தனுஷ்கோடி அரிச்சல்முனையில் யோகா நிகழ்ச்சி: பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்பு


இணை அமைச்சர் சஞ்சய் சேத்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கடலோர காவல்படை சார்பாக நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

10-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனையில் கடலோர காவல்படை சார்பாக யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கடலோர காவல்படை வீரர்கள் யோக ஆசனங்களை செய்து காட்டினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சஞ்சய் சேத் பங்கேற்றார்.

தொடர்ந்து தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து ஹோவர் கிராஃட் படகு மூலம் இந்திய-இலங்கை எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகளை அமைச்சர் சஞ்சய் சேத் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் கடல்சார் நடவடிக்கைகள், கட்டமைப்பு வசதிகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

அப்போது இந்திய கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதில் கடலோர காவல்படையினரின் பங்களிப்பை அமைச்சர் சஞ்சய் சேத் பாராட்டினார். இந்த ஆய்வின் போது மண்டபம் கடலோர காவல்படை முகாமின் நிலைய கமாண்டர் வினைக்குமார், ஐஎன்ஸ் பருந்து கடற்படை விமான தளத்தின் கமாண்டர் கேப்டன் அஸ்வின் மேனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவகத்திற்கு சென்ற அமைச்சர் சஞ்சய் சேத் அவரது சமாதியில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.