கிலோ தக்காளி ரூ.2; சாலையில் கொட்டப்படும் வெண்டை


மதுரை ஒத்தக்கடையில் தக்காளி விற்பனை

திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி பொங்கல் திருநாள் வரையில், தக்காளி விலை கிலோ ரூ.100-க்கு மேல் போனதால், ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்தனர். ஆனால், அது அறுவடைக்கு வந்த நேரத்தில் தக்காளி விலை கடுமையாக சரிந்தது. கூடவே, அண்டை மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் அதிகமாக இருப்பதால், இங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதும் தடைபட்டது.

இதனால், மொத்த காய்கறிச் சந்தைகளில் விவசாயிகளிடம் இருந்து கிலோ 2 ரூபாய்க்கு மட்டுமே தக்காளி வாங்கப்படுகிறது. அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டுபோய் ஊர் ஊராக விற்கும் வியாபாரிகளும்கூட, ஒரு கிலோ தக்காளியை 10 முதல் 15 ரூபாய் வரையில் விற்று லாபம் பார்க்கிறார்கள். ஆனால், விவசாயிகளுக்கு பறிப்புக் கூலி அளவுக்குக்கூட வருவாய் இல்லாததால், தக்காளியை அறுவடை செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

உசிலம்பட்டியில்...

இதற்கிடையே, தற்போது வெண்டைக்காய் விலையும் வீழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சந்தையில் முதல் தரமான வெண்டைக்காயையே கிலோ 5 ரூபாய்க்கு மட்டுமே வாங்குகிறார்கள் மொத்த வியாபாரிகள். தன்னுடைய தோட்டத்தில் ஆள் சம்பளம் கொடுத்து வெண்டைக்காய் பறித்து, வாகனங்கள் மூலம் சந்தைக்கு கொண்டுவந்த விவசாயிகள் இதனால் விரக்தியடைந்தனர். சீமானூத்து கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனசேகரன், உசிலம்பட்டியில் நடு ரோட்டில் வெண்டைக்காயை கொட்டி, நல்லாயிருங்கய்யா என்று சாபம் விட்டுச் சென்றார்.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, “10 ஏக்கர் நிலத்தில் வெண்டை சாகுபடி செய்தேன். உழவு, விதை, நடவு, களையெடுப்பு, உரம், மருந்து என்று ஒரு லட்சத்துக்கு மேல் செலவு செய்துவிட்டேன். ஆனால், இதுவரையில் 10 ஆயிரம் ரூபாய் கூட வருமானம் எடுக்க முடியவில்லை. இனியும் வருமானம் வரும் என்று நம்பிக்கையில்லை” என்றார் வருத்தமாக.

x