நாட்டு வெடிகுண்டால் வாய் சிதைந்த பசு: பசியால் துடிக்கும் கன்று


வெடிகுண்டை கடித்ததால், கீழ்த்தாடை சிதறி நிற்கும் தாயை, ஒன்றும் புரியாமல் பார்க்கும் பசுங்கன்று.

தமிழகத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாயத் தோட்டங்களிலும், மேய்ச்சல் நிலங்களிலும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக சில சமூக விரோதிகள் பன்றி வெடி (அவுட்டுக்காய்) என்னும் ஒருவகை நாட்டு வெடிகுண்டை பழத்திற்குள் வைத்துப் போட்டுவிடுகிறார்கள். அதைக் கடிக்கும் வனவிலங்குகள் தலை சிதைந்து இறந்ததும், அதனை இறைச்சிக்காக தூக்கிவருவதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற வெடிகளை சில நேரங்களில் வளர்ப்பு கால்நடைகளும் கடித்து, கொடூரமாக காயமடைவது வழக்கமாக இருக்கிறது.

இவ்வாறு ஒரு சம்பவம் டி.என்.பாளையம் அருகே நடந்திருக்கிறது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் பொறியாளரான மதன்குமார்(27), இயற்கை விவசாயம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக தனது உதவிப் பேராசிரியர் பணியை ராஜினாமா செய்துவிட்டு, ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார். இதற்காக டி.என்.பாளையம், பங்களாப்புதூர் வடக்கு தோட்டம் பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து அங்கு விவசாயத்துடன், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் வளர்த்துவருகிறார்.

இவ்வாறு இவர் வளர்த்த பசுமாடு ஒன்று தோட்டத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக சென்றுள்ளது. அங்கு வனவிலங்கை வேட்டையாடுவதற்காக யாரோ போட்டிருந்த வெடிகுண்டை அது கடிக்க, அடுத்த கணமே பயங்கர சத்தத்துடன் அது வெடித்துச் சிதறியது. இதில் கீழ்த்தாடை எலும்பு நொறுங்கி, அதன் நாக்கு சிதறி கத்தக்கூட முடியாமல் கண்ணீருடன் பரிதாபமாக நின்றது அந்தப் பசு. வெடிச்சத்தம் கேட்டு, ஓடிச்சென்று பார்த்த மதன்குமார், பசுவின் கோலத்தை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வலியாலும், வாய் எரிச்சலாலும் துடிக்கிற அந்த பசுவால் தண்ணீர்கூட குடிக்க முடியவில்லை. தீவனமும் உண்ண முடியவில்லை. 18 நாட்களுக்கு முன்புதான் அது ஒரு கன்றை ஈன்றிருக்கிறது. அந்தக் கன்றுக்கு பால் கொடுக்கவும் சக்தியில்லாமல் அது தவிப்பதை அப்பகுதி மக்கள் வேதனையுடன் பார்த்துச்செல்கிறார்கள். கன்றுக்கு கூட புட்டிப்பால் கொடுத்துவிடுகிறேன். மாட்டைத்தான் எப்படிக் காப்பாற்றுவது என்றே தெரியவில்லை என்று கவலையுடன் சொல்கிறார் மதன்குமார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீஸார் வழக்குப்பதிந்து, வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்த மகேஷ்வரன்(37), நடராஜ் (59) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

x