அம்மாவுக்காக ஊர் சுற்றும் மகன்!


மகனுடன் கீதாம்மா...

தனியாகவோ நண்பர்களுடனோ உலகம் சுற்றும் வாலிபர்கள் பலர் உண்டு. கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்த சரத் கிருஷ்ணனும் முப்பது வயதுவரை, அப்படித்தான் நண்பர்களுடன் உலகம் சுற்றுவதில் பிரியம் கொண்டிருந்தார்.

ஆனால், 2015-ல் வந்த காதலர் தினம் சரத்துக்கு வேறொரு பிரியத்தை நினைவூட்டியது. நெடுநாட்களாக காசி யாத்திரை செல்ல நினைத்துக் கொண்டிருந்த தாய் கீத்தம்மா அன்று சரத்தின் கனவில் தோன்றினார். திடுக்கிட்டெழுந்தவர், தானொரு ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் நடத்தும் அளவுக்கு வளர்ந்த பின்பும், தன்னை பெற்றெடுத்துப் பாராட்டிச் சீராட்டி வளர்த்த தாய் மட்டும் இன்றும் அடுப்பங்கரையிலேயே உழன்று கொண்டிருப்பது எண்ணி மனம் கலங்கினார்.

ஆனாலும் திடீரென அம்மாவிடம், ”வாங்க... வீட்டை மறந்து ஒரு மாசம் உலகத்தைச் சுத்தி வருவோம்” என்று சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டாரே. அதனால், காசிக்குச் சென்று வரலாம் என்று அம்மாவுடன் புறப்பட்டு, அந்த தரிசனம் முடிந்த பிறகு மகாராஷ்டிராவுக்கு பயணத்தை நீட்டினார் சரத். அஜந்தா எல்லோரா குகைகளை பார்வையிட்டபோது, கீதாம்மா 18 வயது இளம்பெண்ணாக மனதளவில் மாறினார்.

சிறுபிராயத்திலிருந்தே அம்மாவுக்கு சுற்றுலாப் பயணங்களில் கொள்ளைப் பிரியமென்பது, சரத்துக்கு அப்புறம்தான் புரிந்தது. அதிலும் கைலாஷ் மானசரோவர் செல்வது அவரது நெடுநாள் ஏக்கமாக இருந்தது. அதையும் விட்டுவைப்பானேன்... கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டாயம் ’நோ’தான். கீதாம்மாவுக்கோ நீரிழிவு நோய், முதுகு வலி, மூட்டுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் பல அப்போது இருந்தன. வயதும் அறுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. இனியும் தாமதிக்க முடியாது என்பதால், தங்களது நகைகளை அடமானம் வைத்து பணம் சேர்த்துக் கொண்டு இருவரும் புறப்பட்டுவிட்டனர்.

2018-ல் முதன்முறையாக கீதாம்மா, தனது மகன் சரத்துடன் மணாலியிலிருந்து ரோஹ்தாங்வரை புல்லட் வண்டியிலேயே பயணம் சென்றார். அதுவரை சினிமாவில் மட்டுமே கண்டு ரசித்த பனிப் பிரதேசங்களை நேரில் கண்டு, ஸ்பரிசித்து, பனிக்கட்டிகளை அள்ளி வீசி, அதன் மீது குதித்து விளையாடி பற்கள் கூச சாப்பிட்டு குழந்தையாக மாறி குதூகலித்தார் கீதாம்மா. அந்தக் குதூகலத்தில் முதுகுவலியும் மூட்டுவலியும்கூட காணாமல் போயிருந்தது.

ஆழ்கடலுக்குள் குதித்து நீந்துவது, பாலைவன மணற்பரப்பில் ஒட்டகத்தின் மேலமர்ந்து ஒய்யாரமாக ஊர்வலம் செல்வது, பனிமலையானாலும் மலைக்காடானாலும் மூச்சுத் திணறலின்றி மலையேறுவது என கீதாம்மா ஒரு கை பார்க்க ஆரம்பித்து விட்டார். இப்படி பயணம் கீதாம்மாவுக்கு புத்துயிர் ஊட்டிவிட்டது. இன்று கீதாம்மா துடிப்பான சுற்றுலாப் பயணி.

தங்களது பயணக் கதைகளை காணொலியாக ’geethamma sarath krishnan stories’ என்ற யூடியூப் சேனலிலும் சமூக ஊடகப் பக்கங்களிலும் இந்த அம்மாவும் பிள்ளையும் வெளியிட, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்கள் முதல் சர்வதேச ஊடகங்கள்வரை இருவரும் நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டனர்.

இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலர், “உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சா சரத்?” எனக் கேட்க, “இல்ல... நான் சிங்கிள். என்னுடைய அம்மாவை நான் அக்கறையா பார்த்துக்கிறேன்” என்று பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார் சரத். அதை வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் சொல்லாமல், அம்மாவுடனான தனது சுற்றுலாப் பயணத் தொகுப்பை காணொலியாகவே வெளியிட்டு அசத்துகிறார் சரத்.

x