`பன்முகத்தன்மை வாய்ந்த பட்ஜெட்' - பி.ஆர்.பாண்டியன்


செய்தியாளர் சந்திப்பில் பி.ஆர்.பாண்டியன்

``தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கை பன்முகத்தன்மை வாய்ந்தது'' எனத் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வரவேற்றுள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக அரசு இரண்டாவது ஆண்டாக வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதும், இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதும் பாராட்டுக்குரியது. வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கோடு அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தும் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

குறிப்பாக பயிர் வாரி முறையை அமல்படுத்தி உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில் சிறு தானிய வகைகளுக்கு தனி மண்டலங்களும், மஞ்சள், இஞ்சி உள்ளிட்ட மருத்துவ குணம் கொண்ட வேளாண் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும், காய்கறிகளை சந்தைப்படுத்துவதற்கும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை பெருக்குவதற்கும், இளைஞர்களுக்கு இயந்திரப் பயிற்சி, வேளாண் பொறியியல் துறை மூலமாக வாடகை இயந்திரங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு, சந்தை வசதிகளை உருவாக்குகிற விதமாக தொலைநோக்குப் பார்வை கொண்ட பன்முகத் தன்மையுடன் கூடிய பட்ஜெட் என்கிற அடிப்படையில் இதனை வரவேற்கிறோம்.

திருவாரூர் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தி பொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்கான தொழிற்பேட்டை அமைக்கும் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரம் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அடிப்படையில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,500, கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரமும் வழங்குவதற்கு அறிவிப்புகள் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

கேரளாவை பின்பற்றி காய்கறி, பழவகைகள் உள்ளிட்ட வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வதற்கு உத்தரவாதமில்லாதது விவசாயிகள் வளர்ச்சிக்கு உதவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே வரும் நாட்களிலாவது குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதம் கொடுத்திட வேண்டும்" என்று தெரிவித்தார்.

x