரைத்து விற்க ஆரம்பித்தார் முத்துக்கண்ணம்மாள்.
அந்த சமயத்தில் விராலிமலை டூரிங் டாக்கீஸில் டிக்கெட் கிழித்துக் கொடுக்கும் வேலை செய்துவந்த தண்டாயுதத்துடன் காதல் மலர்ந்தது. இருவரும் இணை பிரியாமல் வாழ ஒருமனதாக முடிவெடுத்து இல்லற வாழ்க்கையை நல்லறமாகத் தொடங்கினர். இரு மகன்களையும், இரு மகள்களையும் பெற்றெடுத்து வளர்த்து அவர்களும் அடுத்த தலைமுறையை ஈன்றெடுத்து பேரப்பிள்ளைகளுடன் தற்போது முத்துக்கண்ணம்மாள் பழுத்த மூதாட்டியாக வாழ்ந்துவருகிறார்.
இந்த வயதிலும் தன்னை நாடிவருபவர்களுக்கு முத்துக்கண்ணம்மாள் சதிராட்டத்தை அர்பணிப்புடன் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். நடனக் கலைஞர் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஸ்வர்ணமால்யா உட்பட பலர் இவரிடம் நடனம் பயின்றிருக்கிறார்கள். இருந்தபோதும் முத்துக்கண்ணம்மாள் வாழ்க்கை வறுமையில் உழல்கிறது.
“சதிராட்டம் நிகழ்த்த வெளியூர் செல்லும்போதெல்லாம் கற்றுக் கொள்ளச் சிலர் ஆசைப்படுவார்கள். ஆனால், புடவை வாங்கிக் கொடுத்து 250 ரூபாய் அல்லது 500 ரூபாய் மரியாதைக்கு தருவார்களே தவிர பெரிய வருமானமெல்லாம் இதன் மூலமாகக் கிடைத்ததே இல்லை. அருகிலிருக்கும் பள்ளியில் வெறும் 15 ரூபாய்க்கு சதிராட்டம் பயிற்றுவித்தேன். மாணவிகள் வரவில்லை என்று அதையும் நிறுத்தி விட்டார்கள். இப்போது அதே பள்ளி என்னை அழைத்து பத்மஸ்ரீ விருதுக்கு பாராட்டுகிறது.
அரசு வழங்கும் மூவாயிரம் ரூபாய் மானியம் போதவில்லை. என்னோடு விராலிமலையில் சதிராட்டமாடிய மற்ற 31 தேவரடியார்களும் வயோதிகத்தினாலும் வறுமையினாலும் இறந்துவிட்டார்கள். நான் மட்டுமே எஞ்சியிருக்கிறேன். எனக்கு அரசாங்கம் ஒரு இடத்தை அமைத்துக் கொடுத்தால் நிச்சயமாக இந்த கலையை மேலும் பலருக்கு கற்றுத்தர வாய்ப்பாக அமையும்” என்றார் முத்துக்கண்ணம்மாள்.
தமிழகத்தின் பாரம்பரிய நாட்டியம் என்று பரதம் கொண்டாடப்படும் அதேவேளையில் அதன் தாய் கலையான சதிராட்டம் அழிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. திராவிடத்தைப் போற்றும் அரசு சதிராட்டக் கலையை மீட்டெடுக்க வேண்டும். கலைஞர்களை காப்பாற்றாமல் கலையை காப்பாற்ற முடியாது. ஆகையால் முத்துக்கண்ணம்மாள் போன்ற சதிராட்ட கலைஞர்களுக்கு ஊக்கமும், உதவித்தொகையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி அடுத்த தலைமுறைக்கு இக்கலையை கடத்த உதவ வேண்டும்.
முற்போக்கு முதல்வரின் ஆட்சியில் இதுவும் நடக்கும் என்று நம்புவோம்!