ஏப்.30-ல் கேரளா செல்லும் சாலைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தம்


பொதுக்குழு கூட்டத்தில் பி.ஆர் .பாண்டியன் உள்ளிட்டவர்கள்

முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த 6 மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகள் எதிர்வரும் ஏப்ரல் 30-ம் தேதி கேரளா செல்லும் சாலைகள் அனைத்தையும் தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கி இன்றுவரை இரண்டு தினங்கள் கொடைக்கானலில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கொடைக்கானல் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் பிரச்சினைகள் குறித்து தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார். அதன்பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில். ``கொடைக்கானல் மலைப்பகுதி இயற்கை எழில் சூழ்ந்த மலையாகும். கோடை வாசஸ்தலமாக உலகம் முழுமையிலும் உள்ள மக்கள் இங்கே வந்து தங்கிச் செல்வது வாடிக்கையானது. தற்போது இந்த மலைப்பகுதி முழுமையிலும் சட்டத்திற்கு புறம்பாக குடியிருப்புகள், வானுயர்ந்த சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனுடைய இயற்கை எழில் சூழ்ந்த மலையழகு அழிந்து வருகிறது.

மாசு ஏற்பட்டு மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சிகள் கழிவுநீர் கால்வாய்களாக மாறியுள்ளது. எனவே இதனைத் தடுத்து நிறுத்தி மலை வளத்தை பாதுகாக்க தமிழக அரசு சிறப்புக்குழு அமைக்க வேண்டும். கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதையும் அளவீடு செய்து வசிப்பிட பகுதியையும், விலங்குகள் சரணாலயப் பகுதியையும் அடையாளப்படுத்தி வேலி அமைக்க வேண்டும்.

50 ஆண்டுகள் குடியிருந்து வரும் விவசாயிகள் மலைப்பகுதி மக்களுக்கு உடன் குடியிருப்பு மனைப்பட்டா வழங்குவதோடு, அவர்கள் சாகுபடி செய்து வரும் விளை நிலங்களுக்கு உரிய பட்டா வழங்கி பாதுகாத்திட வேண்டும்.

முல்லை பெரியாறு அணையை உடைத்து விடவேண்டும் என்கிற சதி செயலில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளார்கள். அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அணை வலுவாக உள்ளது என ஆதாரத்துடன் சட்டமன்றத்தில் எடுத்து வைத்த நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தித்துறை உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்து.

அது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது மட்டுமின்றி தமிழக-கேரள உறவை சீர்குலைக்கும் முயற்சியாகும். எனவே இதனை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை உரிமையை மீட்டெடுக்கவும் வலியுறுத்தி 6 மாவட்டங்களை உள்ளடக்கிய விவசாயிகள் வரும் ஏப்ரல் 30-ம் தேதி கேரளா செல்லும் சாலைகள் அனைத்தையும் தடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்" என்றார்.

x