குழந்தை குறையின்றி பிறக்கும் வரம் வேண்டுமா?


காலத்திற்கும் வேதனையளிக்கும் மரபியல் நோய் வராமல் தடுக்கவும் முடியாது, வந்தால் குணப்படுத்தவும் முடியாது. அத்தகைய நோயை கருவுற்றிருக்கும்போதே முளையிலேயே கண்டறிய உதவும் பரிசோதனை உள்ளதா என்ற கேள்வியோடு கடந்த வாரம் முடித்திருந்தோம்.

உண்மையிலேயே அப்படி ஒரு பரிசோதனை உள்ளது. நுட்பமான இந்தப் பரிசோதனை NT scan (Nuchal Translucency Scan) எனப்படுகிறது. ஸ்கேனிங் டவுன்'ஸ் சிண்ட்ரோம் மற்றும் அதைப் போன்ற இன்னபிற க்ரோமோசோம் பாதிப்புகளையும் (ட்ரைசோமி 13, ட்ரைசோமி 18) கண்டறிய இந்த ஸ்கேன் உதவுகிறது. நியூக்கல் ட்ரான்ஸ்லூசன்சி ஸ்கேன், கருத்தரித்த மூன்றாவது மாதத்திற்குள், சிறப்பு ஸ்கேன் நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தக் காலகட்டத்தில்தான் சிசுவின் கழுத்துப் பகுதியின் தோலுக்கும் தோலடித் திசுவுக்கும் இடையே நிணநீர் தேங்கி, கழுத்தின் தோல் தடிமன் சற்று அதிகமாகும் என்பதால் அதை இந்த ஸ்கேனிங் கணக்கிட்டுவிடும். அத்துடன் குழந்தையின் மூக்கு எலும்பு, இதயத்துக்குள் செல்லும் ரத்த ஓட்டம் போன்ற சில அதிகப்படியான குறியீடுகளையும் வைத்து, வளரும் குழந்தைக்கு மனநலிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா என்பதைக் குறிப்பிட்டுக் காட்டிவிடும்.

மேலும் இந்த ஸ்கேனிங் பரிசோதனையுடன் கருவுற்ற தாய்க்கு மேற்கொள்ளப்படும் டபுள் மார்க்கர் (Dual Test) என்ற ரத்தப் பரிசோதனை மூலமாக மனநலிவு ஏற்படும் வாய்ப்பை 95 சதவீதம்வரை கண்டறிய முடிகிறது. அதாவது, இந்தப் பரிசோதனை 100 சதவீதம் மனநலிவு இல்லை என உறுதியளிக்காது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

அப்படி இவ்விரு சோதனைகளின் முடிவில் மன நலிவு ஏற்படக்கூடும் என்று முடிவுகள் தெரிவிக்கும் போது, Chorion Villus sampling, Amniocentesis என, வளரும் கரு அல்லது கருவைச் சுற்றியுள்ள பனிக்குட நீரை நேரடியாகப் பரிசோதனை செய்வதன் மூலம் க்ரோமோசோம் குறைபாடுகள் உறுதி செய்யப்படுகிறது. அப்படி க்ரோமோசோம் பாதிப்புகள் உறுதியாகத் தெரிய வரும்போது, நான்கு மாதங்கள் மட்டுமே கடந்திருக்கும் என்பதால், கருச்சிதைவு குறித்த முடிவுகளை தாமதமின்றி எடுத்துவிடலாம். ஆகவே, இந்தப் பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தைகள் பிறக்கும் வாய்ப்பினை பெரும்பாலும் இந்த ஸ்கேனிங் தவிர்த்துவிடுகிறது எனலாம்.

மேலும் இந்த என்டி ஸ்கேனிங்கில், Down's screening எனும் மனநலிவு சோதனை மட்டுமன்றி, சில குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய Acrania, Anencephaly போன்ற, தலையின்றி பிறக்கும் கொடும் குறைபாடுகளையும் ஆரம்பத்திலேயே கண்டறிய உதவுகிறது. அத்துடன் கருப்பைக்குள் செல்லும் ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா, கர்ப்பகால ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்புள்ளதா போன்ற இன்னபிற தகவல்களையும் இது தருகிறது என்பதால், இந்த மூன்றாம் மாத ஸ்கேனிங் அனைத்து விதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

தாய்க்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு பாதிப்பு போன்ற வேறு பாதிப்புகள் இல்லாதபோது, ஏற்கனவே கூறப்பட்ட டேட்டிங் ஸ்கேன் மற்றும் இந்த என்டி ஸ்கேன் ஆகிய இரண்டையும் ஒருசேர மூன்றாம் மாதத்தில் மேற்கொள்வதும் நடைமுறையில் உள்ளது.

நான்கைந்து குழந்தைகள் பெற்றுக் கொண்ட காலம் போய் ஒன்றே ஒன்று போதும் என்று காலம் வந்துவிட்டது. அந்த ஒரு குழந்தையும் குறையின்றி பிறப்பது வரம் என்றால், குறைபாட்டை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் இந்த ஸ்கேன் இன்னொரு வரம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த மூன்றாவது மாத ஸ்கேனிங் பெற்றோர்களுக்கும், பிறக்கப் போகும் பிள்ளைகளுக்குமான ஆரோக்கிய வாழ்வுக்கானது.

(நம்பிக்கைகள் தொடரும்)

கட்டுரையாளர் :மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர். தொடர்புக்கு: savidhasasi@gmail.com
நடுத்தர வயதில் கர்ப்பம் தரித்தல் ஆபத்தா?

x