மழையால் ஒரே அறையில் 7 வகுப்புகள்; அரசு பள்ளிக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர் @ புதுச்சேரி


புதுச்சேரி: கல்வி அமைச்சர் தொகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் ஒரே அறையில் 7 வகுப்புகள் இயங்கும் சூழலில் அந்த அறையிலும் மழைநீர் தேங்கி குழந்தைகள் பாதிக்கப்பட்டதால் அரசு தொடக்கப் பள்ளிக்கு கிராம மக்கள் பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் கல்வி அமைச்சர் நமச்சிவாயத்தின் தொகுதியான மண்ணாடிப்பட்டிலுள்ள தேத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 60 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த அனைத்து வகுப்புகளும் ஒரே வகுப்பறையில் இயங்குகின்றன. அத்துடன் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இதனிடையே புதுச்சேரி கிராமப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் வகுப்பறையில் தண்ணீர் தேங்கி இருந்தது. இதனால் பள்ளிக்கு வந்த குழந்தைகள் அமர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இன்று பள்ளிக்கு வந்த பெற்றோர் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக பெற்றோர் கூறுகையில், "அரசு தொடக்கப் பள்ளியில் 60 குழந்தைகள் படிக்கிறார்கள். வகுப்பறை வசதி இல்லை. ஒரே அறையில் தான் எல்லா குழந்தைகளும் படிக்கிறார்கள். இங்கு இரண்டு ஆசிரியர்கள்தான் உள்ளனர். கழிவறை வசதி இல்லை. எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை 7 வகுப்புகள் இருக்கிறது. பள்ளி வகுப்பறையில் தண்ணீர் ஒழுகுகிறது. கோடையில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இந்தக் கட்டடம் பழுதடைந்து உள்ளது. ஆசிரியர்கள் தேவை. கட்டடம் தேவை. கழிப்பறை தேவை. சிறிய குழந்தைகளை கையாள ஆயா தேவை.

இது கல்வியமைச்சரின் தொகுதி. கல்வித்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஊர் இளைஞர்கள் இப்பகுதியில் குழந்தைகள் படிக்க அவர்களாக முன்வந்து சமுதாயக் கூடத்தை சீரமைத்து பள்ளி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அமைச்சர் வந்து பார்த்து உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தொடர்வோம்" என்றனர். தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காட்டேரி குப்பம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் தற்காலிகமாக போராட்டம் கைவிடப்பட்டது.

x