ஏப்ரல் 7ல் குடியரசுத் தலைவர் மாளிகை முற்றுகை


விவசாயிகள் சங்க அவசர கூட்டம்

மேகேதாட்டு அணையை தடுத்து நிறுத்த மறுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து, டெல்லி குடியரசு தலைவர் மாளிகையை முற்றுகை இடப்போவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் அதன் அமைப்புச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் இன்று திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய பிஆர் பாண்டியன், "காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டில் ஒத்த கருத்தோடு உரிமைக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் உள்ளாட்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசியபோது, 'அதிகாரமில்லாத காவிரி மேலாண்மை ஆணையம்' என குறிப்பிட்டுள்ளார். இது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு ஒத்த கருத்தோடுதான் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொண்டோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள கருத்து விவசாயிகளுக்கு மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது. அதிகாரம் இல்லாத ஆணையம் என்றால் மாற்று குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த முன்வரவேண்டும்.

அதிகாரத்தை பயன்படுத்தி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசாங்கம் ரூ.1000 கோடி ஒதுக்கி மேகேதாட்டு அணை கட்டுமான பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சட்டவிரோதம் என அறிவித்திட வேண்டும். மேலும் ஆணையமே உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்து மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்.

செய்தியாளர்களை சந்திக்கும் பி.ஆர் பாண்டியன்

காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட வைத்திட தமிழக அரசு அனைத்துக் கட்சிகள், விவசாயிகளை ஒருங்கிணைத்து தீவிர போராட்டங்களில் களமிறங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு தடுக்க தவறுவதை கண்டித்தும், உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் ஏப்ரல் 7ம் தேதி டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். முதல்நாள் 6ம் தேதி நாடாளுமன்றம் முன் காவிரி உரிமைக்கான போராட்டம் குறித்து மாபெரும் உண்ணாவிரதம் நடத்தி மத்திய அரசுக்கும் உணர்த்துவது எனவும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

x