நடப்பாண்டில் 10 லட்சம் பனை விதைகள் வினியோகம்#TNBudget2022


தமிழகத்தில் பனை சாகுபடியை ஊக்குவிக்கும்வகையில் நடப்பாண்டில் பத்து லட்சம் பனை விதைகள் வினியோகிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

வேளாண் பட்ஜெட்டில் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பல நல்லதிட்டங்களை அறிவித்துவருகிறார். அதன் ஒரு அங்கமாக பனை சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். ``பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு தொடர்புடையது. சங்க இலக்கியங்களிலும் பனை முக்கியத்துவம் பெறுகிறது. ஆரம்பகால இலக்கியங்கள் பனை ஓலையில் தான் எழுதப்பட்டது. தமிழகத்தில் 5 லட்சம் குடும்பங்கள் பனை சார்ந்து உள்ளன. 11,000 தொழிலாளர்கள் பனை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பனையை சார்ந்திருப்போரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பனை மேம்பாட்டு இயக்கத்தை தொடங்கினோம். சபைத் தலைவர், ஏற்கெனவே ஒரு லட்சம் பனை விதைகள் கொடுத்திருந்தார்.

நடப்பு 2022-2023 -ம் ஆண்டில், பத்து லட்சம் பனை விதைகள் பனை சாகுபடியை ஊக்குவிக்கும்வகையில் வழங்கப்படும். பனை மரம் ஏறும் இயந்திரம், கருப்பட்டி, பனை வெல்லம் என மதிப்புகூட்டி விற்கும் பயிற்சி வழங்குவதோடு, அது தொடர்பான உபகரணங்கள் வாங்க 75 சதவீகித மானியமும் வழங்கப்படும். 250 விவசாயிகளுக்கு பனை வெல்லம் மதிப்பு கூட்டும் பயிற்சியும், உபகரணமும் வழங்கப்படும். பெண்களை இதில் ஈடுபடுத்தவும் ஊக்குவிக்கப்படும். இதற்காக 2 கோடியே 65 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இதேபோல் சிறந்த பனையேறும் கருவியை கண்டுபிடிப்பவர்களுக்கு விருதும் வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 25 லட்சம் பனை விதைகள் விதைக்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிசெய்வோர் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படுவார்கள்’’ என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.

பனை சார்ந்த விசயங்களுக்கு அரசு முக்கியத்துவம் கொடுத்திருப்பது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

x