மரங்களை மரணிக்கச் செய்யும் விளம்பர பலகை ஆணிகள்: அகற்றும் பணியில் அயராத சிறப்பு எஸ்ஐ


மதுரை: மரங்களை மரணிக்கச் செய்யும் வகையில் தனியார் நிறுவனங்களால் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள விளம்பர பலகை ஆணிகளை அகற்றும் பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ராமநாதபுரம் சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன், இன்று மதுரையில் அந்தப் பணியில் ஈடுபட்டார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் சு.சுபாஷ் சீனிவாசன். இவர் சிறப்பு எஸ்ஐ-யாக ராமநாதபுரம் பொருளாதார குற்றப் பிரிவில் பணியாற்றி வருகிறார். சுற்றுச் சூழல் ஆர்வலரான இவர், ஓய்வு நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் சுற்றுச்சூழல் காக்கும் சமூக விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மரங்களின் வலி தெரியாமல், மரங்கள் மரணிக்கும் வகையில் விளம்பர பலகைகளை ஆணி வைத்து அடித்து தனியார் நிறுவனத்தினர் விளம்பரம் தேடுகின்றனர். மரங்களின் தண்டுப்பகுதியில் ஆணி அடிப்பதால் நோய்த்தாக்குல் ஏற்பட்டு நன்கு வளர்ந்த மரங்களும் பட்டுப்போகின்றன.

பல ஆண்டுகள் வளர்ந்த மரங்களை காக்க மரங்களில் ஆணி அடிக்கக்கூடாது என விழிப்புணர்வும், அடித்த ஆணிகளை அகற்றும் பணியிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார் சுபாஷ் சீனிவாசன். பல மாவட்டங்களுக்கும் சென்று இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருகிறார். அதனை யொட்டி இன்று மதுரையில் மாட்டுத்தாவணி தல்லாகுளம் மேலூர் செல்லும் சாலையில் 25 மரங்களில் விளம்பர பலகை ஆணிகளை அகற்றினர். இவருக்கு உதவியாக வழக்கறிஞர் அருண்குமாரும் உடனிருந்து அகற்றினார்.

இது குறித்து நம்மிடம் பேசிய சிறப்பு எஸ்ஐ சு.சுபாஷ் சீனிவாசன், “நன்கு வளரும் மரங்களில் விளம்பர பலகை பொருத்துவதற்காக ஆணி அடிப்பதால் மரங்கள் பட்டுப்போகின்றன. அதனால் மரங்களில் ஆணிகளை அடிக்கக்கூடாதென விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். அதன்படி மதுரையில் மாட்டுத்தாவணி, தல்லாகுளம், தமுக்கம் ஆகிய இடங்களில் 25 மரங்களிலிருந்து விளம்பர பலகை ஆணிகளை இன்று அகற்றினேன். மனிதர்களைப் போன்று மரங்களுக்கும் உயிர் உண்டு. இனிமேலாவது விளம்பரம் தேடும் நிறுவனத்தினர் மரங்களில் ஆணி அடித்து விளம்பரப் பலகை வைப்பதை தவிர்க்க வேண்டும்” என்றார்.