ராமநாதபுரம்: கடல் சீற்றம் குறைந்ததையடுத்து நான்கு நாட்கள் கழித்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 18-ம் தேதி முதல் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிதிருந்ததையடுத்து, மீன்வளத்துறையினர் மீன்பிடி அனுமதிச்சீட்டு வழங்கவில்லை. இந்நிலையில் நான்கு நாட்கள் கழித்து கடல் சீற்றம் குறைந்ததை அடுத்து இன்று (ஜூன்) மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டை பெற்று 507 விசைப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர்.
மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக கைது செய்வதும், தாக்குதல் நடத்துவதும் தொடர் கதையாக நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தினர்.