‘கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு போலீஸை முடுக்கி விடவேண்டும்’ - சி.பி.ராதாகிருஷ்ணன்


சி.பி.ராதாகிருஷ்ணன் | கோப்புப் படம்

புதுச்சேரி: கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசு காவல்துறையை முடுக்கி விட வேண்டும், காவல்துறையில் தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுத்தால் சரியாகி விடும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி ராஜ் நிவாஸில் மேற்கு வங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் நடந்தது. இந்நிகழ்வுக்கு பிறகு துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில நிறுவன தினத்தை கொண்டாடுவது மகத்தானது. அனைத்து ஆளுநர் மாளிகையிலும் பல்வேறு மாநில நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் புதுச்சேரி ராஜ் பவனில் இன்று மேற்கு வங்க மாநில தினத்தை கொண்டாடினோம்.

மாநிலத்தவரோடு கலந்துரையாடியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்திய தேசம் இன்றும் என்றும் ஒரே நாடுதான். எத்தனை பிரிவினைவாதங்கள் எழுந்தாலும் அவை அனைத்தும் மக்களால் முறியடிக்கப்படும். கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் அதிகமானோர் இறந்ததை பற்றி கேட்கிறீர்கள். காவல்துறை சில நேரங்களில் சமூக சிந்தனையை மறந்து விடுகிறார்கள். இது தான் அடிப்படைக்காரணம். ஒருவரையொருவரை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.

மனசாட்சிக்கு எதிராக நடந்து கொள்ளாமல் காவல்துறை தனது கடமையாற்றும்போது இதுபோன்ற குற்றங்களை அகற்ற முடியும். மதுக்கடைகள் உள்ளன. ஏன் இந்த கள்ளச்சாராயத்தை அணுகுகிறார்கள் என தெரியவில்லை. தன் குடும்பம், தன் மக்கள், தான் இறந்தால் அவர்கள் வாழ்வே இருண்டு விடும் என்பதை உணர்ந்து கள்ளச்சாராயம் அருந்துவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும். மிகப் பெரிய துயரம் இது. தன்னை அடக்கி ஆள முடியாமல் இதை நாடி உள்ளனர். சாதாரண ஏழை மக்கள் இறந்துள்ளனர்.

இந்த கள்ளச்சாராயத்தை ஒழிக்க, காய்ச்சுவோர் மீது எடுக்கும் கடுமையான நடவடிக்கைதான் ஏழை மக்களை காக்க வேண்டும். சட்டத்தை காவல்துறை செயல்படுத்தினால் போதும். உண்மையை சொல்ல வேண்டும் பூரண மதுவிலக்குதான் எனக்கும் முதல்வருக்கும் தனிப்பட்ட கொள்கை. அதை உடனே அமல்படுத்த முடியும் என நினைக்கவில்லை. புதுச்சேரிக்கு தமிழ் கலாச்சாரம் தான் ஆணிவேர். பல காலம் இங்கே பிரெஞ்சு கலாச்சாரம் இருந்து வந்துள்ளது. இதை மனதில் கொண்டுதான் முடிவு எடுக்க முடியும்.

எத்தகைய நடைமுறையும் சமுதாயத்துக்கு தீங்கு இழைக்காமல் பார்க்கவேண்டும். ரெஸ்டோ பார் இரவு 12 மணிக்குள் மூட அனைவரும் ஒத்துழைப்பார்கள், ஒத்துழைக்க மறுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் வேறு, சாராயம் வேறு- வித்தியாசம் இருக்கிறது. சாராயம் ஒழிக்க முயற்சி எடுத்து கள்ளச்சாராயத்தில் முடிந்து விடக்கூடாது. ஒவ்வொன்றாக ஒழிப்போம். கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஒரே வேண்டுகோள் காவல்துறையை முடுக்கி விடுங்கள்.

காவல்துறையில் தவறு செய்வோர் மீது நடவடிக்கை எடுத்தால் இது சரியாகி விடும். புதுச்சேரியில் சாராயக்கடை மூடும் யோசனையில்லை. அதை முறைப்படுத்துவது, மக்கள் வாழ்வுக்கு எதிராக இல்லாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர யோசிக்கிறோம். விதிமுறைகளை மீறுவோர் நடவடிக்கை எடுக்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.