நேற்று பலூன் வியாபாரி... இன்று மாடலிங் கலைஞர்... கலக்கும் இளம்பெண்


கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அண்டலூர்காவு பரசுராமன் கோயிலில் நடக்கும் தைய்யம் விழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தத் திருவிழாவின்போது கிஸ்பு என்னும் வடநாட்டுப் பெண் கோயில் வாசலில் அமர்ந்திருந்து பலூன் வியாபாரம் செய்துவந்தார். ஏற்கெனவே ஊதி வைத்திருந்த பலூன்களுக்கு இடையில் கிஸ்பு ஒரு மலரைப் போல் இருப்பதைப் பார்த்த புகைப்படக் கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன், கிஸ்புவை புகைப்படம் எடுத்தார்.

தான் எடுத்த புகைப்படங்களை கிஸ்புவிடமும், அவரோடு இருந்து பலூன் விற்றுக்கொண்டிருந்த அவரது தாயாரிடமும் காட்ட அவர்களும் அதைப்பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அவர்களின் அனுமதியோடு கிஸ்புவின் படத்தை அர்ஜூன் கிருஷ்ணன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலானது. புகைப்படக் கலைஞர் அர்ஜூன் கிருஷ்ணன் பதிவிட்ட படங்களிலேயே இந்த புகைப்படம் அதிகமாகப் பகிரப்பட்டதால், கிஸ்புவை வைத்து மாடலிங் போட்டோசூட் நடத்தவும் முடிவு செய்தார். இதுகுறித்து கிஸ்புவின் குடும்பத்தினரிடம் கேட்க அவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

ஒப்பனைக் கலைஞர் ரம்யா பிரஜூல், கிஸ்புவை மாடலிங்கிற்கு ஏற்ப அலங்காரம் செய்தார். இதற்கென்று கிஸ்பு பாரம்பரியமான கசவு உடையில், தங்க நகைகளுடன் அலங்கரிக்கப்பட்டு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்தப் புகைப்படத்தையும், கிஸ்பு பலூன் விற்றுக்கொண்டிருந்த பழைய புகைப்படத்தையும் இணையவாசிகள் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம் கிஸ்புவுக்கு மாடலிங் வாய்ப்புகளும் குவிந்துவருகிறது.

கேரளாவில் கடந்தவாரம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மம்மிக்கா என்ற 60 வயதான கூலித்தொழிலாளி மாடலிங் கலைஞராக அசத்தினார். இந்தவாரம் பலூன் வியாபாரியான கிஸ்பு மாடலிங் கலைஞராக உருவெடுத்துள்ளார். சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஒற்றைப் புகைப்படத்தால் பலூன் வியாபாரியான கிஸ்புவை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டார். வாழ்த்துகள் கிஸ்பு.

x