தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவிகளிடம், ”ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருகிறதா?”, ”மாதவிடாயின்போது உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா?” ஆகிய கேள்விகள் கடந்த சில நாட்களாக வகுப்பறைகளில் கேட்கப்பட்டுவருவதாகச் சர்ச்சை கிளம்பியுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிமுகப்படுத்தியிருக்கும் ‘எமிஸ்’ (EMIS) செயலி மூலம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த செயலி மூலம் மாணவ- மாணவியரிடம் 64 கேள்விகளைக் கேட்டு தினந்தோறும் பதிவு செய்யுமாறு ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல்நலன் சார்ந்த கேள்விகளும், பழக்கங்கள் தொடர்பான கேள்விகளும் அதில் அதிகம் இடம்பெற்றுள்ளன. அப்படிச் சேகரிக்கப்படும் தகவல்கள் தினமும் எமிஸ் பள்ளிக் கல்வித் தகவல் மேலாண்மை இணைய முறைமையில் பதிவேற்றப்படும்.
இந்நிலையில், மாணவிகளின் உடல்நலன் மீதான அக்கறை காரணமாக மாதவிடாய் குறித்த கேள்வி எழுப்பப்பட்டிருப்பதாகப் பள்ளிக்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. ஆனால், அந்தரங்கமான கேள்விகள் இடம்பெற்றிருப்பதால் மாணவர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்திருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அடைய என்ன இருக்கிறது, பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மாணவினடமிருந்து ஒரு மாணவி பேனா வாங்கி எழுதினாலே, ”என்ன லவ் பன்றியா?” என்று பிதற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு இதுதொடர்பாக முதலில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலே பாதி சிக்கல் குறையும் என்கிறார் குழந்தை உரிமைகள் செயற்பாட்டாளர் வர்ஜில் டி.சாமி. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு, ’வளரிளம் பருவத்தினரின் படிப்பினையும் படிப்பும்’ என்ற விழிப்புணர்வு பயிலரங்கத்தை இலவசமாக நடத்திவருகிறார் வர்ஜில். இதன் மூலம் பதின்பருவ மாணவ, மாணவிகளுக்கு இனப்பெருக்க அறிவியல், மாதவிடாய் சுகாதாரம், வளரிளம் பருவத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் உள்ளிட்ட பாலியல் கல்வியை கதைவடிவில் உரையாடல் மூலம் கற்பித்து வருகிறார். இவற்றை பள்ளிகள் தோறும் செய்யத் தவறியதன் விளைவுதான் தற்போது மாதவிடாய் குறித்த தகவலை அரசு கேட்டதற்கே மாணவர்களும் பெற்றோரும் சங்கடப்படுகிறார்கள் என்றார்.
’நீயே அதை படிச்சுக்க!’ எனும் ஆசிரியர்கள்!
மேலும் அவர் கூறுகையில், “மாணவ-மாணவிகளின் ஆரோக்கியத்தில் அக்கறையுடன் அரசாங்கம் இதுபோன்ற தகவல்களைச் சேகரிப்பது வரவேற்கத்தக்க விஷயமே. இவற்றைக் கொண்டு குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அதேநேரம் இத்தகைய அந்தரங்கத் தகவல் ரகசியமாகக் காக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். இவற்றுக்கு அப்பால், மாதவிடாய் சுகாதாரம் குறித்து ஆசிரியர், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வை எப்படியெல்லாம் ஏற்படுத்தலாம் என்பதற்கான ஆலோசனையும் வழங்கினார்.
“தமிழகத்தைப் பொருத்தவரை பெரும்பாலான பள்ளி அறிவியல் ஆசிரியர்கள், நரம்பு மண்டலம், செரிமான அமைப்பு போன்ற பாடங்களை வகுப்பில் கற்பிக்கிறார்களே தவிர இனப்பெருக்கம் பாடத்தைச் சொல்லித்தருவதே இல்லை. ’நீயே அதை படிச்சுக்க!’ என்று கேலியும் கிண்டலுமான குரலில் சொல்லும் ஆசிரியர்கள் பலர் இருப்பது வருத்தத்துக்குரியது. இதனால் பதின்பருவத்தை சேர்ந்த ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் மிகவும் பாதிக்கப்படுவதை நாங்கள் நடத்தும் பயிலரங்கத்தின்போது கண்டிருக்கிறோம். சிறுவயதிலேயே மாதவிடாய் தொடங்கிவிட்டாலும் தனக்கு ஏதோ உடல் உபாதை என்று அச்சப்படும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். மாதவிடாய் தள்ளிப்போவதாலும் குழப்பமடையும் சிறுமிகள் இருக்கிறார்கள். சேனிட்டரி நேப்கின்களில் எது பாதுகாப்பனவை என்பது குறித்த வழிகாட்டல்கூட பலருக்கு இல்லை” என்றார்.
தீட்டு எனும் மூடநிம்பிக்கை ஒழிப்போம்!
இதுதவிர இந்தியச் சமூகத்தில் பெண் பூப்படைதலை ஒட்டி பல மூடநம்பிக்கைகள் வேரூன்றியுள்ளன. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப் போக்கு தூய்மையானது என்று அறிவியல் உலகம் நிரூபித்துவிட்டது. ஆனால், இன்றும் பலர் மாதவிடாய் நாட்களில் இருக்கும் பெண்கள் தீட்டானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ’அந்த நாட்களில் நாம் இழிவானவர்கள் அதனால் வீட்டில் தனி அறையில் இருக்க வேண்டும், கோயிலுக்கு செல்லக்கூடாது!’ போன்ற தவறான கற்பிதங்களில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் குறித்தும் மாணவிகளிடமும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடமும் எடுத்துரைப்பதாக வர்ஜில் கூறினார். ”முக்கியமாக ஆண் குழந்தைகளிடம் சக மனுஷியான பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்து இயல்பாக எடுத்துச் சொல்கிறோம். சேனிட்டரி நேப்கின்னை ஆண் குழந்தைகளிடமும் கொடுத்துத் தொட்டுப் பார்க்கச் சொல்வோம். வளரிளம் பருவத்திலிருக்கும் ஆண் குழந்தைகளிடம் அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் குறித்தும் உரையாடுவோம். முக்கியமாகக் காதலுக்கும் விடலை பருவத்தில் ஹார்மோன்களின் தடுமாற்றத்தினால் வரும் ஈர்ப்புக்கும் இடையிலான வித்தியாசத்தை இருபாலரையும் நட்பாக அருகருகில் உட்காரவைத்து உரையாடுவோம்.
இத்தகைய எங்களது தொடர் நடவடிக்கையால் 8-வது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ-மாணவிகள் பலரை குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்டிருக்கிறோம், போதைப்பழக்கத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறோம், அக்குழந்தைகளுக்குப் பெற்றோருடன் இணக்கமான உறவை ஏற்படுத்தியிருக்கிறோம், லட்சியத்துடன் படித்து முன்னேறும் உத்வேகத்தை ஊட்டி இருக்கிறோம். இவையாவும் நமது பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தின் வழியாகக் கற்பிக்கப்பட வேண்டும். அதற்கு முதலில் ஆசிரியர் கல்வியியலில் பாலின கல்வி முக்கிய பாடமாகப் பரிந்துரைக்கப்பட வேண்டும்” என்றார்.
6 லட்சம் மாணவர்களுக்கு ஆசிரியர் எங்கே?
மாதவிடாய் குறித்த தகவலை பள்ளிகள் மூலம் அரசாங்கம் சேகரிப்பதில் ஆட்சேபனை ஏதுமில்லை. ஆனால், அந்த தகவல் எதற்காகப் பயன்படுத்தப்படும், எமிஸ் செயலி மூலம் தினந்தோறும் இவற்றையெல்லாம் பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு எங்கே நேரம் போன்றவற்றை குறித்து யாரும் வாய்திறப்பதில்லை என்று பேசத் தொடங்கினார் கல்விச் செயற்பாட்டாளர் உமா. “தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆனால், இந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல ஆசிரியர்கள் கூடுதலாக நியமிக்கப்படவில்லை. இதனால் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையில் தமிழக அரசுப் பள்ளிகள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால், பள்ளிக்கல்வி அமைச்சரோ விரைந்து பாடங்களை முடித்து பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தச் சொல்கிறார். பாடத்திட்டம் குறைப்பு என்ற பெயரில் கண்ணை மூடிக்கொண்டு பல பாடப்புத்தகங்களின் முதல் இரண்டு அத்தியாயங்களை நறுக்கி எறிந்துவிட்டார்கள். இதனால் குழந்தைகள் தலையும் புரியாமல் காலும் புரியாமல் பாடம் படிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்” என்று கவலை தெரிவித்தார்.
மாணவிகளிடம் போதைப்பழக்கம்!
மேலும் அவர் கூறுகையில், “ஒன்றரை ஆண்டுகள் கல்வி தடைபட்டுப்போன பிறகு மீண்டும் பள்ளித் திரும்பியிருக்கும் பதின்பருவ குழந்தைகளிடம் நடத்தை சிக்கல்கள் பல காணப்படுகின்றன. மாணவிகளின் கழிப்பறையில் போதை வஸ்துக்கள் பதுக்கிவைக்கப்பட்டிருபதாகவும் இதனால் மாணவிகள் மத்தியிலும் போதைப்பழக்கம் ஏற்படத் தொடங்கிவிட்டதோ என்ற அச்சமும் இன்று மூண்டுள்ளது. மேலும் பல வளரிளம் மாணவரும் மாணவியரும் தடம்புரண்டு போகும் அபாயத்தைத் தினந்தோறும் கண்முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இவற்றில் எதற்குமே தீர்வு காண முயலாமல், 64 கேள்விகள் அடங்கிய செயலியை கையில் திணித்துவிட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மாணவ-மாணவியிடம் தினமும் இத்தனை கேள்விகளை கேட்டு பதிலை பூர்த்தி செய்ய எந்த ஆசிரியருக்கு கால அவகாசம் உள்ளது? தோராயமாக 2000 மாணவர்களை கொண்ட ஒரு பள்ளியில் நாள்தோறும் இத்தனை தகவலை முறையாக பதிவு செய்ய முடியுமா? உண்மையாகவே அரசாங்கம் மாணவர்களின் உடல் நலம் மற்றும் வளர்ச்சி மீது அக்கறை கொண்டிருந்தால் எமிஸ் செயலியில் தகவல் சேகரிக்க தனியொரு நபரை நியமிக்க வேண்டும்” என்றார் உமா.
மாணவிகளின் மாதவிடாய் தொடர்பான தகவலைச் சேகரிக்கும் அரசும் கல்வித் துறையும் மாதவிடாய் சுகாதாரத்தோடு பாலியல் கல்வியையும் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கெனவே பள்ளிக் கல்வியின் கழுத்தைச் சுற்றியிருக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே செயற்பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது.