முதன்முதலாகப் பெண்களே இயக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்: மகளிர் தினத்தில் மகத்தான சாதனை!


சர்வதேச மகளிர் தினம் நேற்று (மார்ச் 8) உலகமெங்கும் கொண்டாடப்பட்டது. மகளிரின் மகத்தான சக்தியைப் போற்றும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பெண்களை கவுரவிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அந்த வகையில், மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே ஒரு அதிவேக ரயிலை இயக்கியிருப்பது இந்தியப் பெண்களுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கிறது. ஒரு அதிவேக ரயிலைப் பெண்கள் மட்டுமே இயக்கியிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

பிஹாரின் தானாபூர் மற்றும் தூர்க் நகரங்களை இணைக்கும் 13288 தெற்கு பிஹார் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முழுவதும் பெண்கள் வசமானது. சக்ரதார்பூரிலிருந்து ரூர்கேலா வரையிலான வழித்தடத்தில் ரயிலை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர். புக்கிங் ஊழியர், ஸ்டேஷன் மாஸ்டர், லோகோ பைலட், டிக்கெட் பரிசோதர், பாதுகாப்புப் படையினர் என அனைவரும் பெண்கள்தான்.

தென்கிழக்கு ரயில்வேயின் சக்ரதார்பூர் பிரிவின் மேலாளர் விஜய் குமார் சாஹு, மகளிர் நல அமைப்பின் தலைவர் அஞ்சுலா சாஹு ஆகியோர் இந்த ரயிலைத் தொடங்கிவைத்தனர். 165 கிலோமீட்டர் தொலைவுக்குப் பெண் ஊழியர்களே ரயிலை இயக்கியிருப்பது இந்திய மகளிரின் சாதனைப் பயணத்தில் இன்னொரு மைல் கல் எனக் கருதப்படுகிறது!

x