இப்பவும் நான் ஆட்டோ டிரைவர் தான்!


மேயராக பதவியேற்கும் சரவணன்...

மக்கள் நினைத்தால் சாமானியர்களும் அதிகாரத்திற்கு வர முடியும் என்பதை சரவணன் மூலமாக சரித்திரம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

எந்த கும்பகோணம் வீதிகளில் நேற்றுவரை ஆட்டோ ஓட்டுநராக வலம் வந்தாரோ, அதே வீதிகளில் ‘கும்பகோணம் மாநகர தந்தை’யாக (மேயர்) கம்பீரமாக வலம் வருகிறார் கே.சரவணன். ஆம், 156 ஆண்டுகால பாரம்பரியம் கொண்ட கும்பகோணம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அதன் முதல் மேயராகி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன்.

மேயர் சரவணன்

48 வார்டுகள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் 3 வார்டுகளை மட்டும் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது திமுக. அதில் இரண்டில் வாகை சூடியது காங்கிரஸ். அதில் ஒருவர், கட்சியின் நகர துணைத் தலைவர் சரவணன். கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரசுக்கு திமுக விட்டுக் கொடுத்ததும், வெற்றிபெற்ற இருவரில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என சிறு குழப்பம் ஏற்பட்டது. ஆனால், எந்த குழப்பமும் இல்லாமல் சரவணனையே கைகாட்டினார் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டி.ஆர்.லோகநாதன். அப்படித்தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த ஆட்டோ ஓட்டுநர் சரவணன் கும்பகோணத்துக்கு மேயரானார். மாநகர தந்தை என்று மற்றவர்கள் சொன்னாலும் பழசை மறக்காத சரவணன் தனது ஆட்டோவில் சென்றுதான் பதவியேற்றார்.

கும்பகோணத்தின் குறுகலான துக்காம்பாளையம் தெருவில் இருக்கிறது ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை போடப்பட்ட அந்த சிறிய வீடு. வீட்டின் முன்பகுதி, சரவணனைச் சந்திக்க வந்த ஆட்களால் நிரம்பி வழிகிறது. அத்தனை பேரையும் உட்காரச் சொல்லக்கூட அங்கு போதுமான இடமில்லை. இந்த வீட்டில் தான் வாடகைக்கு குடியிருக்கிறார் சரவணன்.

துணை மேயர் தமிழழகனுடன்

சரவணன் மேயர் ஆனாலும் அவர் ஓட்டும் ஆட்டோ இன்னமும் அவர் வீட்டு வாசலில்தான் நிற்கிறது. அவருக்கு வாழ்த்துச் சொல்லவும், தங்கள் குறைகளைச் சொல்லவும் அந்த வீடே மூச்சு முட்டும் அளவுக்கு மனிதர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டதால் சரவணனின் ஆட்டோவுக்கும் இப்போது அதிகம் வேலை இருக்கிறது. அதை நம்பித்தான் சரவணனின் அன்றாடப் பிழைப்பும் நடக்கிறது. அதனால் தனது மைத்துனர் கையில் ஆட்டோவை ஒப்படைத்து, வழக்கமாக தனது ஆட்டோவில் பயணிக்கும் பள்ளிப் பிள்ளைகளின் விவரங்களைத் தருகிறார். அந்தப் பிள்ளைகளில் சிலரது பெற்றோரும் சரவணனைத் தேடிவந்து கைகுலுக்கிவிட்டுப் போகிறார்கள்.

தனது ஆட்டோவுடன் சரவணன்

’’ராத்திரி, பகல்னு எதுவும் கிடையாது... அவசரம், ஆபத்துன்னு யார் வந்து எந்தநேரம் கதவைத் தட்டினாலும் ஆட்டோவை எடுத்துருவேன். மேயராகிட்டாலும் அதுல எந்த சமரசமும் வெச்சுக்க மாட்டேன். இப்போதும் மக்கள் அவசர ஆட்டோ தேவைக்கு எந்த நேரத்திலும் என் வீட்டுக் கதவைத் தட்டலாம். நானே ஆட்டோவை எடுப்பேன்” என்று ஆட்டோவிலிருந்தே பேச்சைத் தொடங்கினார் சரவணன்.

“கடைத்தெரு முனையில் இருப்பதுதான் என்னோட ஸ்டாண்ட். 20 வருஷமா ஆட்டோ ஓட்டறதால கும்பகோணம் முழுக்க இருக்கிற எல்லா ஆட்டோ ஸ்டாண்டும், ஆட்டோ டிரைவர்களும் எனக்கு நல்ல பரிச்சயம். அவங்க எல்லாருமே எனக்கு வாழ்த்துச் சொன்னாங்க, தங்கள்ல ஒருத்தன் மேயரா வந்திருக்கான்னு அவங்க ரொம்பப் பெருமைப்படறாங்க” என்று பெருமிதம் கொண்ட சரவணனிடம் சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கெல்லாம் ஆழ்ந்த நிதானத்துடன் அழகாய் பதில் சொன்னார் சரவணன்.

ஆட்டோ ஓட்டுநரான உங்களால் மேயர் பதவியில் திறம்பட செயல்பட முடியுமா?

“ஆட்டோ டிரைவரா இருக்கிறதால ஊரின் அத்தனை தெருக்களும் எனக்கு அத்துபடி. அங்குள்ள பிரச்சினைகள் என்ன... மக்களின் தேவைகள் என்ன என்பதெல்லாம் சாமானியனான எனக்கு நல்லாவே தெரியும். பிரச்சினைகளை நேருக்கு நேராக எதிர்கொள்ளும் மனப்பக்குவம், மக்களோடு மக்களா பழகும் அனுபவம் இதையெல்லாம் இருக்கிறதால நிச்சயம் பேர் சொல்லும் மேயரா திறமையா செயல்படுவேன்”

உறவுகள், நட்புகளுடன்...

திடீர்னு இப்படி மேயர் ஆவோம்னு கொஞ்சமாவது நினைத்துப் பார்த்தீர்களா?

“கும்பகோணம் மாநகராட்சி ஆகும், அதற்கு நான் மேயராவேன் என்றெல்லாம் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், கும்பகோணம் நகர்மன்ற உறுப்பினராக ஆகவேண்டும் என்பது என்னோட அடிமனதில் இருந்த ஆசை. என்னோட தாத்தா குமாரசாமி கும்பகோணம் நகர்மன்ற உறுப்பினரா இருந்தார். அந்த கம்பீரம் எனக்குப் பிடித்தது. தாத்தாவைப்போல நாமும் ஒரு நாள் நகர்மன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்று அப்போதே முடிவு செய்திருந்தேன். அது இப்போது கைகூடி இருக்கிறது.

ஆட்டோ டிரைவராக மட்டுமே இருந்துவிடக்கூடாது. அதையும் தாண்டி சமூகத்தில் வளர வேண்டும் என்று நினைத்திருந்த நிலையில் தமிழக முதல்வரின் தயவாலும், காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட தலைவர்களின் ஆதரவாலும் எனக்கு மேயர் பதவியே கிடைத்திருக்கிறது. அவர்களுக்கும் எனது வார்டு வாக்காளர்களுக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.”

மேயர் சரவணனுக்கு எதிரில் உடனடியாக என்னென்ன கடமைகள் நிற்கின்றன?

“கும்பகோணம் பாதாளச் சாக்கடை சுமார் 25 வருடங்களுக்கு முன் அமைக்கப்பட்டது. அது தற்போது சீர்கெட்டுப் போயிருக்கிறது. சாக்கடைகள் அடைத்துக்கொண்டு தேங்கி நிற்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எங்கும் கொசு தொல்லை அதிகம் இருக்கிறது. என்னுடைய முதல் பணியாக இதையெல்லாம் தான் சரிசெய்யப் போகிறேன்.

மழைநீர் தேங்குமிடங்களைக் கண்டறிந்து தண்ணீர் தேங்காமல் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இது இரண்டையும் சரிசெய்து விட்டால் கொசு உற்பத்தி ஆகாது, கொசுவை ஒழித்தாலே பலவித நோய்களை வராமல் தடுத்துவிடலாம். கும்பகோணம் ஒரு கோயில் நகரம். சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். அவர்களுக்கான வசதிகளை எவ்விதமாக மேம்படுத்த முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும். 21 மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சியாக கும்பகோணத்தை மாற்றிக்காட்ட வேண்டும் என்பதே எனது லட்சியம்.”

திமுக கவுன்சிலர்கள் மெஜாரிட்டியாக இருக்கும் மாநகராட்சியில் நீங்கள் நினைப்பதை எல்லாம் தடைகள் இன்றி சுதந்திரமாக சாதித்துவிட முடியும் என நம்புகிறீர்களா?

முதல்வரிடம் வாழ்த்துப் பெறும் சரவணன்...

“தங்கத் தலைவர் ஸ்டாலின் ஐயா, கும்பகோணம் மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதுமே எந்தவித எதிர்ப்பும் மறுப்பும் சொல்லாமல் இங்குள்ள அனைத்து திமுகவினரும் ஏற்றுக் கொண்டார்கள். ஒரு சாமானியனுக்கு நம் தலைவர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என்று அவர்கள் பெருமிதப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியானதுமே அனைவரும் என்னைத் தேடிவந்து வாழ்த்திய போதே அதை நான் உணர்ந்து கொண்டேன்.

அதனால் அவர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும், துணைமேயர் தமிழழகன் அண்ணன் ஆதரவோடும் சிறப்பாக செயல்பட்டு, தமிழக முதல்வர் மற்றும் காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்; மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வேன்.”

பல இடங்களில் கோடிகளைக் கொட்டிக் கொடுத்து மேயர் பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். சில இடங்களில் அப்படிச் செலவழித்தும் வாய்ப்புகளைத் தவறவிட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் எந்தச் செலவும் இல்லாமல் மேயராகி இருக்கிறார் எளியவரான சரவணன். தங்களுக்கு இப்படியொரு உழைப்பாளி மேயராக வந்திருப்பதை கும்பகோணத்து மக்களும் உச்சிமுகர்ந்து கொண்டாடுகிறார்கள். சரவணனிடம் அவர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் அந்த எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகாத வண்ணம் திறமையாகச் செயல்பட்டால் ‘21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக மாற்றுவேன்’ என்ற சரவணனின் சபதம் நிச்சயம் நிறைவேறும்.

x