வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க எதிர்ப்பு!


வைகை ஆற்றில் மணல் குவாரிகளை அமைப்பதன் மூலம் மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் ஆதாரங்களை தமிழக அரசு அழிக்கப்பார்க்கிறது என்று காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து மார்ச் 31-ம் தேதி பச்சைத்துண்டு பேரணி நடத்தப் போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிகளை அமைக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதற்கு எதிராக தீவிரமானப் போராட்டம் நடத்த வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு கிராமம், கிராமமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இராம.முருகன்.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் இராம.முருகனிடம் கேட்டதற்கு, " மானாமதுரை வைகை ஆற்றில் மணல் குவாரிகள் அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் மழவராயனேந்தல், சம்பராயனேந்தல், முத்தனேந்தல் ஆகிய இடங்களில் மணல் அள்ள அனுமதித்துள்ளது" என்றார்.

இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்று அவரிடம் கேட்டதற்கு, "விரகனூர் அணைக்கு கீழ் உள்ள மதுரை மாநகராட்சி குடிநீர் திட்டம், அருப்புக்கோட்டை நகராட்சி குடிநீர் திட்டம், சிவகங்கை நகராட்சி குடிநீர் திட்டம், கடம்பன்குளம் குடிநீர் திட்டம், மானாமதுரை நகராட்சி குடிநீர் திட்டம், நரிப்பையூர் கூட்டுக் குடிநீர் திட்டம் ஆகியவைப் பாதிக்கப்படும். மேலும், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் மூலம் வழங்கப்படும் 32 நேரடி குடிநீர் திட்டங்கள் என 72 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் முடங்கும் அபாய நிலை ஏற்படும்.

மேலும், பூர்விக வைகைப் பாசனத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, வாழை, மிளகாய் என ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். எனவே, வைகை ஆற்றில் மணல் குவாரிகள் தொடங்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிடக்கோரி மார்ச் 31-ம் தேதி பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து விரகனூர் மதகு அணை வரை இருசக்கர வாகனப் பச்சைத்துண்டு பேரணி நடத்த உள்ளோம்" என்று அவர் கூறினார்.

x