செவித்திறன் குறைபாடுள்ளவரின் வாழ்க்கையை பயிற்சி மூலம் மாற்ற முடியும்: கனிமொழி எம்.பி நம்பிக்கை


மாணவருக்கு காது கேட்கும் கருவியை பொருத்திய கனிமொழி எம்.பி. படங்கள்: என்.ராஜேஷ்.

தூத்துக்குடி: காது கேளாத ஒருவரின் வாழ்க்கையை பயிற்சியின் மூலம் மாற்ற முடியும் என தூத்துக்குடி எம்.பி. கனிமொழி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் செவித்திறன் குறைபாடு கண்டறிதலுக்கான பயிற்சி இன்று நடந்தது. ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை வகித்தார். இதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தூத்துக்குடியில் ஏற்கெனவே மெர்ஃப் (MERF) ஃபவுண்டேசன் செவித்திறன் குறைபாடு உள்ளோருக்கான முகாம் நடத்தி 150 பேருக்கு உபகரணங்கள் வழங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிகிச்சை தேவைப் படுபவர்களுக்கு சென்னைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். குழந்தைகள் பிறந்தவுடன் செவித்திறன் குறையை கண்டறிந்தால் சரி செய்து விட முடியும்.

ஒருவருடைய வாழ்க்கையையே மாற்றக் கூடிய வாய்ப்பு உங்களின் கைகளில் இருக்கிறது. நிறைய குழந்தைகளுக்கு காது கேட்கவில்லை என்பதை தெரிந்து கொள்வதற்கே பல ஆண்டுகள் ஆகிறது. செவித்திறன் குறைபாடுள்ள ஒருவரின் வாழ்க்கையை இந்த பயிற்சி மூலம் மாற்ற முடியும் என்ற உறுதியுடன் செயல்பட்டால் இந்த பயிற்சியை வெற்றிகரமானதாக மாற்ற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற்றால் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த முடியும். அடுத்து இதை நாடு முழுவதுமான ஒரு திட்டமாக நாம் மாற்ற முடியும்.

உங்கள் கைகளில்தான் அடுத்த தலைமுறையினரான இளைஞர்களும், இளம்பெண்களும் செவித்திறன் குறைபாடு பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்கான முயற்சி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி காது கேளாதவர்களுக்கு அரசே சிகிச்சை அளிப்பதற்கான முதல் அரசாணையை வெளியிட்டார். சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த முகாமில் 21 குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியப்பட்டு அவர்களுக்கு காது கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடந்த செவித்திறன் குறைபாடு கண்டறிதலுக்கான பயிற்சியில் கனிமொழி எம்.பி.பேசினார்.

அதில் ஒரு குழந்தையை சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு தூத்துக்குடியில் கல்லூரிக்கு போகக்கூடிய நிலையில் இப்போது இருக்கிறார். இந்தப் பயிற்சிக்காக உழைத்த மருத்துவர்கள், அரசு அலுவலர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, செவித்திறன் குறைபாடுள்ள 16 பேருக்கு காது கேட்கும் கருவிகளையும், மகளிர் திட்டம் மூலம் 5 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.56 லட்சம் கடனுதவிகளையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.4,80,055 மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 3 பேருக்கு வரையறுக்கப்பட்ட பாதுகாவலர் நியமனச் சான்றுகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் லி.மது பாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோட்டாட்சியர் ம.பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் எஸ்.பொற்செல்வன், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் சிவக்குமார், இணை இயக்குநர் ( நலப் பணிகள்) ஏ.விஜயா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

x