இசை வலம்: இசைவழிக் கல்வி!


‘நைஸ் ஸ்டோரிஸ்’ எனும் தலைப்பில் ஒவ்வொரு துறையிலும் பிரபலமானவர்களின் வெற்றிக் கதைகளை பதிவு செய்துவருகிறது நைஸ் ஸ்டோரிஸ் எண்டர்பிரைசஸ் எனும் அமைப்பு. இதற்காக இந்தியாவின் பிரபலமான பியானோ கலைஞரான அனில் ஸ்ரீநிவாசன் இசைத் துளியாக தன்னால் தொடங்கப்பட்ட ‘ராப்ஸோடி’ அறக்கட்டளை, இசையை கடைக்கோடி மாணவருக்கும் கொண்டு சேர்க்கும் இசை சமுத்திரமாக தற்போது மாறியிருப்பதைப் பகிர்ந்துகொள்ளும் காணொலி இது.

இசையோடு, இசையின் மூலமாகவே கணிதம், அறிவியல் போன்றவற்றையும் தொடர்புபடுத்திச் சொல்லிக் கொடுப்பதுதான் ராப்ஸோடி ஆசிரியர்களின் தனித்திறமை. இப்படிப்பட்ட பாணியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடையே இசை வழிக் கல்வியைக் கொண்டு சென்றிருக்கிறது ராப்ஸோடி இசைவழிக் கல்வி நிறுவனம்.

இசை வழிக்கல்வி மூலமாக பல்கலைக் கல்வியை அளிக்க முடியும் என்னும் விஷயத்தை 2013-ல் தொடங்கியதாகச் சொல்லும் அனில், “சில குழந்தைகளுக்கு பாட்டை ரசிப்பதற்கு மட்டும் பிடிக்கும். சில குழந்தைகளுக்குப் பாடப் பிடிக்கும். சில குழந்தைகளுக்கு வாத்தியங்களை வாசிப்பதற்கு பிடிக்கும். இதை எல்லாம் ஒருங்கிணைக்கும் வழிதான் எங்களின் இசைவழிக் கல்வி. நம்முடைய மொழி, கலாச்சாரம், பண்பாடு, இரக்கம், அன்பு, நாட்டுப்புறவியல், ஓவியம், கைவினை இப்படி பல கலைகளில் சிறந்து விளங்குவதற்கும் மனித மூளைக்கு இசை உதவுகிறது என்பது அறிவியல்பூர்வமான உண்மை. இதை செயல்வழிப்படுத்துவதில் நாங்கள் அடைந்திருக்கும் வெற்றி மைல்கல்தான் தொடக்கத்தில் சொன்ன புள்ளிவிவரம்” என்கிறார்.

இசையின் முக்கியத்துவத்தைப் பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டுவர வேண்டும். இசை மூலமாகவே அறிவியல், கணிதம், புவியியல், வரலாறு என எல்லா பாடங்களையும் விளக்கும் 465 பாடல்களை ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எழுதி குழந்தைகளைப் பாடவைத்து பயிற்சி அளிக்கின்றனர். அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், மீஞ்சூர், புழல், எண்ணூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை போன்ற வட சென்னையில் இருக்கும் பள்ளிகளிலும் இந்தப் பணியைச் செய்கிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருக்கும் பள்ளிகளிலும் இவர்களின் ஆசிரியர்கள் இசைவழிக் கல்வியை போதிக்கின்றனர்.

ஆரோகண அவரோகண ஸ்வர வரிசையைக் கொண்டு கணக்கில் ஏறுவரிசை, இறங்கு வரிசைகளை சொல்லித் தருகிறார்கள். ஒரு ஸ்வரத்துக்கு ஒருமுறை கையொலி எழுப்புவது, இரண்டு ஸ்வரத்துக்கு இருமுறை கையொலி எழுப்புதல் என ஒற்றைப் படை, இரட்டைப் படை எண்களையும், தாளங்களைக் கொண்டு பின்னங்கள் போன்ற கணிதப் பயிற்சிகளையும் இசையின் வழியாகவே சொல்லித் தருகிறார்கள்.

செல்போன்களின் தாக்கத்தால் குழந்தைகளிடமும் அடுத்தவர்களுக்காக இரங்கும் நிலை, அடுத்தவரின் நிலையில் தம்மை வைத்துப் பார்க்கும் உணர்வுகள் குறைந்துவருகின்றன. அப்படி குழந்தைகளிடம் இரக்கத்தைத் தூண்டுவதற்கு ஒரு பாடலைச் சொல்லித்தருகின்றனர்.

அனில் ஸ்ரீநிவாசன் சொல்லும் இசைத் திட்டம்: https://www.youtube.com/watch?v=1-UQXFetQfM

ஒரு வியப்பு!

பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வினீத் இயக்கியுள்ள மலையாள திரைப்படம் ‘ஹிருதயம்’ பாடலான ‘ஒனக்க முந்திரி பறக்க பறக்க’ பாடல்தான் இன்றைக்கு இளசுகளின் மனதைச் சுண்டி இழுக்கிறது. எல்லோரும் வாழ்விலும் நிச்சயமாக இடம்பெறும் வாய்ப்புள்ள ரயில் பயணங்கள், மனதுக்கு நெருக்கமான தோழமை போன்ற கதைச் சம்பவங்களை நமக்கான நடைமுறையோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்வதுதானே மனித இயல்பு. அந்த வழமைக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் இந்தப் பாடலுக்கு ஹேஷம் அப்துல் வஹாப்பின் இசையும் திவ்யா வினீத்தின் குரலும் கூட்டணி அமைத்திருக்கிறது.

இளம் தலைமுறைக்குப் பிடித்தமான எந்த விஷயத்தையும் இசைத் துறையில் இருப்பவர்கள் ஆராதிக்கத் தவறுவதே இல்லை. இதோ, திரை இசையிலும் சுயாதீனமான இசையை இண்டோசோல் மூலமாக அளித்துவரும் வயலின் கலைஞர் கார்த்திக்கையும் இந்தப் பாடல் கவர்ந்திருக்கிறது. அதன் விளைவாகவே தன் நண்பர்களுடன் இணைந்து அந்தப் பாடலுக்கான கவர் வெர்ஷனை இந்தக் காணொலியில் அட்டகாசமான இசை ராஜாங்கத்துடன் அளித்திருக்கிறார். திவ்யா வினீத் முன்மொழிந்த பாடலை தன் வயலினில் வழிமொழிந்திருப்பதுதான் இந்தக் காணொலியின் சிறப்பு!

முந்திரி பாடலின் முத்தாய்ப்பான கவர் வெர்ஷனைக் கேட்க: https://www.youtube.com/watch?v=gf-EY9PqTvA

ஓர் இனிப்பு!

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை சாம்ராஜ்யத்திலிருந்து ஒரு மலர்க்கணையாய் கேட்பவரின் இதயத்துக்குள் ஊடுருவுகிறது இந்த ‘பெப்பி’ கேண்டி! இந்தி போன்ற மொழிகளிலும் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலின் தமிழ்ப் பதிப்பில் வரிகளை எழுதியிருப்பவர் சொல்லிசைக் கலைஞரான அறிவு. ‘அரிதாரம் போடாத குயில் ஆகவே… தித்திக்கும் கேண்டி…’ இப்படி ஓர் அழகான இளம் பெண் பாடுவதற்கான பாடலை எழுதுவதிலும் அறிவின் தமிழும், ஆங்கிலமும் ஒத்திசைவாக கைகோத்திருக்கிறது.

அராபிய பாணியிலான இசையை, பாடலுக்கு மிகவும் பொருத்தமாக வழங்கியிருக்கிறார் யுவன். இனிமையாகப் பாடுவதோடு அழகாகவும் இருக்கும் த்வனி பானுஷாலியே இந்த இசை ஆல்பத்தின் காட்சியிலும் தோன்றுவது இரட்டிப்பு இனிப்பு!

இனிக்கும் கேண்டி கானம் கேட்க: https://www.youtube.com/watch?v=DUPJfKxkdUs

ஒரு கசப்பு!

அறிவியல் வளர்ந்திருக்கிறது. ஆளுயரக் கட்டிடங்கள் உயர்ந்திருக்கின்றன. விண்வெளிக்கே உல்லாசப் பயணம் செல்கின்றனர். ஆனால், சில மனிதர்களின் மனம் இன்னமும் படு பாதாளத்தில் அழுகிப்போய்த்தான் கிடக்கிறது என்பதைச் சொல்கிறது `பறை’ எனும் இந்தப் பாடலின் காணொலி. பறை இசைக் கலைஞர் ஒருவரின் மரணத்தை ஊரும், சமூகமும் சாதியின் பேரால் எப்படி இழிவாக நடத்துகிறது என்பதைப் பதைபதைக்கும் காட்சிகளோடு நம் முகத்தில் அறைகிறது இந்தப் பாடல். ‘பப்பர பரபர…’ என்று தொடங்கும் பாடலுக்கான இசையை வழங்கி உருக்கமாகப் பாடியும் இருக்கிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

பாடலின் வரிகளை லோகனும், ஷான் ரோல்டனும் செதுக்கியிருக்கின்றனர். தற்போது உள்ள சூழ்நிலையில், மனிதர்களிடம் புரையோடிப்போயிருக்கும் சாதிக் கொடுமையை விமர்சிக்கும் கனமான கருத்தைப் படமாக்கியிருக்கும் இயக்குநர் குமரனையும் அவருக்கு ஆதரவு அளித்து தயாரித்திருக்கும் திங்க் மியூசிக் நிறுவனமும் பாராட்டுக்கு உரியவர்கள்.

அதிரவைக்கும் உண்மை பேசும் பறை: https://www.youtube.com/watch?v=KCD-uY3iDMU

x