சிறகை விரி உலகை அறி-40: வலியும் வாழ்வும்!


தொழுகைக்கூடத்தின் உள்ளே...

கட்டிடங்களில் வழியும் சூரிய ஒளியை, மரங்களோடு பாடி ஆடும் காற்றின் குரலை, குழலூதி பறக்கும் பறவைகளின் இறகை ரசித்துக்கொண்டே நடந்தேன். சாலைகள், அதிலூரும் வாகனங்கள், அதனோரம் கடைகள், விரைந்தோடும் கால்கள்! ஒரு பார்வையாளராக அனைத்தையும் பார்த்ததில் எனக்கான புதினத்தில் நானே நாயகனாகிப்போனேன்.

அழுகையின் மரம்

ஹங்கேரி நாட்டில் ஒருநாள் மட்டுமே சுவாசிப்பது என் திட்டமென்பதால், பேருந்து மற்றும் தொடர்வண்டி நிறுத்தங்களைத் தேடவும் காத்திருக்கவும் விரும்பவில்லை. இறகைப் போலே சுதந்திரமாக அலைந்தேன். காலையில் விமான நிலையத்திலிருந்து பேருந்தில் வந்ததோடு சரி. நாள் முழுவதும் எந்வொரு வாகனத்திலும் ஏறவேயில்லை. கன்னங்களை வருடிய சூரிய சிரிப்பு உச்சந்தலையில் முத்தமிட்ட வேளையில் மதிய உணவு உண்டேன். கைப் பையை மறக்காமல் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

தொழுகைக்கூடத்தின் வெளியே...

தொழுகைக்கூடம்

உலகம் முழுக்கவே சமயங்களும் அதன் வழிபாட்டுத்தலங்களும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றன. இந்துக்களுக்கு கோயில், இஸ்லாமியர்களுக்கு மசூதி, கிறிஸ்தவர்கள் கோயில் என அழைத்தாலும், ஆங்கிலத்தில் சர்ச், யூதர்களுக்கு தொழுகைக்கூடம் (Synagogue).

தொழுகைக்கூடத்தை நான் பார்த்ததே இல்லையாதலால், ஒருங்கிணைப்பு, கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தல் மற்றும் திறந்த மனதுடனான உரையாடலின் அடையாளமாக புடாபெஸ்ட்டில் வீற்றிருக்கும் டோகனி சாலை தொழுகைக்கூடத்தைப் (Dohany street synagogue) பார்க்க விரும்பினேன். இது, ஐரோப்பாவின் மிகப்பெரிய தொழுகைக்கூடம்; உலகின் இரண்டாவது பெரிய தொழுகைக்கூடம் (முதலாவது நியூயார்க்கில் உள்ளது); ஐரோப்பிய வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் இது ஆற்றிய பங்கினை முன்னிட்டு ‘ஐரோப்பிய புராதன சின்னங்கள்’ பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது.

வியன்னா கட்டிட கலைஞர் லுட்விக் வான் பார்ஸ்டர் (Ludwig von Forster) இஸ்லாமிய, பைசாண்டிய, ரோமன், மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளைக் கோத்து கலைநயமும், கவிமனமும், இறையருளும் கொண்டு வடிவமைத்துள்ளார். 1859-ல் திறக்கப்பட்ட இந்த தொழுகைக்கூடத்தின் நீளம் 53.1 மீட்டர், அகலம் 26.5 மீட்டர், உள்கூடு 26 மீட்டர் உயரம். தரைத்தளத்தில் ஆண்களும், பால்கனியில் பெண்களுமாக மொத்தம் 2,964 பேர் அமர்ந்து வழிபாட்டில் பங்கெடுக்கலாம்.

அழுகையின் மரத்தின் முன்பாக...

நுழைவுச்சீட்டு வாங்கியதும், ஆங்கில சுற்றுலாவுக்கான குழுவில் பெயர் கொடுத்தேன். காத்திருந்த வேளையில், முகப்பிலிருந்த நினைவுப் பொருட்கள் வாங்கும் கடைக்குச் சென்றேன். ஹங்கேரியின் நினைவாக, அதேவேளையில் எடை குறைவாக வாங்க நினைத்தேன். பலவற்றைத் தேடி, உள்ளங்கையில் எடைபார்த்து, ‘அழுகையின் மரம்’ பொறிக்கப்பட்டிருந்த உருளை கல் வாங்கினேன்.

சரியான நேரத்தில் வழிகாட்டி வந்தார். என்னைப்போன்று நுழைவுச்சீட்டு வாங்கி காத்திருந்த வெளிநாட்டினர் பலரும் சேர்ந்துகொண்டோம். “புனிதத்தலத்துக்குள் செல்வதால், பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டுகிறேன்” என்றார் வழிகாட்டி. யூத ஆண்கள் பொதுவாக தலையில் தொப்பி (Kippah) அணிவது வழக்கம். வெள்ளை காகிதத்தில் செய்யப்பட்டிருந்த தொப்பியும், கொண்டை ஊசியும் கொடுத்து எங்களையும் அணிந்துகொள்ளச் சொன்னார். அணிந்ததும் அழகானோம். தொழுகைக்கூடத்துக்குள் அணியமானோம்.

சட்டமா... மனிதரா?

தொழுகைக்கூட அழகில் உயர்ந்தது தலை, பிளந்தது வாய், விரிந்தன விழிகள். என்னே அழகு! ஜொலிக்கும் விளக்குகளும், ஒலிக்கும் மெல்லிசையும், பரவும் அருள் உணர்வும் ஏதோ செய்தன. இருக்கையில் அமர்ந்தோம். கனிவுடன் வரவேற்ற வழிகாட்டி, “ஒவ்வொரு தொழுகைக்கூடத்திலும் 3 முக்கிய பொருட்கள் கட்டாயம் இருக்கும், (1) திருச்சட்டப் புத்தகம் (Torah) வைக்கப்பட்டுள்ள பேழை (The Ark), (2) பேழையின் முன்னால் என்றென்றும் எரிந்துகொண்டிருக்கும் விளக்கு, (3) தாவீதின் விண்மீன். மேலும், கி.பி.70-ல் உரோமையர்களால் ஜெருசலேம் கோயில் இடிக்கப்பட்டதால், புதிய ஆலயம் கட்டப்படும்வரை யூதர்கள் துக்கம் அனுசரிக்கிறோம்.

தொழுகைக்கூட பீடம் மற்றும் பைப் ஆர்கன்

அதனால், தொழுகைக்கூடங்களில் இசைக் கருவிகள் இசைப்பது வழக்கமில்லை. ஆனாலும், உயிரோட்டமான வழிபாட்டுக்காக இங்கே பைப் ஆர்கன் இருக்கிறது. ‘பலிபீடத்தின் பின்புறம் தானே உள்ளது’ என விளக்கம் கொடுக்கிறார்கள்” என்று நமட்டுச் சிரிப்புச் சிரித்தார். உண்மைதான், “சட்டங்கள் மனிதர்களுக்குத்தானே. மனிதர்கள் சட்டங்களுக்கானவர்கள் அல்லவே” (இயேசு).

கல்வியா கடவுளா?

“உங்கள் ஊரில் பொது பணம் இருக்கும் அல்லவா! அது, கூடுதலாக இருந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார் வழிகாட்டி.

ஒரு பெண்மணி, “கோயிலுக்குக் கொடுப்போம்” என்றார்.

“அப்பட்டமான, கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களின் பதில்” என்று சொல்லி சிரித்தவர், “யூத சமூகத்தில் பணம் மீதம் இருந்தால் பள்ளிகள் கட்டவும், குழந்தைகளின் கல்வி சார்ந்த முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவோம். பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் 1826 வரை யூதர்களுக்கு இடமில்லை. இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் யூதர்களுக்கு தீவிர இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் நாங்கள் படித்தோம். இதுவரை கொடுக்கப்பட்டுள்ள 900-க்கும் அதிகமான நோபல் விருதுகளில், நாங்கள் 206 விருதுகள் பெற்றுள்ளோம். இந்த விருதுகளில், 40 சதவீதம் பொருளாதாரம், 30 சதவீதம் மருத்துவம், 25 சதவீதம் இயற்பியல், 20 சதவீதம் வேதியல், 15 சதவீதம் இலக்கியம், 10 சதவீதம் அமைதிக்காக” என நீட்டி முழங்கினார்.

‘அட ஆமால்ல..! நம் ஊரிலும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் கோடிகளை செலவழித்து கோயில்களைக் கட்டுகிறார்கள், புதுப்பிக்கிறார்கள். ஆனால், அதே ஊரில் பள்ளிக்கூடங்கள் போதுமான அடிப்படை வசதிகளே இல்லாமல்தானே இயங்குகின்றன’ என யோசித்தேன். வழிகாட்டியின் கருத்தை வழிமொழிந்தேன்.

போரில் இறந்தவர்களுக்கான நினைவுக் கூண்டு

நினைவு தொழுகைக்கூடம்

தொழுகைக்கூட அழகியலையும், யூதர்களின் ஞானத்தையும் சிலாகித்த வழிகாட்டி, ரத்தம் பிசுபிசுக்கும் யூதர்களின் வரலாற்றைச் சொல்லி தொழுகைக்கூடத்தின் இடதுபுறமாக வெளியே அனுப்பினார். முதல் உலகப் போரில் தோற்ற ஹங்கேரியின் மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பு அண்டை நாடுகளால் பங்குபோடப்பட்டிருந்தது. இச்சூழலில், ஹங்கேரி யூதர்கள் சிறுபான்மையினரானார்கள். தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்கள். எனவே, ஹங்கேரி ராணுவத்தில் சேர்ந்து போரிட்டு மரணித்த யூத வீரர்களின் பெயர்களை ஆவணப்படுத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக, முதல் உலகப் போரில் இறந்த 10 ஆயிரம் ஹங்கேரிய யூத போர் வீரர்களுக்காக நினைவு தொழுகைக்கூடம் (Heroes’ synagogue) எழுப்பினார்கள். நினைவு தொழுகைக்கூடத்தில் வீரர்களுக்கு வணக்கம் செலுத்தினேன்.

இரண்டாம் உலகப்போர் - யூதர்களின் நினைவிடம்.

ஆரோ கிராஸ்

யூதர்களின் நினைவிடம்

தொழுகைக்கூட வளாகத்திலேயே இரண்டாம் உலகப் போரின் கொடூரம் புதைக்கப்பட்டுள்ளது. ஹிட்லரைப் போலவே பாசிச எண்ணம் கொண்டவர் செலசி (Szalasi). ஹங்கேரிய யூதர்களை கொன்றழிக்க, ஆரோ கிராஸ் (Arrow Cross) எனும் அமைப்பை இவர் தொடங்கினார். சிலுவையின் நான்கு முனைகளிலும் அம்புக்குறி இருப்பதே, ஆரோ கிராஸ் அமைப்பின் அடையாளம். இந்த அமைப்பின் வெறிபிடித்த வீரர்களின் முற்றுகையாலும், பட்டினியாலும், இட நெறுக்கடியாலும் இறந்த 2,281 பேர், 24 பெரிய குழிகளில் இங்குதான் புதைக்கப்பட்டனர். தற்போது, துயரக் குழிகளுக்கு மேல் பசும் மரங்கள் செழித்து நின்று தூய காற்று பரப்புகின்றன. இறந்தவர்கள் சிலரின் பெயர்கள் குழிகளைச் சுற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. அருகில் உள்ள சுவரில், புறாக்கூண்டுகள்போல செய்து, இறந்தவரின் பெயரை ஒவ்வொன்றிலும் பொறித்து, கூண்டினுள் பாதியளவு கற்களை நிரப்பியுள்ளார்கள்.

அழுகையின் மரக் கிளைகளில் பெயர்கள்...

அழுகையின் மரம்

ஜெருசலேமில் அழுகையின் சுவர் இருப்பதுபோல, வில்லோ மரத்தை மாதிரியாகக்கொண்ட, அழுகையின் மரம் (The Weeping willow) தொழுகைக்கூட வளாகத்தில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் நாசி மற்றும் ஹங்கேரி நாசிக்களால் கொல்லப்பட்ட 6 லட்சம் ஹங்கேரி யூதர்களின் நினைவிடம் இது. நகரின் அழிவையும் துயரத்தையும் பார்ப்போர் இதயத்தில் கடத்துகிறது இம்மரம்.

ஹங்கேரியில் பிறந்த தன் தந்தையின் நினைவாக அமெரிக்க நடிகர் டோனி கர்டிஸ் 1991-ல் இதை கட்டினார். மரத்தின் இலைகள் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வோர் இலையிலும் ஒவ்வொரு பெயர் என, இனப் படுகொலையில் இறந்தவர்களது சில ஆயிரம் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதன் முகப்பில் 3 தூண்கள் நிற்கின்றன. கடவுள் 10 கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் கொடுத்தார் என்பது யூதர்களின் நம்பிக்கை. கற்பலகைகளின் வடிவத்தில், தொழுகைக்கூடத்தின் அனைத்து ஜன்னல்களையும் போலவே, இந்தத் தூண்களின் இடைவெளியும் அமைக்கப்பட்டுள்ளது.

யூத அருங்காட்சியகம்

யூதர்களுக்கென்று பாலஸ்தீனத்தில், தங்களின் பாரம்பரிய நிலத்தில் ஒரு நாடு வேண்டுமென்று உலகெங்கும் உள்ள யூத தலைவர்களை தியோடர் ஹெர்சல் ஒருங்கிணைத்தார். கடவுளின் திருமலைக்குத் திரும்பிச் செல்ல (Return to Zion) வேண்டும் என்கிற ஏக்கம் யூதர்களுக்கு உண்டு. அதை அடிப்படையாகக் கொண்டு, ஷயனிசம் (Zionism) எனும் தேசியவாத அமைப்பைத் தொடங்கினார். தியோடர் பிறந்த இடத்தில் அதாவது, தொழுகைக்கூடத்துடன் சேர்ந்துள்ள கட்டிடத்தில் தற்போது யூத அருங்காட்சியகம் செயல்படுகிறது. கனத்த இதயத்துடன் அருங்காட்சியகத்துக்குள் கால் வைத்தேன்.

(பாதை நீளும்)

பாக்ஸ்

யூரோ பொதுவானதுதான்... ஆனால்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நாணயம் யூரோ. ஆனாலும், யூரோவை மட்டும் நம்பிச் செல்லக்கூடாது. ஐரோப்பிய நாடுகள் பல, யூரோ வருகைக்கு முந்தைய தங்கள் நாட்டு நாணயத்தை இப்போதும் பயன்படுத்துகிறார்கள். தங்குமிடம் அல்லது சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்யும்போதே, தங்கள் நாட்டு நாணயத்தில்தான் பணம் செலுத்த வேண்டும் என சொல்லிவிடுவார்கள். சிறிய கடைகளில் யூரோவை வாங்க மறுப்பார்கள் அல்லது, யூரோவை வாங்கிக்கொண்டு தங்கள் நாட்டு பணத்தில் சில்லறை தருவார்கள். அப்படித்தான், புடாபெஸ்ட்டில் மதிய உணவு சாப்பிட்டதும் யூரோ கொடுத்தேன். ஹங்கேரி பணம், ஃபோரின்ட் (Forint) கேட்டார்கள். “இல்லை” என்றேன். யூரோவை வாங்கிக்கொண்டு ஃபோரின்டில் சில்லறை கொடுத்தார்கள்.

x