காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு: இசையால் மரியாதை


காருக்குறிச்சி ப.அருணாச்சலம்

பிரபல நாகசுர மேதை காருக்குறிச்சி ப.அருணாச்சலத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இசை வடிவிலேயே அஞ்சலி செய்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்டம், காருக்குறிச்சியில் பிறந்தவர் அருணாச்சலம். தன் தந்தை பலவேசம் தந்த ஊக்கத்தால் இசைத்துறையில் கால்பதித்தார். உள்ளூர் கோயிலில் நாதஸ்வரம் வாசித்துவந்த இவர், திரைத்துறையிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் கற்றார். திருவாடுதுறை ராசரத்தினம் பிள்ளையின் சீடராக இருந்த அருணாச்சலம் நாகசுர இசையில் பலரது மனங்களையும் மயக்கினார். கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் ஜானகி பாடிய சிங்காரவேலனே தேவா பாடலில் நாகஸ்வரம் வாசித்தது காருக்குறிச்சி அருணாச்சலம் தான். 1921-ம் ஆண்டு பிறந்த காருக்குறிச்சி அருணாச்சலம், கடந்த 1964-ம் ஆண்டு காலமானார். அவரது நூற்றாண்டு கொண்டாட்டம் பரிவாதினி என்னும் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை கிராமத்தில் உள்ள மதுசூதனப்பெருமாள் கோயில் பங்குனித் திருவிழாவின் ஒரு அங்கமாக காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இசைக்கலையை மக்கள் மத்தியில் பரவலாக்கும் முனைப்பில் இருக்கும் பரிவாதினி அமைப்பு, தென்மாவட்டங்களைச் சேர்ந்த அரசு இசைப்பள்ளி மாணவர்களுக்கும், முறைப்படி சங்கீதம் கற்றுக்கொண்ட நாகசுர மாணவர்களுக்கும் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டை முன்னிட்டு நாகசுரம் வழங்கினர். இந்நிகழ்வுக்கு பறக்கை கிராமத்தைச் சேர்ந்த இசைக்கலையில் தேர்ந்தவரும், ஓய்வுபெற்ற தலைமையாசிரியருமான சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் காருக்குறிச்சி அருணாச்சலத்தின் மகள் சுப்புலெட்சுமி, வள்ளியூர் நாகஸ்வரக்கலைஞர் எம்.எஸ்.இராசுக்குட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். பறக்கை மதுசூதனப்பெருமாள் சேவா சங்கத்தினர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

நாகஸ்வரம் வழங்கும் நிகழ்வு

இசைக்கலை வல்லுனர் சுப்பிரமணியன் இதுகுறித்துக் கூறுகையில், ``காருக்குறிச்சி அருணாச்சலத்தின் நூற்றாண்டை முன்னிட்டு இருபது நாகசுர மாணவர்களுக்கு நாகசுரம் வழங்கப்பட்டுள்ளது. நாகசுர வித்வானின் நூற்றாண்டை பொருத்தமான முறையில் நடத்தியிருக்கிறார்கள். தன் வாழ்வின் கடைசிக்காலம்வரை நாகசுர இசையோடு வாழ்ந்தவர் அருணாச்சலம். இப்போதும், அவர் வாசித்த கீர்த்தனைகள் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதே நம்பமுடியவில்லை. அத்தனை பெரிய கலைஞனின் மறைவுக்கு இசை வடிவிலேயே இந்த அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

x