’கடன் வாங்க, வயல் புகைப்படத்துடன் வாங்க’


ஏழை விவசாயிகள் இனி விவசாயத்திற்கு பயிர்க்கடன் வாங்க வேண்டுமென்றால் வயலை புகைப்படம் எடுத்து ஒப்படைக்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறைக்கு மாநில அரசு புதிய விதியை புகுத்தியுள்ளது.

விவசாயிகள்

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம் 21/03/22 தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை அனைத்து கூட்டுறவு வங்கிகளின் வேளாண்மை இயக்குநர்களுக்கும் அனுப்பியுள்ளார். பயிர்க் கடன் வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே நடை முறைகளைப் பின்பற்றுதல் குறித்து மாதிரி ஒழுங்குமுறை விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதியை பயிர் கடன் வழங்கும் அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ஏற்றுக் கொண்டு அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து சரக துணை பதிவாளர்களுக்கும் இந்த சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் செய்கிறோம் என்கிற போர்வையில் பல பெரிய மனிதர்கள் பல்லாயிரம் கோடிகளை வங்கிகளில் சுலபமாக கடன் பெற்று விடுகிறார்கள். ஆனால் விவசாயிகள் கடன் பெறுவது என்பது வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மிகமிகக் கடுமையானதாகவே இன்னமும் இருந்துவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புதிய விதியை சேர்த்து பல கெடுபிடிகளை மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஏற்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றன.

அதன்படிதான் தற்போதும் நடந்திருக்கிறது. விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் புதிய விதியை பின்பற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநிலமெங்கும் கடன் வழங்குவதில் ஒரே நடைமுறை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும், விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வழங்கப்பட்ட மூன்று மாத காலத்திற்குள் அந்த பயிர் சம்மந்தப்பட்ட வயலின் புகைப்படத்தை தேதியுடன் குறிப்பிட்டு விவசாயிகள் எடுத்து வந்து குறிப்பிட்ட வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அதை அவர்களின் கடன் விண்ணப்பத்துடன் வங்கி அதிகாரிகள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை குறிப்பிடுகிறது.

உழவர் அட்டைகள் மூலம் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்றுத்தந்திருக்கும் அடங்கலில் உள்ளதற்கும், பயிர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதற்கும் பல இடங்களில் வேறுபாடுகள் இருப்பதாகவும், இதுபோன்ற விதிமீறல் நடைபெறாமல் தடுப்பதற்காக கடன் வழங்கல் மற்றும் பட்டுவாடா என்ற தலைப்பில் இந்த விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அந்த சுற்றறிக்கை தெரிவிக்கிறது.

ஏற்கனவே கடன் வாங்குவதில் ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும் நிலையில் இனி கடன் வாங்குவது ரொம்பவே சிரமம்தான் போலிருக்கிறது.

x