ஏப்.1-ல் தொடங்குகிறது தேக்கடி மலர்க் கண்காட்சி


தேக்கடி மலர்க் கண்காட்சி (கோப்புப் படம்)

தமிழக- கேரள எல்லைப் பகுதியான குமுளிக்கு அருகே உள்ள சுற்றுலாத்தலம் தேக்கடி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலாத்தலத்தில் முல்லை பெரியாறு நீர்த்தேக்கம், படகு சவாரி, யானை, புலி போன்ற காட்டுயிர்களை காணுதல் போன்றவற்றுக்காக புகழ்பெற்றது.

சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக மலர்க் கண்காட்சியும் நடத்தப்பட்டுவருகின்றன. இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி வருகிற 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. தேக்கடி குமுளி சாலையில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் நடைபெறும் இந்த மலர்க் கண்காட்சி மொத்தம் 32 நாட்கள் நடைபெறுகிறது.

கேரள வேளாண் மற்றும் தோட்டக்கலை சங்கம், குமுளி ஊராட்சி நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகின்றன. இதற்காக ஏற்கெனவே வளர்க்கப்பட்ட மலர்ச்செடிகளை எல்லாம் கண்காட்சி நடைபெறும் இடத்தில் அழகாக அடுக்குகிற பணியும், ஆங்காங்கே வனவிலங்குகளின் கண்கவர் சிற்பங்களும் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மொத்தம் 1 லட்சம் செடிகள் காட்சிக்கு வைக்கப்படஉள்ளன.

கூடவே சுற்றுலா பயணிகளைக் கவர்வதற்காக, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டி, சமையல் போட்டி, ஓவியப் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி, மாடி காய்கறி வளர்ப்பு கருத்தரங்கம், மழைநீர் சேகரிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம், பாட்டு கச்சேரி, வேளாண்மை கருத்தரங்கு என்று தினந்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

x