எதிர்க்கோட்டையை கலக்கிய புத்தகச் சீர்வரிசை ஊர்வலம்


விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே எதிர்க்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ். இவரது மகன் நவநீத கண்ணன், ஆட்டோமொபைல் துறையில் பொறியாளராக பணிபுரிகிறார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் இவர் நல்ல வாசிப்பாளர். இருக்கும் விருதுநகர் மாவட்டம் இனாம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமநாதன் மகன் அனிதாவுக்கும் எதிர்க்கோட்டை கிராம கோயிலில் திருமணம் நடந்தது.

இந்தத் திருமணத்தையொட்டி நடந்த சீர்வரிசை ஊர்வலத்தை ஊரே திரண்டு ஆச்சரியத்துடன் பார்த்தது. கார், பைக், தங்க, வைர நகைகளின் அணிவகுப்பு அல்ல அது. 20, 30 பேர் தாம்பூலத் தட்டுகளில் 500 புத்தகங்களைச் சுமந்துகொண்டு, தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக நடந்துவந்ததே அதற்குக் காரணம். தமுஎகச கௌரவத் தலைவரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ம.மணிமாறன், பாரதி புத்தகாலய பொறுப்பாளர் முகமது சிராஜூதீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார், மாநில நிர்வாகிகள் பாலச்சந்திர போஸ், செல்வராஜ், மாவட்ட செயலாளர் எம்.ஜெயபாரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஊர்வல ஏற்பாடுகளைச் செய்த முகம்மது சிராஜூதீனிடம் பேசியபோது, "தம்பி நவநீதன் நல்ல வாசகர். வழக்கமாக சென்னை புத்தகத் திருவிழாவுக்கு வந்து நிறைய புத்தகங்கள் வாங்கிச் செல்வார். இந்தாண்டு திருமண ஏற்பாடுகள் காரணமாக அவரால் புத்தகத் திருவிழாவுக்கு வர முடியவில்லை. எனவே, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இப்படியொரு ஏற்பாட்டைச் செய்தோம். மொய் எழுதுவது, தேவையில்லாத பரிசுப் பொருட்களைக் கொடுப்பதற்குப் பதில் இதைச் செய்யலாம் என்றதும் எல்லா நண்பர்களும் ஆதரித்தார்கள்.

மொத்தமாக பணம் சேர்த்து, புத்தகத் திருவிழாவிலேயே அவருக்கான பரிசுப் புத்தகங்களை வாங்கிவிட்டோம். புத்தகச் சீர் ஊர்வலத்தில் மணமக்களின் உறவினர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டார்கள். புத்தகப் பரிசைப் பார்த்ததும், மணமகனுடன், மணமகளும் மகிழ்ச்சியடைந்தார்கள். சாத்தூர் பக்கம் எல்லாம் திருமண வீட்டில் பறை அடிக்கிற வழக்கமில்லை. இருந்தாலும், உறவினர்கள் அதை அன்போடு ஏற்றுக்கொண்டார்கள். தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளராக இருந்து மறைந்த கருப்பு கருணா அவர்களின் பிறந்த நாளன்று இந்த நிகழ்வை நடந்திருப்பது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தந்தது" என்றார்.

இதுபற்றி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, "இதுவரையில் மணமக்களுக்கு ஓரிரு புத்தகங்களைப் பரிசளிப்பது, திருமண விழாவில் பங்கேற்கிறவர்களுக்கு சிறு வெளியீடுகளைப் பரிசாக வழங்குவது போன்றவற்றைத் தான் கடைபிடித்திருக்கிறோம். இந்த புத்தக சீர் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இனி இதுபோன்ற நிகழ்வுகளை மற்ற திருமணங்களிலும் கடைபிடிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.

x