அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநல பயிற்சி: இணையவழியில் ஜூன் 24-ல் தொடக்கம்


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மனநலம்-வாழ்வியல் திறன் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 முதல் 28-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: "தமிழகத்தில் கரோனா பரவல் காலத்தில் வளரிளம் பருவத்தினர் உளவியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்துள்ளனர். அதை ஈடுசெய்து அவர்களின் சமூக மனவெழுச்சி நலனை மேம்படுத்தவும், நேர்மறை எண்ணங்களை உருவாக்கவும், மகிழ்ச்சியான கற்றலில் ஈடுபடவும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மனநலம்-வாழ்வியல் திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இதை கருத்தில் கொண்டு 2022 - 23, 2023 - 24 ஆகிய கல்வியாண்டுகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பு கல்வியாண்டுக்கான ( 2024 - 25 ) பயிற்சி ஆசிரியர்களுக்கு இணையவழியில் தொடங்கியது. இந்த பயிற்சியானது நாளை மறுநாள் ( ஜூன் 22 ) வரை மண்டல வாரியாக வழங்கப்படவுள்ளது. அதன்பின்னர் மாணவர்களுக்கு பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாக ஜூன் 24 முதல் 28-ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்காக மாணவர்களுக்கான மின்னுருவாக்கம் செய்யப்பட்ட கட்டகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் பயிற்சிக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.