நிழற்சாலை


ஒரு பயணம்

கம்பிகளைப் பிடிக்காமல்

நடக்கும் குழந்தை

இறங்கும்வரை

முதுகில் துணிமூட்டையை

சுமக்க

பழகியிருக்கிறது


அடுத்தநாள்

பெட்ஷீட் விற்கும் டியூட்டிக்கு

இப்போதிருந்தே நிற்கத்

தொடங்கிவிட்டன

கால்கள்


பீடா கறைகளின் சிவப்பில்

கழிப்பறையின் அபாயத்தை

அறிவித்தபடி உறங்குகிறான்

கதவருகில் ஒருவன்


அரைகுறை பாஷையில்

‘நவுரு சாப்' என்பவனின் சொற்களை

கதவுகள் வழியே கடந்து செல்லும்

காற்றில் உதிர்த்தபடி

நள்ளிரவைக் கடக்கிறது

உலகை எழுப்பியபடி ஒரு ரயில்

ரயிலில் உறங்கியபடி

ஓர் உலகு.

-ந.சிவநேசன்

சிதைந்த சிறகுகள்

அப்பா சண்டை போடும்

நாட்களில்

அம்மா சொல்லும் கதைகளில்

வரும் தேவதைகள்

அழுதுகொண்டேயிருக்கிறார்கள்!

- மு.முபாரக்

கடந்து செல்லும் மரணம்

தீனமாக ஒலிக்கும்

பெண்களின் அழுகுரலைத் தாண்டி

இரவின் குளிரை விரட்ட

தேநீரில் கடக்கலாம் என்றான் ஒருவன்

மதுவில் மிதக்கலாம் என்றான் இன்னொருவன்

பதியின் திடீர் மரணத்தை

நம்ப இயலாதவளாய்

தலைவிரி கோலமாய்

நான்கு வயது

மகளை இறுக அணைத்துக்கொண்டிருந்த

அப்பெண் நேரம் அறியாதவளாய்

அருகில் அமர்ந்திருந்தாள்

யாவற்றையும் கேட்காத

அந்த மனிதன்

குளிரூட்டிய கண்ணாடிப் பேழையில்

ஒற்றை சாமந்தி மாலையோடு

அடுத்த நாள் இறுதி

ஊர்வலத்திற்கு சயனத்திலிருந்தான்

உறக்கத்திலிருந்து அப்பா அசைவாரா

எனக் காத்திருந்தாள் குழந்தை.

- பஞ்ச்தர்மா

வார்த்தைகள் மீது கிடக்கும் வண்ணத்துப்பூச்சி

இறந்து கிடக்கும் வண்ணத்துப்பூச்சியின்
அழகிய இறகுகளை
காற்று அங்குமிங்குமாகப் புரட்டி எடுக்கிறது
இறந்துவிட்ட காதலியை
இறுக அணைத்தழும் காதலனைப்போல

அந்தச் சாலையில்
ஓரமாக விளையாடும் மூன்று வயது சிறுமியையும்
பூங்கா நாற்காலியில்
தாடியை தடவிக்கொண்டிருக்கும்
ஒரு நைந்த கவிஞனையும் தவிர
வேறு யாருக்குமே தெரியாது
ஒரு வண்ணத்துப்பூச்சியொன்றின்
இறப்பு ஓர் துயரென்று

மலர்களிலிருந்து அப்பி
வந்த வண்ணங்களை
அந்திக்குக் குடுத்துவிட்டு
பறத்தலைப் பாதசாரிகளுக்கு
சொல்லிச்சொல்லி சோர்ந்து போகிறது
அதன் உடல்

வண்ணத்துப்பூச்சியின் மரணத்தில்
எந்த வாடையுமில்லை
ஒரு பூவின் வாடைகூட.

-சுரேஷ்சூர்யா

ஒற்றைக் கேள்வி

லிஃப்ட் கேட்டு பயணித்தவன்

நன்றி சொல்லவில்லை என்ற கோபத்தை

வீடுவரை

சுமந்து வந்தேன்

‘அவருக்கு என்ன அவசரமோ?’ என்ற

ஒற்றைக் கேள்வியில்

என்னுள் இன்னும்

கேள்விகளை நிரப்பினாள்

அடி பைப்பிலிருந்து

ஏழாவது குடத்தை

இறக்கிவைத்து

நெற்றி துடைத்த அம்மா.

- பொன். குமரேசன்

த்வனி

மின்சாரக் கம்பியில்

அசைவற்றுக் கிடக்கிறது

ஒரு காகம்

வழக்கம் போல் இல்லை

இப்போது

காக்கைகளின் கரைதல்.

- மகேஷ் சிபி

உணர்வு


கருத்தரிப்பு மையத்தின்

விளம்பரப் பலகையில்

எப்பொழுதும் புன்னகைக்கும்

குழந்தை

அழுகையைத்

தந்துகொண்டே இருக்கிறது

அவளுக்கு மட்டும்!

- ரகுநாத் வ

வரம்

வாங்கித் தர

மறுத்துவிட்ட

பொம்மைகளையெல்லாம்

வாங்கித் தந்த

ஒற்றை பலூனுக்குள் நிரப்பி

முடிந்துவிட்ட திருவிழாவை

கொண்டாடித் தீர்க்கிறது

குழந்தை.


- சாமி கிரிஷ்

x