ஆதவன் 80: ஆழ்மன உளவியலை எழுத்தில் வடித்தவர்


எழுத்தாளர் ஆதவன்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சியில் 1942 மார்ச் 21-ல் பிறந்தார் ஆதவன். அவருடைய இயற்பெயர் சுந்தரம். இந்திய ரயில்வேயில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு பின்னர் டெல்லியில் உள்ள நேஷனல் புக் ட்ரஸ்ட் ஆஃப் இந்தியாவில் துணை ஆசிரியரானார். 1987 ஜூலை 19-ல் சிருங்கேரியில் ஒரு நதியில் குளித்துக்கொண்டிருந்தபோது சுழலில் சிக்கி அகால மரணமடைந்தார்.

1960-களில் தொடங்கி கால் நூற்றாண்டுகாலம் கதைகளை எழுதிய ஆதவன் தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இடம்பெறத்தக்க பல கதைகளை எழுதியுள்ளார். ‘என் பெயர் ராமசேஷன்’, ‘காகித மலர்கள்’ ஆகிய அவருடைய இரண்டு நாவல்களும் முக்கியமானவை. ‘காகித மலர்கள்’ நாவல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பேசியது. ’கானகத்தின் நடுவே’ என்னும் நாவல் அந்த காலத்தில் அதிக கவனம் பெற்றிராத சிறார் இலக்கிய வகைமையைச் சேர்ந்தது. ‘இரவுக்கு முன் வருவது மாலை’, ‘சிறகுகள்’, ‘மீட்சியைத் தேடி’, ’கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்’, ’நதியும் மலையும்’, ’பெண் தோழி தலைவி’ ஆகிய குறுநாவல்களையும் எழுதியுள்ளார்.

ஆதவன் இறந்த ஆண்டில் அவருடைய ‘முதலில் இரவும் வரும்’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஆனாலும் ஆதவனின் பிரதான களம் சிறுகதைகள்தாம். அவர் எழுதிய சிறுகதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் தொகுப்புகளாக வந்துள்ளன. 2019-ல்கூட ‘கருப்பு அம்பா கதை’ எனும் தொகுப்பு வெளியானது. அவருடைய அனைத்து சிறுகதைகளையும் உள்ளடக்கிய முழுத் தொகுப்பை கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆதவனின் சிறுகதைகள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினரை கதைமாந்தர்களாகக் கொண்டவை. அவர்களின் பெருமிதங்களையும் கற்பிதங்களையும் பகடி செய்பவை. அவற்றுக்குப் பின்னால் அவர்கள் ரகசியமாக ஒளித்துவைத்திருக்கும் போலித்தனங்களைக் கீறி எடுத்து வெளியே போட்டு புன்னகைப்பவை. ‘தில்லி அண்ணா’ சிறுகதையில் நடுத்தர வர்க்கத்தினர் சிலர் பணக்காரர்களைக் கிண்டலடிப்பது பணம் சேர்ப்பது குறித்த ஒவ்வாமை அல்லது விருப்பமின்மையினால் இல்லாமல் பணம் சேர்க்க முடியாத இயலாமையை மறைத்துக்கொள்ளும் மோஸ்தராக இருப்பதைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருப்பார். ’ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்’ கதையில், அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் கனவான்களாக தம்மை கற்பனை செய்துகொண்டிருப்பவர்கள் உண்மையில் சிலரை காரணமின்றி வெறுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை முதன்மைக் கதாபாத்திரத்தின் மூலம் உணர்த்தியிருப்பார்.

இப்படி அவர் எழுதிய பெரும்பாலான கதைகள் மனிதர்களின்ஆழ்மன உளவியலைப் படம்பிடித்துக் காண்பித்தவை. படிப்பவர்கள் தமது கற்பிதங்களிலிருந்து போலித்தனங்களிலிருந்தும் விடுபட உதவுபவை. அதே நேரம் இவற்றை எல்லாம் எந்த ஒரு புரட்சி பாவனையும் இல்லாமல் ‘இதுதான்’, ‘இப்படித்தான்’ என்று மெல்லிய குரலில் புன்னகையுடன் உரையாடுவதுபோல் செய்து காட்டியவை.

‘காகித மலர்கள்’ நாவலில் ஆண்கள் மீதான பாலியல் அத்துமீறல் குறித்துப் பதிவாகியிருக்கும். ‘பெண் தோழி தலைவி’ குறுநாவலில் கல்விபெற்று அலுவலகத்துக்கு வந்த முதல் தலைமுறை பெண்களில் உலகத்தை நுட்பமாகச் சித்தரித்திருப்பார். குடும்பம், சக ஊழியர்கள், சமூகம் ஆகியோரிடமிருந்து எதிர்கொண்ட நெருக்கடிகளையும் அதைத் தாண்டி அந்தப் பெண்களிடம் மிளிர்ந்த தன்னம்பிக்கையையும் சுயசார்பையும் துலக்கமாக உணர்த்திய படைப்பு அது. இப்படி தன் கதைகளில் தான் வாழ்ந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களையும் அப்போது பேசாப் பொருளாக இருந்த விஷயங்களையும் ஆதவன் கதைகள் மெல்லிய, அதே நேரம் அழுத்தமான குரலில் பேசின.

ஆதவன் இறந்த ஆண்டில் அவருடைய ‘முதலில் இரவும் வரும்’ சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஆதவன் போன்ற ஒரு எழுத்தாளர் நிறைவாழ்வு வாழ்ந்திருந்தால் தமிழுக்கு இன்னும் பல அற்புதமான சிறுகதைகள் கிடைத்திருக்கும். ஆனால் அந்த இழைப்பை மறக்கடிக்க அவர் எழுதியவற்றைப் படிப்பதே அலாதியான இன்பத்தைக் கொடுக்கும்.

x