வெண் புள்ளி கண்டவர்களை ஒதுக்காமல் இருப்போம்!


உடளில் வெண் புள்ளிகள் இருப்பது ஒரு நோய் அல்ல என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லப்பட்டாலும், உடலில் வெண் புள்ளிகள் உள்ளவர்கள் பொது இடங்களில் இன்னமும் கசப்பான அனுபவங்களை சந்திப்பது குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான், 'வெண் புள்ளிகள் நோய் அல்ல' என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் முன்னெடுத்துள்ளது வெண் புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம். உடலில் வெண் புள்ளிகள் ஏற்படுவது குறித்த சந்தேகங்கள் தொடர்பாக வெண் புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர் கே. உமாபதியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

சென்னையில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வெண்புள்ளி வருவதற்கான காரணம் என்ன?

நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி என அறியப்படுவது ரத்த வெள்ளை அணுக்கள் தான். எப்போதெல்லாம் நமது உடலில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் நுழைகிறதோ, அப்போதெல்லாம் அதனை எதிர்த்து உடலை நோயிலிருந்து பாதுகாக்கும் வேலையை செய்வதுதான் வெள்ளை அணுக்களின் வேலை. சில சமயத்தில் இந்த வெள்ளை அணுக்கள் தவறான ஒரு வேலையையும் செய்கின்றன. அதாவது, 'மெலனோஸைட்ஸ்' என்ற செல்களை கிருமி என தவறுதலாக நினைத்து அழித்து விடுகின்றன. 'மெலனோஸைட்ஸ்' எங்கெல்லாம் அழிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் தோலில் வெண்மை நிறம் தோன்றும். ஏனெனில் 'மெலனோஸைட்டுகள்' தான், தோலுக்கு நிறத்தினை அளிக்கும் 'மெலனின்' என்ற நிறமியைச் சுரக்கிறது. அது அழிக்கப்படுவதால் உடலில் வெண்புள்ளிகள் தோன்றுகின்றன.

வெண் புள்ளி விழிப்புணர்வு பிரச்சாரம்.

வெண் புள்ளி என்பது தொற்று நோய் என்ற பயம் உள்ளதே?

வெண் புள்ளிகள் தோன்ற வைரஸோ, பாக்டீரியாவோ காரணமல்ல. அதனால் இது நோயும் அல்ல. ஒருவரால் மற்றவருக்கு வெண் புள்ளிகள் பரவவும் பரவாது. ஏனெனில் இது தொற்று நோயும் அல்ல. கணவன், மனைவி உறவிலும் பரவாது.

டாக்டர் கே.உமாபதி

வெண்புள்ளி யாருக்கெல்லாம் வரக்கூடும்?

வெண் புள்ளிகள் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எந்த வயதிலும் வரலாம். உலகின் மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் கூடுதலாகவே வெண் புள்ளி உள்ளவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் சுமார் நான்கு சதவிகிதம் பேர் இருக்கிறார்கள்.

வெண்புள்ளிகளில் வகைகள் இருக்கிறதா?

உண்டு. வெண் புள்ளிகளை பல்வேறு விதமாக வகைப்படுத்துகிறார்கள். அவற்றில் முக்கியமானவை மூன்று. ஃபோகல் (focal ) என்ற வகை வெண்புள்ளிகள் உடலில் ஏதாவது ஒரு பகுதியில் தோன்றி வருடக்கணக்கில் அப்படியே இருக்கும். பிற பகுதிகளுக்கு அவ்வளவு வேகமாகப் பரவாது. பைலேட்ரல் (bilateral) எனும் வகை வெண் புள்ளிகள் வலது, இடது என உடலின் இருபுறமும் தோன்றும். செக்மென்ட்டல் (Segmental) வகை வெண் புள்ளிகள் உடலின் வலது அல்லது இடதுபுறத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டுமே தோன்றும்.

உணவு முறை மாற்றத்தால் வெண் புள்ளிகளை மாற்ற முடியுமா?

வெண் புள்ளிகள் மறைய அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளில், பெரும்பாலும் புளிப்பு சுவை கொண்ட பொருட்களை தவிர்க்க வேண்டும் என்ற ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. 14 வருடங்களுக்கு முன்பே மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெண்புள்ளிகளுக்கான மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவெனில், இது ஆயுர்வேத மருந்து என்பதுதான். ஏற்கெனவே, வெண்புள்ளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சையில் ஸ்டீராய்டுகள் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.

நோயே இல்லாத வெண் புள்ளிகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சைகள் மூலம் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பக்க விளைவுகளும் ஏற்படுவதுண்டு. ஆனால், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) கண்டுபிடித்துள்ள 'லூகோஸ்கின்' மருந்து பக்கவிளைவுகள் இல்லாதது. துளசி, வல்லாரை, சோற்றுக் கற்றாழை, கார்போகி, எருக்கை, பூனைக்காலி போன்றவற்றைச் சேர்த்து பக்க விளைவுகள் இல்லாத இந்த மருந்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதை எப்படி பயன்படுத்துவது, என்னென்ன உணவு கட்டுப்பாடுகள் பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் விளக்க ‘வெண் புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் இந்தியா’ சார்பில் வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10 மணிக்கு சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.

விழிப்புணர்வு பிரச்சாரங்களால், வெண் புள்ளியால் பாதிக்கப்பட்டவர்களை சமூகம் பார்க்கும் பார்வை மாறியுள்ளதா?

முற்றாக இல்லை என்றாலும் கொஞ்சம் மாறியுள்ளது. வெண் புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கம் - இந்தியா, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புகளுடன் இணைந்து மாணவர்கள் - மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொண்டு வருகிறது. போலியோ அல்லது சின்னம்மை போன்று வெண் புள்ளிகளை முற்றிலும் ஒழிக்க முடியாது. இதற்கு மருத்துவத்தை விட விழிப்புணர்வே சிறந்தது. வெண் புள்ளிகள் பற்றிய அறிவியல் உண்மைகளை மாணவர்கள் தெரிந்துக் கொண்டால், அதுகுறித்த தவறான கருத்துகளை சமூகத்தில் இருந்து முற்றிலும் அகற்றுவார்கள். இதன் வாயிலாக தனக்கு வெண் புள்ளிகள் ஏற்பட்டாலோ, வேறு யாருக்கும் ஏற்பட்டாலோ அதனை இயல்பாக கையாளும் பக்குவத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

இவ்வாறு டாக்டர் உமாபதி நமது கேள்விகளுக்கு பதிலளித்தார்.

x