வேளாண் பட்ஜெட் - அரசுக்கு ஜி.கே.வாசனும் கோரிக்கை!


ஜி.கே.வாசன்

தமிழகத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிற நிலையில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளாக பலவற்றையும் அரசிடம் முன்வைத்து வருகிறார்கள். மாவட்ட வாரியாக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டு விவசாயிகளின் தேவைகள் என்ன என்பதை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டு தெரிந்து அதற்கேற்ப நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பல்வேறு விவசாய சங்கங்களும் அரசுக்கு விவசாயிகளின் தேவைகள் குறித்து கோரிக்கைகளையும் பட்டியலையும் அளித்திருக்கிறது. அந்த வரிசையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் விவசாயிகளின் தேவைகள் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

‘தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அம்சங்கள் இடம் பெற வேண்டும். டீசல் விலை உயர்வை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு டீசல் மானியம் வழங்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாக முழு மானியத்துடன் இயற்கை உரங்கள் தயாரிக்கும் தொழில் தொடங்கிட வழிவகை செய்திட வேண்டும். பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு ஆதார விலையை உறுதிப்படுத்தி நிர்ணயம் செய்ய வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து விவசாயிகள் பயிர் செய்வதற்காக விவசாயிகள் கொண்ட குழு அமைத்து செயல்படுத்திட வேண்டும். மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் காய்கனி, பூ ஆகியவை பயிரிடப்பட்டு சந்தைக்கு வருவதால் மாவட்டந்தோறும் குளிர்பதன கிடங்கு அமைத்து விவசாயிகளுக்கு உதவிட வேண்டும்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் நீர் வரத்து வாரிகள், ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் தூர்வாரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், கருவேலஞ்செடிகளை அகற்றிடவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். வறட்சியான மாவட்டங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கிட வேண்டும்.

ரசாயன உரங்களின் விலையேற்றத்தால் மத்திய அரசு மானியம் வழங்குவது போல் தமிழக அரசும் மானியம் வழங்கிட வேண்டும். கால்நடை வளர்ப்போருக்கு மானிய விலையில் தீவனங்களை வழங்கிட வேண்டும்.

எனவே, தமிழக விவசாயிகள் எதிர்பார்க்கும் பயிருக்கான ஆதார விலை, இழப்பீடு, மானியம், குளிர்பதன கிடங்கு, பாரம்பரிய நெல் ரகம் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்’

இவ்வாறு ஜி.கே.வாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

x