இசைவலம்: ரத பந்தம் பாடல்கள் - ஓர் அறிமுகம்!


பாடல்கள் எழுதுவதற்கென்று தனியாக இலக்கணம் இருப்பதால்தான் ‘இசைத் தமிழ்’ என்று வழங்கப்படுகிறது. இறைவனோடு தங்களுக்கு ஏற்பட்ட அன்பு, காதல், ஊடல் எனப் பல உணர்வுகளையும் அனுபவங்களையும் பக்திபூர்வமான பாடல்களாக்கிய மகான்கள் பலர் நிறைந்திருக்கும் தேசம் நம்முடையது. பாட்டின் கருத்தில் மட்டுமல்ல, உருவத்திலேயே தேரை நம் கண்முன் தரிசனப்படுத்திய வல்லமை ஆன்மிக நெறி பரப்பிய நம்முடைய அருளாளர்களுக்கு இருந்திருக்கிறது. சைவம், வைணவம் என இரண்டு நெறிகளிலும் இத்தகைய கவிகள் உள்ளதை வரலாற்றின் மூலமாக அறியலாம்.

உடனடியாகப் பாடல் புனையும் திறன் படைத்தவர்களை ‘ஆசுகவி’ என்பர். இதுபோல், நம் இலக்கணத்தில் பல கவிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. மதுர கவி, வித்தார கவி, சித்திரக் கவி அவற்றில் சில. இவற்றில் சித்திரக் கவி எனப்படுவது, பாடலின் வரிகள், வார்த்தைகளைக் கொண்டே தேரைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவது. இதற்கு ‘ரத பந்தம்’ என்று பெயர்.

திருஞானசம்பந்தர் பாடிய பதிகங்களை, அவரின் தந்தை சிவபாதவிருதயர் பாராயணம் செய்வது வழக்கம். ஒருமுறை, அவர், சம்பந்தரிடம், எல்லோரும் பலன்பெறும் வகையில், சிறிய வடிவில் தேவாரப் பாடல்களைக் கேட்டார். அவரது விருப்பப்படி சம்பந்தரும், திருவெழுக் கூற்றிருக்கையை இயற்றி அருளினார் என்பார்கள்.

அருணகிரிநாதர், ஸ்வாமிமலை முருகன் மீது ‘ஓருருவாகிய தாரகப் பிரமத்து’ எனத் தொடங்கும் ரத பந்தப் பாடலை எழுதியிருக்கிறார். இந்தத் திருஎழு கூற்றிருக்கைப் பாடலை சலவைக்கல்லில் பொறித்து, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலிலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் முருகன் திருவருட் சங்கத்தினர் பதித்துள்ளனர்.

‘எழு கூற்றிருக்கை’ என்பது பிரபந்த வகைகளில் ஒன்றாகும். இவ்வகை கவிகள் அநேகமாக இறைவனையும், இறை அருளையும் கருப்பொருளாக வைத்துப் பாடப்படுவதால் ‘திரு’ என்ற அடைமொழி சேர்த்து ‘திருஎழு கூற்றிருக்கை’ என்று சொல்வது மரபாயிற்று.

திருமங்கை ஆழ்வாரால் மகா விஷ்ணுவின் அவதாரப் பெருமையையும் விசிஷ்டாத்வைதத்தின் தத்துவத்தையும் விளக்கும் திருவெழு கூற்றிருக்கை 46 வரிகளில் எழுதப்பட்டிருக்கிறது. திருவிக்கிரம அவதாரமான வாமன அவதாரத்தின் சிறப்பைச் சொல்லும் வகையில், ‘ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தானை…’ எனத் தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் வரிகளைப் படிக்கும்போது, இந்த வரிகளுக்கு உரிய எண்களைக் கொடுத்து அடுக்கினால், நம் கண்முன்னால் பிரம்மாண்டமான 7 அடுக்குத் தேர் உருவெடுத்து நிற்பதை உணர முடியும்.

இப்படிப்பட்ட ரத பந்தம் முறையில் ஞான சம்பந்தப் பெருமான், அருணகிரிநாதர், திருமங்கை ஆழ்வார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற பலரும் பாடியுள்ளனர்.

ஒரு ரதம் அல்லது தேரின் முகப்பு குறுகி இருப்பதைப் போல், இந்த வகைப் பாடலின் கூற்றுகளும் (முதல் அடுக்கில் ஒரு கூற்று, இரண்டாவது அடுக்கில் 1-2-1 என்று விரியும். ஏழு அடுக்குக்குப் பிறகு கூற்றுகள் 6, 5 எனக் குறைந்து இறுதியில் ஒரு கூற்றில் முடியும்) அமையும். இந்த அமைப்பே ரத பந்தம் பாடல்களுக்கான அடிப்படை. ஆனால், இப்படிப்பட்ட பாடல்களைப் புனைவதற்கு அபரிமிதமான இசை ஞானமும் புலமையும் தேவை என்பதற்கு அரிதாகக் கிடைத்திருக்கும் சில பாடல்களே சாட்சி.

இங்கே இடம்பெற்றிருப்பது கரூர் சுவாமிநாதன் பாடி வெளியிட்டிருக்கும் காணொலி. பதிகங்களைப் பாடி வெளியிடும் அருளாளர் அவர். அடுத்த இணைப்பில் இருப்பது, திருமங்கை ஆழ்வார் அருளிய திருஎழு கூற்றிருக்கை.

https://www.youtube.com/watch?v=ZpgK-UR_gS4

https://www.youtube.com/watch?v=BcpTPeqNUAQ

உ.வே.சா எனும் சாகித்யகர்த்தா!

ஓலைச் சுவடிகளில் அடைபட்டிருந்த சங்க கால கவிதைகளைத் தேடித் தேடிச் சேகரித்து நூலாகப் பதிப்பித்தவர், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர். அண்மையில் அவரின் 168-வது பிறந்தநாளை, அரசு சார்ந்த அமைப்புகளும் தனியார் அமைப்புகளும் கொண்டாடி மகிழ்ந்தன. உ.வே.சா வெறுமே தொகுப்பாளர், பதிப்பாளர் மட்டும் அல்ல, மிகச் சிறந்த உரைநடையாளர், சாகித்யகர்த்தாவும்கூட!

அவரின் ‘உனை மறவாத ஒருவரம்’ பாடலையும் ‘உனை நம்பினேன் அய்யா’ பாடலையும் முறையே த்விஜாவந்தி, செஞ்சுருட்டி ராகங்களில் டி.எம்.கிருஷ்ணா தன்னுடைய மதுரமான குரலில் பாடி வெளியிட்டிருக்கும் காணொலி இது. முதல் பாடலின் இரண்டாவது வரியின் தொடக்கம் ‘உவந்தருள்’. இதை ‘வந்தருள்’ என்றே பாடியிருக்கிறார் கிருஷ்ணா. இதை பதச்சேதம் என்று கருத முடியாது. ‘உவந்து அருள்வதை’, ‘வந்து அருள்’ என்று ராகத்துக்குச் சேதாரம் இல்லாமல் பாடியிருக்கிறார் கிருஷ்ணா. பாடலின் அர்த்தமும் உணர்வும் தீர்க்கமாக கிருஷ்ணாவின் குரலில் மேலும் மெருகேறுகிறது.

தமிழ்த் தாத்தாவின் கானம் கேட்க: https://www.youtube.com/watch?v=Qte-nOFz4CQ

எமனுக்கு பயமளிக்கும் ராம ஜெபம்!

பரதநாட்டியத்தில் சங்க காலப் பாடல்களுக்கு எல்லாம்கூட அபிநயம் பிடித்து பரதநாட்டியம் ஆடும் கலைஞர்களிடம், தியாகராஜரின் கீர்த்தனைக்கு நாட்டியம் ஆடியிருக்கிறீர்களா என்று கேட்டால், ‘இல்லை’ என்பதே அவர்களின் பதிலாக இருக்கும். நடனத்துக்கேற்ப பாடும் முறை வேறு, வாய்ப்பாட்டுக்காகப் பாடும் முறை வேறு என்பதுதான் காரணம். நடனத்துக்கு சில வரிகளின் வார்த்தைகளை நீட்டி முழக்கி அபிநயத்தை முடிக்கும் அளவுக்குப் பாட வேண்டியிருக்கும். அப்படி தியாகராஜரின் கீர்த்தனைகளைப் பாடுவது சிரமம்.

இந்தக் காணொலியில் நடனக் கலைஞர் காவ்யா கணேஷ், தியாகராஜரின் ‘சின்டிஸ்துன்னடு யமுடு’ கீர்த்தனைக்கு இதமான அபிநயத்தை வழங்கியிருக்கிறார். “எல்லோருமே ராம நாமத்தை ஜபிக்கின்றனர். யாரையும் என்னால் பாசக்கயிறால் கட்டி அழைத்துச் செல்ல முடியவில்லையே... என்னுடைய பணியைச் செய்யவிடாமல் ராம நாமம் தடுக்கிறதே” என்று பூவுலகில் யமதர்மன் தவிக்கிறானாம். இதுதான் பாடலின் பொருள். ரசனையோடு அனுக்ரஹா லஷ்மணன் பாடியிருக்கும் விதமும், அதற்கு அனுசரணையாக ஆடுதுறை குருப்ரசாதின் மிருதங்கமும், ரம்யமான காவ்யாவின் நாட்டியமும் தியாகராஜரின் இந்தக் கீர்த்தனையையே ஒரு குறும்படம் பார்ப்பது போல் நம்மை வசீகரிக்கிறது.

இந்தக் காணொலிக்கு நீங்களும் வசீகரா ஆவீர்கள்!

https://www.youtube.com/watch?v=pHdPgsHJkL8

x